எனது நிலாவை வரைபவன் புதினத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழமலயிடம் கொடுத்திருந்தேன். பிறகு அதனை மறந்தும் விட்டேன். பழமலையினுடைய இலக்கிய கோட்பாடுகளிலிருந்து விலகியவன் என்ற போதும் அவரது கவிதைகள் மீது எனக்கு மரியாதை உண்டு. பழமலய் தனது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிக்க தயங்காதவர். அதே வேளையில் முரண்களோடு தோழமை கொள்ளத் தெரிந்தவர். ஆச்சரியமாக புதினங்களை படிப்பதில் விருப்பம் காட்டாத அவர் நிலாவை வரைபவன் குறித்து சமீபத்தில் எனக்கு எழுதியிருந்தார். சிக்கலான அமைப்பில் எழுதப்பட்டிருந்த அப்புதினத்தை சரியாக அவர் விளங்கிக் கொள்ளாத போதிலும் கூட அது குறித்து அவர் எழுதிய பதிவு முக்கியமானது என்பதால் இங்கு அவ்வுரையாடலை அளிக்கிறேன்.
த. பழமலையின் விமர்சனம்
இப்படி ஒரு நூல் - புதினம் - வெளிவந்திருப்பதாக அறிந்தேன். கவிஞர் கரிகாலன் சிறுகதைகள் எழுதினார். அடுத்த கட்டமாக புதினமும் எழுதியுள்ளார். படிக்கக் கொடுக்கும்படி கவிஞரிடம் கேட்டிருந்தேன். 27.04.08 -இல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். படிக்க நேரம் கிடைத்து ஆர்வமும் தோன்றி 30.11.10 ல் படித்து முடித்தேன். இரண்டாவது நாள் படித்து முடித்துவிடுவது என்று இரவு ஒரு மணி வரை விழித்துப் படித்தேன். கரிகாலன் இந் நூலுக்கு என்னிடமிருந்து எந்த மதிப்புரையும் கேட்கவில்லை. எதிர்பார்க்காமல் கூட இருக்கலாம். மூன்றாண்டுகள் முடியப் போகிறது. அவர் இதனை மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போயிருக்கலாம். போகக்கூடியவர்.
நூலை படித்துக் கொண்டு வந்த போது எதிர்பாராத வகையில், பக்கம் 114 ல் பழமலையின் கசந்த மரம் கவிதை பற்றிய குறிப்பைப் படித்தேன். நானாக இருந்தால் இந்நூலை அன்பளிப்பாகத் தரும் போது இந்தப் பக்கத்தைக் குறிப்பிட்டுத் தந்திருப்பேன். கரிகாலனின் ஆளுமைப் பண்பு தனித்தன்மையானது!
எழுத்தாளர் சுஜாதாவை ஒருமுறை சென்னையில் அவர் வீட்டில் பார்த்த போது “ உங்கள் ஊர்தானே (விருத்தாசலம்) கவிஞர் கரிகாலன்!” என்று நலன் கேட்டார். சுஜாதா போன்றவர்களின் கவனிப்புக்கு ஆளானவர் கரிகாலன். அதாவது எதிர்கால நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்.
நான், கரிகாலனின் காணி ஊரான மருங்கூர் சென்றிருக்கிறேன். திருமுதுகுன்றத்தில் அவர் புதிதாகக் கட்டிக் குடியேறியுள்ள வீட்டிலும் ஓர் இரவு தங்கியிருக்கிறேன். கரிகாலன் ஓர் ஆசிரியர். கவிஞர் அவருடைய காதல் மனைவியாரும் ஓர் ஆசிரியை. புதின எழுத்தாளர். தனிக்குடும்பம். மூன்று குழந்தைகள்.
கரிகாலனின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. அவர் கைப்பணம் செலவழித்துச் சிற்றிதழ், இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடு, அண்மையில் விருது வழங்கல் எனச் செயல் ஊக்கம் உள்ளவர். பகுத்தறிவு, பொதுவுடைமை.. எனப் பயில்பவர்.
இடையில் ஏதோ ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு குடும்பப் பிரச்சினைக்கு ஆளாகி உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். அவரிடமே கலந்து பேச விரும்பினேன். நேராமல் போனது.
இந்தப் புதினத்தில் கரிகாலன் அதைத்தான் விவரித்துள்ளார். எனக்குப் புதினங்களில் அதிக பழக்கமில்லை. என்றாலும் இலக்கிய நடப்புகளின் தொடர்பில் இருப்பதால், எடுத்துரைப்பதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் சிறிதே அறிமுகம் உண்டு.
கரிகாலன் புதிய புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி எனத் தன் அறிவையும் ஆளுமையையும் விரிவு செய்துகொண்டிருப்பவர். பழைய பஞ்சாங்கமாகத் தேங்கிவிடாமல் உடன்கால உணர்வுடன் இயங்குபவர். இவையே இந்தப் புதினமாக உருவாகியுள்ளது.
இப்படைப்பின் தொழில்நுட்ப விதிகள் சற்றே சிக்கலானவை. துப்பறியும் புதினங்கள் ஒருவகை என்றால் இது ஒருவகை. இவற்றுள்ளும் வாசகரும் துப்பறிய வேண்டியவர் ஆகி விடுகிறார்!
கரிகாலன் குடும்பத்தை ஓரளவு நேரில் அறிந்தவன் என்கிற முறையில் இக்கண்பொத்தி விளையாட்டில் கலந்து கொள்வது எளிதாக இருந்தது. அல்லாத நிலையில் வாசகர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டவர்களாய்த் துழாவ வேண்டியது தான். பிறகு குருடன் பாலைக் கொக்காகப் புரிந்து கொள்ளும் கதைதான்!
இந்தப் பிடுங்கல்களுக்காகவே நண்பர் ஒருவர் நாவல்கள் படிப்பது இல்லை. வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பார். அவருக்கு எழுத்து உண்மை பேச வேண்டும். கதையெல்லாம் விடக்கூடாது!
புதினம், வரலாறு இல்லை. புனைவுகளைக் கொண்டது. இந்தப் பொய்மை - பொய் வேசம் போடுவது - ஒரு தேவைக்கானது. தேவை என்பது படிக்க வைப்பது. படிக்க வைப்பதிலும் உத்தி.
படைப்பில் உத்தி பிரிந்து வருபவர்களை இனம் கண்டு தேர்ந்தெடுப்பது படைபாளிகள் திறமை. இதுவும் ஒரு விளையாட்டுதான். அறிவு விளையாட்டு.
ஆசிரியர் நிறையவே ஆட்டம் காட்டுகிறார்.
அவர் விளையாடத் தெரிந்தவர். ஆட்டம் காட்டுகிறார்.
இப்புதினம் மரக்கட்டையாக இல்லாத, எரியும் கரியாக உள்ள ஒருவர் அடுத்தடுத்த தேடல்களிலும் தேர்வுகளிலும் எதிர்கொள்ளும் அவத்தைகளைப் படம்பிடிக்கிறது. “வருங்கால உலகத்தை” வாழ்நாளிலே வாழத்துணிபவர்கள் இரக்கத்திற்கு உரியவர்களே. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம்.
படித்தவர்கள் விவகாரத்தில் அடுத்தவர்கள் தலையிட முடியாது. நேர்மையான முயற்சிகள் கூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். அவர்களாகத்தான் முன்வர வேண்டும்.
ஒரு கட்டத்தில் உளவியல் மருத்துவர்களைப் பார்ப்பார்கள். யாவும் திரைமறைவு நாடகமாக இருக்கும். மூன்றாமவர்கள் தங்களுக்கு இடையில், சூசகம், அனுமானம்...எனத்தான் பேச வேண்டியிருக்கும்.
தாங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள் நடுவில் உடைமை உணர்வைப் போலவே விடுபடும் உணர்வும் இயல்பானதே, சிக்கலே இதுதான்!
புதினம் “இப்படி முடிகிறதே” என்றால், “வாழ்க்கை எப்படியும் முடிவது அல்லவா?” என்பதே விடையாக இருக்க முடியும். குறிப்பிட்ட இந்த குடும்ப பிரச்சினை - கணவன் இன்னொரு பெண்ணை விரும்புவது - மனதளவில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாறுவதில் முடிகிறது. அடக்கு அல்லது அடங்கு!
இறுதி வெற்றி, வீட்டை விட்டு வெளியேறிய மனைவி திரும்பி வருவதும், கணவன் வெளியேறுவதும், திரும்பி வராததுமா?
கரி்காலனின் அடுத்த புதினம் மனைவி வெளியேறுவதும், திரும்பி வராததுமாக இருக்கலாம். ஆணைப் பெண் துறப்பது, வீட்டை விட்டு வெளியேறுவது, இப்படியும் நடந்து வரவே செய்கின்றன.
இப்படி ஏன் இவர்கள் வெளியேறிக்கொண்டும், திரும்ப வந்து கொண்டும்? குடும்பம், பிள்ளைக்குட்டிகள் என இருப்பதால் தானே?
குடும்பமும் குழந்தைகளும் இல்லாத ஊர், உலகம் தான் எதிர்வரும் கால உலகம்.
பிறகு இவர்களுக்கு வாழ்க்கையும், உலகமும் என்னவாக இருக்கமுடியும்?
இவ்வாறான கேள்விகளுக்கு விடை இல்லை என்பதற்காக அல்ல, ஒரு விடையைத் தேடுவதற்காகத்தான் இப்புதினம்.
புதினப் பாடுபொருள் காதலா, குடும்பமா, பள்ளியா, குழந்தைகளா, சமூகமா, அரசியலா? யாவுமாக அலசப்படுவதால் எதுவுமாக எஞ்சவில்லை. யாவுமாகி நிற்பதாகச் சொல்லலாம்.
கவிஞர் புதினம் இயற்றுவதில் உள்ள குறையையும் நிறையையும் ஒரு சேர இப்புதினத்தில் காணலாம். குறை, கவிதை நடை, நிறையும் அதுவே தான்.
தகவல்களை எவ்வளவு தரலாம்? ஓரிடத்தில் உளவியல் பாடமே நடத்துகிறார்(பக். 139-140). அதைப் பாடத்தோடு தொடர்புபடுத்துவதுதான் ஆசிரியரின் திறமை. எப்படித் தரவேண்டும் என்பது தெரிந்தவர்.
மணிமுத்தாற்றங்கரை எழுத்தாளர்களுள் கரிகாலன் “மிகு புதுமை” எழுத்தாளர். “விருத்தாசலம் புதுமைப் பித்தன்”.
No comments:
Post a Comment