நாம் சென்றடைய வேண்டிய
எல்லா இடங்களுக்கும் முன்பாக
ஒரு மதுக்கடை இருந்து தொலைக்கிறது
இந்த நகரத்தில்
மருத்துவமனை
தேவாலயம்
அஞ்சலகம்
பள்ளிக்கூடம்
பேருந்து நிலையம்
யாவற்றை அடைவதற்கு முன்பும்
மதுவின் நெடி நம் பாதையின் உறுதியை
லேசாகக் குழப்புகிறது
முந்தைய நாள் மனைவிக்களித்த
சத்தியத்தின் நிறம் மங்கத் தொடங்குகிறது
குழந்தைகளுக்கான தேவைகள்
இலக்கை நோக்கி நகர்த்த
மதுக்குவளையிலிருந்து வெளியேறும்
உளறல்களும் சிரிப்பொலிகளும்
நம் வானம்
இன்னும் சிறிய இடைவெளியிலிருப்பதை
உணர்த்துகின்றன
ஆட்டோவிலிருந்து கொண்டு
ஓட்டுநரிடம் ஒரு முழுப்புட்டி
விஸ்கியை வாங்கி வரச்சொல்லும்
வேசியை கடவுள்தான் அனுப்பி வைத்திருப்பாரோ
இது ஒரு கலகக்கார அரசாகத்தான்
இருக்க வேண்டும்
பகலில் பொருந்த முடியாதவர்களையும்
இரவுக்கு தன்னை தயாரித்துக் கொள்கிறவர்களையும்
மது விடுதியிலிருந்து ஆற்றுப்படுத்துகிறது
இளங்குழந்தையின் மிருதுவாய்
நிர்வாண யுவதியின் குழைவாய்
மதுபாட்டில் உள்ளங்கையில் நெகிழும் போது
நிலவு இந்த நகரை முழுவதுமாக
கவ்விக் கொள்கிறது
முதல் மிடறுக்கு
மருத்துவமனை அல்லது ஆலயத்தை
இரண்டாம் மிடறுக்கு
மனைவியின் சத்தியத்தை
மூன்றாம் மிடறுக்கு
குழந்தைகளின் தேவைகளை
மறக்க வைக்கும் புண்ணிய நதியில்
மூழ்கி எழும் போது
இறைவனுக்கும் மருத்துவனுக்கும்
ஏது இடம்
நினைவின் அழியாத ஒரு புள்ளியிலிருந்து
நிலவின் இழையைப் பற்றிக் கொள்கிறோம்
படுக்கையிலிருந்து எழும் போது
நேற்றைய முன்னிரவுக்கும்
இவ்விளங்காலைக்கும்
இடையே காலம் வெறும் கருப்புத் துண்டாய்
நழுவிப் போயிருக்கிறது
குளிர்ந்த தண்ணீரைத்
தலையில் ஊற்றிக்கொள்ள
புத்தனாய் விளங்க உறுதியேற்கிறோம்
இப்போது பகல் அதன் வாயிலைத் திறந்து
நம்மை உள்ளே அனுமதிக்கிறது.
No comments:
Post a Comment