புத்தாயிரம் வழங்கிய கவிஞர்களில் வா.மணிகண்டனும் குறிப்பிடத் தகுந்தவர்.
சமகால இளைஞர்களின் மன ஒட்டங்களை அறிந்து கொள்வதற்கு இவரது
கவிதைகள் உதவுகின்றன. நேரடித் தன்மையுடையதைப் போன்று பாவிக்கும்
இவரது கவிதைகள் அதன் இயல்பான எளிமையை மீறியும் இளைஞர்களின்
சிக்கல் மிகுந்த அக உலகை குறியீடான சம்பவங்களின் வாயிலாகக் காட்டிச் செல்கின்றன.
இவரது “கண்ணாடியில் நகரும் வெயில்” தொகுப்பை கவிதை ஆர்வலர்கள் வாசிக்கலாம்.
ஏணிகளை வரிசையாகக் கட்டி
அருவி மீது ஏற முயன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமானவன் சொன்னான்.
உச்சியை அடையும் கணம்
விழத்துவங்கினேன்.
எப்படி
எலும்பு மிஞ்சியது என்றும்
இலை
சுழன்று
விழும்
தேவதச்சன் கவிதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.
இட்லி வாங்கி வரச் செல்வதாக
தாயுமானவன்
கிளம்பிச் சென்றான்.
===
ஓய்வெடுக்கும் கடவுள்
முடிந்த பகலின் எச்சங்கள்
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று மிச்சமிருக்கிறது.
குப்பியில் தீராமலிருக்கிறது கொஞ்சம் மது.
நீங்கள்இரவொன்றை கொண்டாடாமல் கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில் தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில் தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.
மழையின் உற்சாகம் கரைந்து கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.
நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.
ஒரு துப்பாக்கியின் பெயர்
கெளசிக்
துப்பாக்கி வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில் நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர் வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின் குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.
No comments:
Post a Comment