Tuesday, August 5, 2014

நாகா புராணம் - கரிகாலன்

அத்தியாயம் 1

பனிக்கொட்டிய​ குளிர் இரவொன்றின் கனவில் நீ வந்தாய் அதியன்.அந்தக் கனவில் உனக்கு அதியன் என்றுதான் பெயர்.வெகு நாளாகச் சந்திக்க​ விரும்பியவன் நீதான் என்பதை அவ்வுறக்கத்திலேயே உணர்ந்துகொள்ள​ முடிந்தது.

உன்னுடன் ஒரு கருப்பு நாய்க்குட்டியும்கூட​ வந்ததல்லவா.நீ அதை ஃபெலீஷியா என​ அழைத்ததாய் ஞாபகம்.பொதுவாக​ டாபர்மேன் வகை நாய்கள் ஆக்ரோஷமானவை.ஆனால் அதுவோ உன்னிடம் குழைந்துகொண்டிருந்தது.அதன் பார்வையில் உன் மீதான​ காதல் எரிந்து கொண்டிருந்தது.எத்தனை விழிகளில் விளக்கெரியச் செய்திருக்கிறாய்.

அப்போது எனக்குத் தர​ உன்னிடம் ஒன்றுமேயில்லை.அது அகாலம்.எங்கும் நீர்மை.கொஞ்சம் நீலம்,கொஞ்சம் பச்சையான​ உலகம்.அதியன் வெற்று வெளியில் நீ கை விரித்தாய்.தாமரை மலரொன்று உன் உள்ளங்கையில் விழுந்தது.ஒரு மின்னல் அம்மலரைத் தீண்டிச் சென்றது.விண்ணில் 'நாகா'  அசரீரி ஒலித்தது.

உன் நாகா நான்..என் கனவு நீ..
தொடங்கட்டுமுன் 'நாகா புராணம்'

அத்தியாயம் 2

எவ்வளவு தூரம் கடந்து இந்த நாவல் காட்டிற்கு வந்திருக்கிறேன். எனக்காகவென்றால் நிச்சயம் வந்திருக்க மாட்டேன். புளிய மரத்தடியில் பருத்த பிருஷ்டங்களோடும் தடித்த உதடுகளோடும் மத்திய வயதுடையவள் விற்றுக்கொண்டிருக்கிறாள் அல்லவா அவளிடம் வாங்கியிருப்பேன்.

ஆனால் கேட்டது நாகா அல்லவா அவளுக்காக ஏழு மலைகள் ஏழு கடல்கள் தாண்டியிருக்கிறேன். விஷ ஜந்துக்களும், ஆபத்து தரும் விலங்குகளும் நிறைந்த இவ்வனத்தில் நாகாவின் பொருட்டு அலைவதில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

அவளுக்கு அனோலாக்ஸியா இருக்க வேண்டும். சாப்பிடுவதென்றால் என்னவென்றே அவளுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவள் ஒரு கிராமத்து சிறுமியின் அழுக்குக் கரங்களால் நாவல் கனி ஒன்றை வாங்கி சுவைத்தாள். அதன் சுவை அவளை குதூகலப்படுத்தியது. கண்கள் பிரகாசித்தன. “ Hey.. my life is like a unfinished painting" உற்சாகம் குறையாமல் முணுமுணுத்தாள். “என்னப்பா கவிதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட” “ நோ.. நோ.. இது காகாவோட வார்த்தைகள்

நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா, நாகா, காகா,

நாகவுக்கு லேடி காகாவென்றால் உயிர்.  என்ரிக் இக்லீஷியஸ், எமினம் ஏகான் மைலிசிரஸ், ப்ரூனோ மார்ஸ், டெமி லொவேட்டா, ரிஹானா, கேட்டி பெரி, அடீல் என எல்லோரையும் கேட்பாள் ஆனால் காகா மேல் மட்டும் வெறி. அவள் போட்டிருக்கும் நெயில் பாலிஷூக்காக  மால்கள் தோறும் அலைவாள்.

நாகா ஒரு வல்லூறு. திடீரென்று பறந்து மறைந்துவிடுவாள். நெடுநாட்கள் பார்க்க முடியாது பழைய அலகுகள், பழைய நகங்கள், பழைய சிறகுகள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு புதிதாய் வருவாள். புதிதாய் வாழத்தெரிந்தவள் நாகா. அவளுடைய திங்கட்கிழமையில் தவறியும் ஞாயிறின் சாயல் இருக்காது. ஆனால் ஏனோ காகாவின் வரிகளை மட்டும் முணுமுணுக்காமல் அவளால் இருக்க முடிந்ததே இல்லை. கேட்டால் நாகா வேறு காகா வேறில்லை என்பாள். காகாவின் தோழன் ஒரு பப்பில் அவளோடு சண்டைபோட்டுக்கொண்டு பாதியிலேயே எழுந்து போய்விட்டான். இது அவள் பிரபலமாகும் முன்பு. இன்று அவனால் எந்த பப்பிலும் காகாவின் பாடலை கேட்காமல் இருக்க முடியாது இல்லையா? என்பாள்.

I,'m gonna be a star
you know why
because I have nothing
left to lose...

நீயும் ஒரு நட்சத்திரம் தான் ஆனால் என்னைவிட்டு உயரே உயரே போய்க்கொண்டிருக்கிறாய்.

I'm a warrior queen live passionately tonight

காகாவின் பிரசித்திபெற்ற Marry the night- ஐ தான் அடிக்கடி ஹம் பண்ணுவாள். நாகா காகா எவ்வளவு பொருத்தம்.

நாகாவோடு இருக்கும் பகலில் புதினா மணம் மிதக்கும். நாகவோடு கழிக்கும் இரவில் மழைநீர் வழிந்தோடும் மண்ணின் வாசனை மணக்கும்.

என்னுடைய நாகாவுக்காக நான் நின்றுகொண்டிருக்கும் இந்த நாவல்காடு புண்ணியத்தலம். அவள் உமிழ்நீர் பட்ட இடத்தில் பசுமை பூக்கும். அவள் கண் மூடும் வேளையில் தான் பூமியில் இரவு கழிகிறது. அவள் எப்போது எதைக்கேட்பாள்? எப்போது எங்கு அழைப்பாள்? எப்போது எப்படி திட்டுவாள்? எப்போது முத்தமிடுவாள்? என்று எதையும் அனுமானிக்க முடியாது.

நாகாவிடம் தோற்கப்பிறந்தவன் நான். திடீரென்று பாவ்லோ கொய்லோவின் ஆல்கமிஸ்ட் கேட்பாள், வின்டர்ஸ் சொனாட்டா கொரியன் சீரியல் கேட்பாள். அவள்தான் என்னை தேட வைத்தவள்.

தேடிக்கொண்டிருக்கிறேன் என் நாகாவை.

(புராணம் வளரும்)

Wednesday, July 30, 2014

ஆற்றுப்ப​டை – 2

மக​னே,
ஐன்ஸ்டினின் மீன் நீ
உன்​னை மர​மேறச்​சொல்லி
மதிப்பிடும் உலகில்
​கைவிட்டுச்​செல்வதற்கு என்​னை மன்னிப்பாயா

உன் கனவுக்கு எதிர்தி​சையில்
பா​லை​யென விரிந்துகிடக்கிறது உன் நிலம்
கனிக​ளே இல்லாத அவ்விடத்திலிருந்து
​வெளி​யேறிக்​கொண்டிருக்கின்றன பற​வைகள்

ஹார்​மோன் கு​றைபாடு​டைய ​மெஸ்ஸியின் அணி ​​​தோற்ற​போது
நீ சிந்திய கண்ணீ​ரைப்​போன்​றே
உகுக்க இவ்வுலகம் உனக்கு
நி​​றைய சந்தர்ப்பங்க​ளை உருவாக்கித்தரும்
கலங்கா​தே மக​னே
பெட்​ரோலும் மின்சாரமும் இல்லாத
தாம​ரைக்குளம் கூடிய
​தெய்வத்தின் காவல் ​பொருந்திய
கிராம​மொன்றிற்கு அடிக்கடி நீ வழி​கேட்பா​யே
என் சிறு மக​​னே
உ​னை விட்டு விலகும் இக்கணம் ​கொடிது
கோயில் படிக்கட்டுகளில் பிச்​சை​யெடுக்கும் மூதாட்டிகளும்
​பொலிவிழந்த ​வ​யோதிகத்தில் பூ விற்கும் பாலியல் ​தொழிலாளிகள் நி​றைந்த
சபிக்கப்பட்ட இந்நகரில் ஒரு ​பென்சில் நதி​யை உருவாக்கி
குளிக்கத்​தெரிந்தவன்​தா​னே நீ
அதனால்தான் உ​னை விட்டு விலகுகி​றேன்
என் அரு​மை மக​னே
பற​வைக​ளோடு பழகிக்கழித்த நீ
ஒரு விடியற்கா​லையில் எழுப்பி
மு​ளைத்திருந்த உன் சிறகுக​ளை காட்டினாயல்லவா
அ​தை பழக்க ​தோஷத்தில்
உன் ஆசிரியர்களில் யா​ரேனும் ஒருவன்
​வெட்டி விடக்கூடா​தே​யென்றுதான்
பதறி விலகுகி​றேன் மக​னே
சோம்​பேறித்தனத்தால் வளர்ந்த என் ​தொப்​பை​யை
நீ ப​ரிகசிப்பா​யே
‘ ஃப்ளாப்​ ரைட்டர்  ‘ விமர்சிப்பா​யே
இ​ம்மனதை நீ இழந்துவிடக்கூடா​தென​வே
விலகிச்​செல்கி​றேன் மக​னே

35 ஆயிரம் மில்லியன் டாலர் ​கோல் அடித்த மரி​யோ ​கோட்சி​யையும்
உன்​னோடு கால்பந்து பழகும் ஹரிபிரசாத்​தையும்
​நேர்க்​கோட்டில் ​வைத்துப்பார்க்கும் உனக்கு
தந்​தையின் நிழல் ​தே​வையில்​​லை

இந்த ​தேசத்தின் சாக்க​டை நீ​ரை உறிஞ்சி
வளர்ந்ததிந்த நிழல்

பறக்கும் ஷூக்க​ளை அணியும் இளவரசி​கள்
உனது கனவிலிருந்து காணாமல் ​போகும் ​வே​ளையில்
முகம் ​தெரியாத ​வெள்​ளை முதலாளி ஒருவனுக்கு
​மென்​பொருள் எழுதப்​பெறவில்​லை உன்​னை
அறிந்தவன் நீ என்பதால்
உன் பா​தையில் தந்​தை​மையின்
இடரகற்றி ​விலகுகி​றேன் மக​னே




ஆற்றுப்ப​டை – 1

கவிஞ​னே
இத்​தேசத்​தை விட்டு ​​வெளி​யேற
இதுதான் சரியான தருணம்

துப்பாக்கிக​ளைக் கவிஞர்களுக்​கெதிராக
பிர​யோகிக்கும் கரு​ணையற்றவர்களல்லர் நாங்கள்
​வேற்று​தேசத்திற்கான கடவுச்சீட்​டை
இலவசமாகத் தறுமளவிற்கு பரந்த மனம் ​கொண்டவர்கள்

இது 56 அங்குல அகலம் ​கொண்ட
மார்பு​டையவர்களுக்குச் ​சொந்தமானது
​மேலும், ​தேச​மோ மார்​போ
எங்களுக்கு அகன்றிருக்க ​வேண்டும்
இத்​தேசத்​தை ​மைக்ரான் வினாடிகளில்
முன்​னேற்றும் பணிக்கு உங்கள் சின்னஞ்சிறு கனவுகள்
இ​டையூறாயிருக்கின்றன
 ​
காடுகளில் பு​தையுண்டுகிடக்கும் கிழங்குக​ளை மட்டு​மே
காணும் அளவிற்கு புராதனமானது உங்களது கண்கள்
அதற்கும் கீழ் குடி​கொண்டிருக்கும் டாலர் கடவு​ளை
ஏ​னோ உங்களால் தரிசிக்க முடிவதில்​லை

இரு​ளைத்தின்னும் உ​​லைக​ளைக்கூட
​நெருப்பு மிருகங்களாய்த்தான் பார்க்கிறீர்கள்

ஏழும​லை ஏழுகடல் தாண்டி விண்ணும் மண்ணும்
சங்கமிக்கும் புள்ளி​யை அ​டையும்
கடவுச்சீட்டு சட்​டைப்​பையில் கனத்துக்​கொண்டிருக்கிறது
தேச வளர்ச்சிக்கு ம​னைவி​யையும் காவு​கொடுப்பவர்கள்

கண்ணீர்.. ரத்தம்.. அறங்கள்..
இந்த அழுகுணி ஆட்டத்​தை நீங்க​ளேன்
துருவத்தின் பனிக்கா​டொன்றில் வி​ளையாடக்கூடாது
புரிந்து​கொள்ளுங்கள்
நி​றைய ​வே​லைகளிருக்கிறது

பு​ரை​யோடிய நீதி​தேவ​தையின் கண்களில்
சற்றுமுன்புதான் ​லென்ஸ் ​பொருத்தியிருக்கி​றோம்
காவி ஒளியில் ​தேசத்தின் புதிய வரலாற்​றை
அவள் வாசிக்கத்​தொடங்கியிருக்கிறாள்

என்னதானிருந்தாலும் பாரத ​தேசத்தின்
பத்தினி மரபில் வந்தவளல்லவா அவள்
ராமராஜ்யத்திற்கு ராவணவதங்களின் நியாயத்​தை
அவளுக்குப் புரிய ​​வைத்திருக்கி​றோம்

சூர்ப்பந​கையின் ச​கோதரர்களான நீங்க​ளோ
இன்னும் அறுபட்ட மூக்கிற்கான
நியாயத்​தை எதிர்பார்த்து நிற்கிறீர்கள்

வரலாற்றுக்கும் நிகழ்வுக்குமி​டை​யே
துருத்திக்​கொண்டிருக்கும் முரண்க​ளை
இடித்தும் எழுப்பியும் பின்நவீனத்துவப்பணியில்
உங்க​ளைவிடவும் முன்​செல்கி​றோம்

குருதி மணக்காத ​தெருக்களில் காதல் ​செய்யவும்
ஆயுதங்கள் ​மெளனித்த நகரங்களில்
​கேளிக்​கைக​ளைத் ​தொடரவும்
அணுக்கழிவுகளில்லாத கடல்களில்
படகுக​னை மிதக்கவிடவும்
குழந்​தைகளின் சடலங்கள் ஒதுங்காத நதிக​ரைகளில்
நாகரீகம் வளரவும்
இந்த பூமியிலிருந்து ​வெகுதூரம்
நீங்கள் விலகிச்​செல்லும் கடவுச்சீட்டு
இன்னும் கனத்துக்​கொண்டிருக்கிறது

கவிஞ​னே
இத்​தேசத்​தை விட்டு ​​வெளி​யேற
இதுதான் சரியான தருணம்.!

Friday, June 6, 2014

விடுதலைக்கான கவிதைச் சமர்



கற்பனை வளமும் படைப்பு மனமும் இல்லாமல் இருந்தால் இவ்வுலகில் நாம் எவ்வாறு வாழ்ந்திருப்போம். நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அன்பு வற்றிப் போன காலத்தில் வெறுமையை துரத்தி வாழும் அவலத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் முதன்மையானது கவிதை எழுதுவதும், கவிதை வாசிப்பதும். கோடையைக் கடக்க வேம்பொன்றின் நிழலே போதும் என திருப்தி அடையும் கதிர் பாரதியையும் இந்தப் படைப்பு மனம் தான் காப்பாற்றுகிறது. 

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பு வழியாக கதிர் பாரதி எதை விழைகிறார். பாரதி அன்று தன் கவிதைகளின் மூலமாக எதைக் கனவு கண்டான். கவிஞர்கள் தங்களின் அனுபவங்களின் வழியாக, தங்களது மொழி ஆளுமையின் வழியாக வெளிப்படுத்த விரும்புவதுதான் என்ன? வன்முறையற்ற, கருணை நிறைந்த உலகுதான் படைப்பாளியின் நித்திய கனவாக இருந்து வந்திருக்கிறது. கவிஞன் தன் படைப்பில் உருவாக்கும் உலகு நாம் வாழும் எதார்த்த உலகிலிருந்து கொஞ்சம் தொலைவில் தான் இருக்கிறது. இதனால்தான் கவிஞனை லௌகீகவாதிகள் பிழைப்புக்கு உதவாதவனாக, பகல் கனவு காண்பவனாக கருதுகின்றனர். லௌகீகவாதிகளுக்கு மொழி ஒரு தொடர்பு சாதனம். கவிஞனுக்கோ அது உலகம். சொற்களால் அவன் கட்டியெழுப்பும் உலகு, தொடுவதற்கு சற்றுத் தொலைவில் இருந்தாலும் சாமான்யனும் விரும்பக்கூடிய  உலகாக அது இருக்கிறது. 

இந்தக் கவிதைகள் கதிர்பாரதியை ஒரு விவசாயக் குடும்பத்தின் விளைச்சலாகக் காட்டுகிறது. 

"நல்லேர் பூட்டி தானியங்களைத் தூவிவிட்டு
அடுத்த வெள்ளாமைக்கு விதைநெல் பிரிக்கும்
நல்சகுனங்கள் நிரம்பிய இக்கோடையில்
நிகழாதிருக்கலாம் உன்  பிரிவு

இத்தகு வரிகள் ஒரு விவசாய மனதின் விளைவாகத்தான் இருக்க முடியும். காதலின் மகிழ்ச்சியை, வலியை நிலம் சார்ந்தும் பருவங்கள் சார்ந்தும் கூறுவது நமது சங்கத்தமிழின் தொடர்ச்சியாக இருக்கிறது. காதலனுக்காக காத்திருப்பது, காதலனைப் பிரிவது யாவும் சங்க இலக்கியங்களில் திணை ஒழுக்கம் சார்ந்தது. அந்த திணை வழித் தொடர்ச்சியாக நவீன தொனியில் கவி சொல்லத் தெரிந்திருக்கிறது பாரதிக்கு. 

கதிர்பாரதியின் கவிதைகள் முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனத்தை குவிக்கின்றன. இயற்கை, பெண்கள், குழந்தைகள் இவற்றை குறித்த வலிமையான கவிதைகள் இத்தொகுப்பில் விரவிக்கிடக்கின்றன. இவை மூன்றும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இயற்கை, பெண் இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. படைக்கும் ஆற்றல் படைத்தவை. சக்தியின் பிறப்பிடங்கள். இவற்றைப் பாட பிரபஞ்சப் பார்வை சித்தித்திருக்கவேண்டும். இங்கு சித்தித்தலை மதச்சொல்லாடலாக அர்த்தம் கொள்ளாமல் சித்தர்களின் ஒளியில் பொருள் கொள்ள வேண்டும்.வெட்டவெளிதனை மெய்யெனக்கொண்ட பார்வையைத்தான் பிரபஞ்சப் பார்வையாகக் கருதப்படவேண்டும். "ஆழித்துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே" என விடுபட்ட மனநிலையிலிருந்து இக்கவிதைகளை கதிர்பாரதியால் இவ்விளைய வயதில் படைக்கமுடிந்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. 

வீட்டை எட்டிப் பார்த்தல் எனும் கவிதை  ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களின் கண்ணீர் கிணற்றை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தாய்வழிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண் அடையாளம் காட்டியவன்தான் தந்தை. அத்தகு இடத்தை ஆணின் ஆதிக்க மனம் தட்டிப்பறித்தது. அவளது கனவு வெளி சுருங்கிப்போனது. நமது பண்பாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய நல்ல பெண்ணுக்கான மதிப்பீடுகள் இந்தக் கண்ணீர் கிணற்றை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் கண்ணீர் மிகவும் ஆபத்தானது. சீதை, பாஞ்சாலி தொடங்கி யசோதா பென் வரை இந்த வலி தொடர்கிறது. கதிர் பாரதியின் இந்த கவிதை பெண்ணிய வெளிச்சத்தில் வைத்து விரிவாக உரையாடுவதற்கான திறப்புகளை கொண்டிருக்கிறது. ஒரு கவிதையை எழுதி முடித்த பிறகு அது வாசகனின் கவிதையாக வேண்டும். அப்போதுதான் அதை ஒரு வெற்றிகரமான படைப்பாகக் கருத முடியும். தன்னுடைய அறிவுச் சேகரத்தை கலை தாகத்தை வாசகன் தனது கவிதையில் செலுத்த எந்த கவிஞன் அனுமதிக்கிறானோ அவனால்தான் காலத்தை ஊடுருவி உயிர் வாழ முடியும்.

விட்டு விலகத் தெரிந்தவன் கவிஞன். மைய நீரோட்ட வாழ்விலிருந்து விலகி தன்னை உதிரியாக கருதுகிற மனதில்தான் கவிதை கருக்கொள்கிறது. "ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்" எனும் கவிதை உதிரி ஒருவனின் கதை. கதை கவிதையாக முடியுமா? எனக் கேட்கலாம். இது தொடக்கமும் முடிவுமில்லாக் கதை. கதைக்கும் கவிதைக்குமான எல்லைக்கோடு அழியும் நிலையிலிருந்து உருவாகும் ஒரு புதுவிதக் கவிதை எனவும் கொள்ளலாம். குடும்பத்திலிருந்தும், மைய நீரோட்ட மதிப்பீடுகளிலிருந்தும் விரட்டப்படுபவர்கள் செல்லக்கூடிய இடங்கள் சிறைச்சாலைகள், பேருந்து நிலையங்கள், கோயில் வாசற்படிகள் என நிறைய இருக்கிறது. இப்போது பரோட்டா மாஸ்டர்கள் பெரும்பாலும் இப்படி விரட்டப்பட்டவர்கள் தான். 

" பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தோல்வி 
  கூடுதல் தகுதி என்கிறது சாதா பரோட்டா
  பக்கத்து வீட்டு சுமார் அழகிக்கு லவ் லெட்டர் எழுதி
  அவள் அண்ணனிடம் குத்துப்பட்டிருப்பவனுக்கு முன்னுரிமை
  அவன் கனவில் பரோட்டா வட்ட வட்டப் பௌர்ணமியாக
  வலம் வந்திருக்க வேண்டும்" 
என ஒருவன் பரோட்டா மாஸ்டர் ஆவதற்கான சாத்தியங்களை கற்பனையில் விரித்திருக்கும் இந்தக் கவிதை நம் சமகால தமிழ் வாழ்வின் புதிய முகத்தை அவதானிக்கிறது. தமிழின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக இதைக் கூறமுடியும்

அன்பு செலுத்துவதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லாத நிலையை வெளிப்படுத்தும் கவிதையாக "யானையோடு நேசம் கொள்ளும் முறை" திகழ்கிறது. யானையை அன்பு செய்யும் பிரம்மாண்டம் ஒரு அற்புத உண்மை. யானையின் ஆசிர்வாதத்தை மலிவாக்கியிருக்கும் பாகன்களிடமிருந்து விலகி யானையை ஒரு குழந்தைக் கண்கொண்டு பார்க்கிறது இந்த கவிதை. குழந்தையின் கண்கள் இறைவனுக்குரியவை.

நமது திரைப்படங்கள், நமது கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் குழந்தைமையை நீக்கம் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மர அட்டையை ரயில் வண்டியாக கற்பனை செய்யும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வரும் போது புகைவண்டியை ஊர்ந்து செல்லும் பூச்சியாகப் பார்க்கிறார்கள். கற்பனை வளம் நிறைந்த கதைகள் வளர்க்கும் குழந்தைகளை வெறும் ஹோம் ஒர்க் செய்யும் ரோபோக்களாக நமது பள்ளிகள் மாற்றி வைத்திருப்பது பரிதாபத்திற்குரியது. இவை குறித்து தனது கவிதைகளில் நிறைய இடங்களில் கதிர்பாரதி அக்கறை செலுத்துகிறார். 

கதிர்பாரதியின் கவிதை மொழிதலில் புதுமை காட்டும் ஆர்வம் அதிகம் தென்படுகிறது. கவிதை மிகுந்த நுட்பமான கலை வடிவம். மறைபொருள் மிக்கது. விரித்துப் பார்க்கத் தகுந்தது. கவிச்சூத்திரம் தெரிந்தவராக இத்தொகுப்பு இவரைக் காட்டுகிறது. உப்புச் செடிகள் என்பது போல பல புதிய படிமங்களை தமிழுக்கு இத்தொகுப்பு அளித்துள்ளது. இளம் வயதில் நம்பிக்கை அளிப்பவராக கவிமொழியின் வீரியமுடையவராக கதிர்பாரதி திகழ்கிறார். விடுதலைக்கான அவருடைய கவிதைச் சமர் என இத்தொகுப்பை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம். விடுதலையின் கதவை திறக்க விரும்புபவர்கள் இப்புத்தகத்தின் பக்கங்களின் மூலமாகத் திறக்கலாம். 

- கரிகாலன்


Friday, May 23, 2014

                         பெத்தவன் – விடுதலைக்கான மூன்றாம் அரங்கு.    
                                                                  கரிகாலன்.

நமது நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் ஆணாதிக்க சமூகம் அதன் நலன்களுக்கு உகந்த வகையில் உருவாக்கிய மதிப்பீடுகள் எவ்வாறு விடுதலைக்கு எதிராகவும், அதை உருவாக்கியவர்களின் நிம்மதிக்கு எதிராகவும் திகழ்கிறது என்பதை கலைத்தன்மையோடு விவரித்த முக்கியமான படைப்பு இமையத்தின் பெத்தவன் நெடுங்கதை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான சிறுகதைகளுள் தமிழ் சமூகத்தின் சாதிய விழுமியங்களை விளங்கிக்கொள்ள உதவக்கூடிய முக்கியமான படைப்பாக பெத்தவன் நெடுங்கதை திகழ்கிறது.
நிலப்பிரபுத்துவ அமைப்பு உடைந்து உலகமயமாக்கல் முழு வளர்ச்சி பெற்றிருக்கிற இன்றைய சூழலிலும் நமது கிராமங்களில் இன்னும் உடையாத சாதிய கட்டுமானங்கள், சாதிய பெருமைகளை காப்பாற்றுவதன் பெயரில் உருவாகியிருக்கும அரசியல், நகரமயமாக்கல் தலித்துக்களுக்கு அளித்திருக்கும் வேலை வாய்ப்புகள், அதன் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உருவாகியிருக்கும் நம்பிக்கை, அத்தகைய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவர்கள்மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, சாதிக் கட்டுமானங்களை பாதுகாக்கும அகமணமுறையை தொந்தரவு செய்யும் காதல் நிகழ்வுகள், சாதிய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கிராமங்களில் நடைபெறும் சாதிப் பஞ்சாயத்துக்கள், ஊர்க் கட்டுப்பாடா, பிள்ளைகளின் விருப்பமா? எனத் தடுமாறும் பெற்றோர்கள். இவ்வாறு ஊடுபாவாக பல்வேறு இழைகளால் நெய்யப்பட்டிருக்கும் காத்திரமான படைப்புதான் பெத்தவன்.
பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய பெத்தவனை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளி மாணவர்கள் நாடகமாக அரங்கேற்றினர். இந்நாடகம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மூன்றாம் அறங்கொன்றின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது நாடகம். அரங்கிற்கும், பார்வையாளர்களுக்கும் இடைவெளியின்றி ஒரு சமூக அவலம் நம் கண்முன்னால் நிகழும்போது ஏற்படும் பதற்றத்தை, துக்கத்தை, கோபத்தை உருவாக்கியது இந்நாடகம். திடீரென்று பிரவேசித்த நாயும் ஏற்கனவே அவ்விடத்தில் இருந்த ஒரு ஓட்டு வீடும் மாமரங்களும் ஒரு கிராம பின்னணிக்கு நெருக்கம் ஏற்படுத்துவதாக இருந்தது.
பெத்தவன் நெடுங்கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். வண்டிக்காரன் வீட்டு பழனி ஆதிக்கச் சாதி ஒன்றைச் சார்ந்தவன். அவனுடைய மகள் பாக்கியம் அதே ஊரைச் சேர்ந்த தலித் இளைஞனை காதலிக்கிறாள். அவன் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவன். இவர்களுடைய காதலால் தங்கள் சாதி மானம், கொளரவம் போவதாக பழனியின் சாதியைச் சார்ந்த இளைஞர்கள் கருதுகின்றனர். “தங்களிடம் இல்லாத எதை அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்காரனிடம் கண்டாய்?“ எனக் கொச்சையாக பாக்கியத்தைத் திட்டி அடித்து அவளது மயிரை அறுத்து விடுகின்றனர். காதல் தொடர்வதால் சாதித் தலைவரை அழைத்துவந்து பஞ்சாயத்து வைக்கின்றனர். பஞ்சாயத்தில் பாக்கியத்தை விஷம் வைத்து கொன்றுவிடுமாறு அவளது தந்தை பழனியிடம் தனது தீர்ப்பாக சாதித்தலைவர் கூறுகிறார்.
பழனியின் குடும்பம் நிம்மதி இழந்து தவிக்கிறது. பெற்ற மகளை கொல்லும் தீவினை காலகாலத்திற்கும் நமது குடும்பத்தைச் சூழும் என்கிறாள் பழனியின் தாய். பழனி தனது மகள் பாக்கியத்தை ஊருக்குத் தெரியாமல் இரவோடு இரவாக அவளது காதலனிடம் சென்றுவிடுமாறு சென்னைக்கு அனுப்பிவிடுகிறான். பிறகு ஊருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டதால் ஏற்படும் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொள்கிறான். கதை நிறைவடைகிறது.
இக்கதை வெளியான சில தினங்களில் தர்மபுரி நாயக்கன்கொட்டாய் சம்பவம் நடைபெற்று தமிழகத்தை திகைப்பில் ஆழ்த்துகிறது. இக்கதைக்கும் தர்மபுரி சம்பவத்திற்கும் இடையே உள்ள நெருக்கம் ஒரு கலைஞனின் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமாக இருக்கிறது. இக்கதையின் நிகழ்வுகள் மீண்டும்மீண்டும் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்வது நமக்கு வலியைத் தருகின்றது.
பழனிக்கும் அவன் மகள் காதலிக்கும் தலித் இளைஞன் குடும்பத்திற்கும் பெரிய அளவில் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ வேறுபாடு இல்லை. இக்காதலுக்குத் தடையாக இருப்பது சாதி மட்டும்தான். பழனியே தன் மகளை நல்ல வேலையிலிருக்கும் அந்த இளைஞனுக்கு தர விரும்பினாலும் சாதி கௌரவம், சாதி பஞ்சாயத்து போன்றவை அவனது விருப்பத்திற்கு மாறாக தவம் இருந்து, வரம் வாங்கி பெற்ற மகளை கொலை செய்ய நிர்பந்திக்கிறது.
நிலவும் தந்தை வழி குடும்ப அமைப்பில் சாதிய பெருமை பெண் மீது கட்டப்பட்டிருக்கிறது. ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண் சாதி கௌரவம் காப்பாற்றக்கூடியவளாக இருக்க வேண்டும். பழனியின் மனைவியை “பொண்ண எப்படி வளர்த்திருக்கிறா பாரு“ என ஊர் தூற்றுகிறது. இங்கு ஆணின் நோக்கிலேயே நல்லப் பெண் என்பதற்கான இலக்கணங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
காதல் என்கிற தனி மனித இயல்பூக்கத்தை ஒரு ஒழுக்க மதிப்பீடாக உருவாக்கி, அதைப் பாதுகாக்க நமது அரசியல் சாசனங்களுக்கு சவால் விடும் வகையில், ஒவ்வொரு சாதியின் நலனுக்கும் உகந்த சாதிய சட்டங்கள் நமது கிராமங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சாதிப் பஞ்சாயத்துகளின் குரூரத்தை, வன்முறையை, நாகரீகமின்மையை நம் முகத்தில் காறி உமிழ்ந்து காட்டுகிறது பெத்தவன் நாடகம்.
மானுட நலம், சமத்துவம், குடும்ப அறம் என பல முனைகளிலிருந்தும் வாசிப்பதற்கான சாத்தியங்களை இப்படைப்பு தன்னகத்தே கொண்டிருப்பதை இந்நாடகம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.
பாக்கியமாக நடித்திருக்கும் அருணாஸ்ரீ, பழனியாக சந்தோஷ், பழனியின் மனைவியாக நந்தினி, அம்மா துளசியாக ஜெயலட்சுமி, பாக்கியத்தின் சகோதரியாக சிவசிவமதி ஆகியோர் இந்தப் பாத்திரங்களுக்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்திருக்கின்றனர். இந்நாடகத்திற்கு இருளும் ஒளியும் கலந்து அழகு செய்த பேராசிரியர் ரவீந்திரன், நெறியாள்கை செய்திருக்கும் பேராசிரியர் ராஜு ஆகியோர்களின் உழைப்பு பாராட்டிற்குறியது. காட்சிகளுக்கு இசைத்துயர் கூட்டியிருக்கும் முருகவேல், சண்முகராஜா, வினாயகம், ஆனந்தன் போன்றோரின் பங்களிப்பும் மதிக்கத்தகுந்தது.
பார்வையாளர்களிடம் அழுகையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கலை வெற்றியை எய்திருக்கிறது பெத்தவன். இப்படைப்பின் மூலம் நாம் பெரும் படிப்பினையைக் கொண்டு நம்முடைய கவைக்குதவாத பழைய கெட்டிதட்டிய மதிப்பீடுகளைத் தகர்க்கவேண்டும். சனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்குமான புதிய மாற்று மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும். விடுதலை அடைந்த ஓர் உலகென்பது நம் நித்தியக் கனவு. அதுதான் இமையத்தின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கும்.

Friday, February 28, 2014

பள்ளிகளிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.
பேராசை ஆண்டுகள்
+2 ஆண்டுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. சுயநலம், பேராசை, அதிகாரம் அனைத்தும் கலந்த நம் குடும்ப அமைப்பு சிறிய அளவிலான தன் சுதந்திரத்தையும், ஜனநாயகப் பண்புகளையும் இந்தக் காலத்தில் முற்றும் இழந்துவிடுகிறது. தாங்கள் அடைய முடியாத லெளகீகக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் எட்டிப்பிடிக்க வேண்டும் எனும் பெற்றோர்களின் ஆசை படிப்படியாக வன்முறையாக மாறிவிடுகிறது. தன் பிள்ளை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக வேண்டும் என்கிற மதிப்பெண் வேட்கை பெற்றோர்களைப் பேயாய்ப் பிடித்து ஆட்டத் தொடங்குகிறது. தாய்மார்கள் எப்போதும் விரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர்.
கம்பர், வள்ளுவரெல்லாம் தேவையில்லையா?
முதற்படியாக நம்பகமான, நிரூபண மான கல்வி நிறுவனங்களை இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தக் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு, “அங்கு 20-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்கள் இருக்கின்றன” என அவர்கள் பெருமைபடப் பேசும்போது, கல்வியின் விழுமியங்களை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. பிள்ளையைப் பொறியாளர் ஆக்குவதென்றால். இவர்கள் தெரிவு ஐ.ஐ.டி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவர் என்றால் அரசு மருத்துவக் கல்லூரி. இதற்குக் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களின் தகுதி மதிப்பெண்களே (கட் ஆஃப்) முக்கியமென்பதால், நீதி, அறம், கலை, ரசனை போன்றவற்றை போதிக்கும் மொழிப் பாடங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறத் தேவையான அளவு வள்ளுவரையும் கம்பரையும் படித்தால் போதுமானது.
கேள்விக்குறியாகும் படைப்பூக்கம்
மேல்நிலையில் இரண்டாமாண்டு மதிப்பெண்கள் மட்டுமே உயர் கல்விக்கான தகுதியாகக் கருதப்படுகின்றன. இதனால், ஒரு கல்வியாண்டு முழுவதற்கும் தயாரிக்கப்பட்ட முதலாண்டு பாடத்திட்டம், அவசர அவசரமாக முதல் காலாண்டுக்குள் முடிக்கப்பட்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டமும் முதலாண்டிலேயே மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுகின்றன. இரண்டாமாண்டு முழுவதும் தொடர்ச்சியான தேர்வுகள்தாம். இவ்வாறு நிகழ்வதால், கற்றலில் தொடர்ச்சி அறுபடுகிறது, மாணவர்களிடம் கற்றல் மீதான புதுமை உணர்வு குறைகிறது. படைப்பூக்கத்துக்கும் இடமின்றிப் போகிறது.
வன்முறைக் களம்
முற்றிலும் வணிகமயமான நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டி, அடுத்த ஆண்டு கட்டணத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என்ற பேராசை, இவற்றின் விளைவாக நிறுவனங்கள் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிகின்றன. வேலையைத் தக்கவைத்துக்கொள்ள ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, படிப்புக்காகச் செலவிடப்படும் பெருந்தொகை, விடாமல் துரத்தும் தேர்வுகள், ஆசிரியர்களின் கருணையற்ற அணுகுமுறை, அதிகக் கண்டிப்பு, உடல்ரீதியான, மனரீதியான தண்டனைகள் எல்லாம் சேர்ந்து, கடுமையான சோர்வையும் மன அழுத்தத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. பள்ளி ஒரு வன்முறைக் களமாகிவிடுகிறது. இதனால், விடுதிகளில் நிகழும் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர, பெருமளவில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
சோப்பு, சீப்பு வியாபாரம்
பட்டறையில் தீட்டும் ஆயுதங்களாக மாணவர்களை வாட்டியெடுத்தும் நிர்வாகத்துக்கு அவர்களின் திறன்மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை. இதனால், தேர்வுக் காலங்களில் மதிப்பெண்களைக் குறுக்குவழியில் பெற்றுத்தர முறைகேடான வழிகளிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யப்படுகின்றது. இப்படியெல்லாம் செய்தும் தம் ஆயிரக்கணக்கான மாணவர்களில் சாதனை மாணவர்களாக இவர்களால் தம்பட்டமடித்துக்கொள்ள முடிவது நூற்றுக்கும் குறைவான மாணவர்களைத்தான். இந்த நூறு மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரத்தில் பார்த்துதான், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் பணக்கட்டுகளுடன் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாவதற்கு முந்தைய இரவே, இத்தகைய நிறுவனங்களின் வாசலில் துண்டை விரித்துப் படுத்துக்கொள்கின்றனர். சேர்க்கை சமயத்தில் இத்தகைய பள்ளிகளின் முன்பு திடீர்க் கடைகள் முளைத்திருக்கும். இங்கு பெட்டி, படுக்கை விரிப்பு, துண்டு, வாளி, சோப்பு, சீப்பு போன்ற வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும்.
இது விழிப்புணர்வு அல்ல
இப்படியாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் வளர்ந்துகொண்டிருக்கிற இந்த மனநிலையை எவ்வகையிலும் கல்விகுறித்த விழிப்புணர்வு என எடுத்துக்கொள்ள முடியாது. குடும்பம், சமூகம், அரசு, கல்வித் துறை எனும் நிறுவனங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிற நம் சமகாலக் கல்விபற்றிய சிக்கல குறித்த உரத்த விவாதம் நம் காலத்தின் அவசியத் தேவை. கல்வியில் தனியார்மயம், வணிகமயக் கல்வி, மதிப்பெண்களை மையமாகக் கொண்ட கல்வி, இன்னும் மாறாத ஆங்கிலேயக் கல்வி முறை, படைப்பூக்க உணர்வற்ற பாடத்திட்டங்கள், கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது ஒன்றே எனக் கருதும் பெற்றோரின் பேராசை போன்ற விவாத மையங்கள் இந்தப் பிரச்சினையில் நிறைந்திருக்கின்றன. மிகவும் சிக்கலான, பன்முகத்தன்மை வாய்ந்த, சமூக, பொருளாதாரரீதியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மக்களை உள்ளடக்கியது நம் நாடு. இங்கு ஒரே கல்விமுறை, ஒரே பாடத்திட்டம் என்பதெல்லாம் எந்த அளவுக்கு உகந்தவை என்பதுபற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். காசு உள்ளோர்க்குத் தரமான கல்வி எனும் நிலை மாற அண்மைப் பள்ளிகள் (நெய்பரிங் ஸ்கூல் சிஸ்டம்) போன்றவைகுறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும்.
நிலவைப் பார்க்காத தலைமுறை
கல்விபற்றிய மனத்தெளிவைப் பெற்றோர்கள் அளவில் கொண்டு செல்லப் பண்பாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் முயற்சி எடுக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை ஆகாயத்தில் நிலவைப் பார்க்காமல், குளங்களில் மலரும் தாமரைப் பூக்களைப் பார்க்காமல், வயல்களில் நெற்பயிர்களைப் பார்க்காமல் வளர்ந்துகொண்டிருக்கின்றனர். பிராய்லர் கோழிப் பண்ணைக்கும், குழந்தை வளர்ப்பு முறைக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனே பிரதானம்.
இப்போது நாம் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டியது இதுதான். பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களது வயதுக்கே உரித்தான குணங்களோடு வளர விடுங்கள். அவர்களை அண்டை வீட்டுக்காரர்களிடம் அன்பு செலுத்தப் பழக்குங்கள். இயற்கையை நேசிக்கவும் காப்பாற்றவும் கற்றுக்கொடுங்கள். சுதந்திரத்தைப் பேணவும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும் சொல்லிக்கொடுங்கள். அநீதிக்கு எதிராகப் போராடும் மதிப்பீட்டை உருவாக்குங்கள். உங்கள் குழந்தை உங்களின் நிழலோ அல்லது உங்களின் பிரதியோ இல்லை. குழந்தை ஒரு தனி உயிரி. அந்த உயிரிக்குள் அளவற்ற ஆற்றல் பொதிந்திருக்கிறது. அதைச் செயல்பட அனுமதியுங்கள்.
தேர்வுக் காலங்களில் பிள்ளைகளிடம் மதிப்பெண்களை நிபந்தனையாக்காதீர்கள். யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். கற்றல் எனும் செயல்பாடு ஒரு பூ மலர்வதைப் போல நிகழ வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது அன்பு, பாதுகாப்புணர்வு, நட்புணர்வு போன்றவைதான். உங்கள் குழந்தை இவ்வுலகில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ அவர்களுக்குக் கல்வி அவசியம் தேவைதான். அந்தக் கல்வியின் நோக்கம் வேலையும், சம்பாத்தியமும் மட்டுமன்று, சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதும், பிரச்சினைகளுக்கு அஞ்சாமல் அவற்றை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதுமாகத்தான் இருக்க முடியும். இது +2 காலம்தான். அதைவிட முக்கியமானது பிள்ளைகளிடம் தோழமை கொள்ளும் காலமும் இதுதான்.
- கரிகாலன், கவிஞர், ஆசிரியர், தொடர்புக்கு:kalamputhithu@gmail.com

Wednesday, February 5, 2014

ஏழாம் நுாற்றாண்டின் குதிரைகள் - நரனின் வலிமொழி

கரிகாலன்

பழமையிலிருந்து எப்படி விலகுவது? அதிகாரத்திலிருந்து எப்படி தப்பிப்பது? மரணத்தை எப்படி பகடி செய்வது? காதலிக்க எப்படி கற்றுக்கொள்வது? அன்பைச் சொல்ல எப்படிப் பழகுவது? வன்முறையை எப்படி எதிர்கொள்வது? இயற்கையை எப்படி பாதுகாப்பது? பசியையும் நோயையும் எப்படி கடப்பது? மனநோயாளிகளை, வேசிகளை, எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி நேசிப்பது? கடவுளிடம் எப்படி பேசுவது? இவ்வுலகில் எப்படித்தான் வாழ்வது? இப்படி நிறைய எப்படிகள் நம் ஒவ்வொருவரையும் துரத்திக்கொண்டிருக்கின்றன. இதற்கு நான் தஞ்சம் புக விரும்புவது கவிதையிடம் தான். அபபடியென்றால் கவிதை ஒரு என்சைக்ளோபீடியாவா என்று கேட்பீர்கள். மேற்கண்ட பிரச்சினைகளுக்கான என்சைக்ளோபீடியாவாக கவிதை இருக்குமாயின் அது அரசியல்வாதிகள் கையிலும் கார்ப்பரேட் சிஇஓக்களின் கைகளிலும், சாமியார்களின் கைகளிலும்தான் இருந்திருக்க முடியும். கவிதையை வாசிப்பதும் எழுதுவதும் ஒரு போராட்ட முறை, ஒரு தியான முறை, ஒரு அழகியல் விமர்சன முறை. ஒரு கற்பனை உலகை உருவாக்கிக்கொள்ளும் ஒரு முறை எனச் சொல்லிச்சொல்லி பார்த்து சுருக்கமாக ஒரு வாழ்க்கை முறை எனவும் புரிந்துகொள்ளலாம்.

இவ்வகையில் எனக்கு முன் கவிஞர் நரனுடைய  ஏழாம் நுாற்றாண்டின் குதிரைகள் இருக்கின்றது. எனக்கும் நரனுக்கும் இடையில் இக்கவிதைகள் ஒரு மெல்லிழையால் பிணைப்பை நெய்கின்றன. நான் கண்ட உலகை நரன் கண்டிருக்கின்றாரே. நான் கண்ட உலகில் நான் காணாதவற்றையும் நரன் கண்டிருக்கின்றாரே. நான் கண்ட சொல்லில் காணத்தவறிய அர்த்தத்தை நரன் கண்டிருக்கின்றாரே என்கிற மனநிலையை உருவாக்குகிறார். இவர் மட்டுமில்லை இவருடைய வயதில் தமிழில் ஒரு புதிய கவிதை அலையை நிறைய இளைஞர்கள் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இசை, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன், செல்மா, லிபி ஆரண்யா, சபரிநாதன், மனோ, முத்துவேல்,வெய்யில், கணேசகுமாரன், நிலா ரசிகன், நேசமித்திரன் என இவ்வரிசை நீளக்கூடியது.

நரனுக்கு இது இரண்டாவது தொகுப்பு. கே.எப்.சி-யும், மெரிப்ரவுனும் சாப்பிட்டு வளர்கிற பணக்கார குழந்தைகள் மாதிரி சீக்கிரமாகவே வளர்ந்துவிட்டார். இந்த ஒப்பீட்டை மேலோட்டமாகத்தான் சொல்கிறேன். எதிர்மறை அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. நரன் போன்றவர்களின் இலக்கிய வளர்ச்சியை ஒரு மூத்த சகோதரனாக பெருமித்தோடு கவனிக்கிறேன். அவரது கவிதைகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் என்னிடம் ஏதும் இல்லை. ஒன்றை மட்டும் அவருக்கு அக்கறையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எண்களை அளவுகளை குறிப்பிட்டு சொல்கிற சில இடங்களில் பிரம்மராஜனும், ரமேஷ் பிரேதனும் நினைவுக்கு வருகின்றார்கள். இதை நரன் தவிர்ப்பது நன்று.

நரனுடைய முதல் கவிதை மிகச்சிறு கவிதை. செரிவான கவிதை. இப்பேருலகின் வன்முறையை அழகாக சொல்லிச் செல்கிறது இக்கவிதை. இன்று இந்தியக் குழந்தைகள் முதல் உலக நாடுகளின் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும் அவலம் நடந்துகொண்டிருக்கின்றது. வெகு அருகில் ஈழநிலத்தில் சோற்றுப் பசிக்காக ஏந்திய சிறார்களின் தட்டுக்களில் கொத்துக் குண்டுகள் விழுந்தன. பசியால் மடிந்த சோமாலியக் குழந்தைகள் நினைவை வருத்துகிறார்கள். ஏகாதிபத்திய வெறிக்கு பலியான வியட்நாம் மற்றும் ஈராக் குழந்தைகளையும் மறந்துவிட முடியாது. வன்முறையின் கொடுங்கரங்கள் இளம் மொட்டுகளையும் சிதைத்துவிடுகிற வன்மத்தை நரனின் வலி மொழிகள் இப்படி வெளிப்படுகிறது

கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

இந்தக் கவிதையைக் கடந்து செல்ல முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் அடுத்தடுத்த கவிதையை வாசிக்க முடிந்தது. நரனின் டி.என்.ஏ-வில் நல்லவேளையாக முன்னோர்களின் தாக்கம் அதிகமில்லை. அவருடைய கண்கள் வேறு. அது குழந்தைகளுக்குரியது. குழந்தைகளுக்குரியது என்பதாலேயே கவிஞனுக்கும் உரியதாகிவிடுகிறது. இல்லையென்றால் அது பைத்தியக்காரனுக்கு உரியதாகவும் கூட இருந்திருக்கலாம். சூரியனை ஒரு கவிதையில் பீட்சா துண்டு என்கிறார். பிறகு அவரே “ஏன் இன்று ஒரு இந்திய சூரியன் இந்திய ஆயிரம் ரூபாய் தாளைப் போல் இருக்கக்கூடாது” என்கிறார் பங்கு மார்க்கெட்டில் வீழ்ந்த இந்திய பணத்தின் மதிப்பைப் போல் தான் இந்த சூரியனும் தீர்ந்து வருகிறது.  நமது எல்லையற்ற பேராசையால் இயற்கையை அழித்து ஒரு வெறுமையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பிரபஞ்சத்தை, பால்வெளி அண்டத்தை நேசிக்கின்ற மனதை இழந்து கல்லை, நீரை, மணலை காசாகப் பார்க்கிற மனநிலையை வந்தடைந்திருக்கிறோம். இம்மனநிலையை இதைவிடவும் எப்படித்தான் அழகாக கூறிவிட முடியும்.

வளர்ச்சி என்பது எல்லோருக்கும் பிடித்த வார்த்தையாய் இருக்கிறது. நமக்குக் கொண்டாட எப்போதும் ஒரு வளர்ச்சியின் நாயகர் தேவைப்படுகிறார். இந்நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றுக்கு ஒரு சந்தை உருவாகியிருக்கிறது. நரன் இங்கொரு வளர்ச்சியின் விளைவைக் காட்டுகிறார். நமக்கு இன்னும் அகலமான நீளமான தார்ச்சாலைகள் வேண்டும், புதிய புதிய வழிகளில் இருப்பு பாதைகள் வேண்டும். இவற்றிற்கான இடங்கள் வேண்டும். இவற்றைச் சமைக்க மனிதர்கள் வேண்டும். இருக்கவே இருக்கின்றன காடுகள், விவசாய நிலங்கள். இருக்கவே இருக்கின்றார்கள் மலைவாழ் மக்கள், விவசாயிகள். இவற்றை அனுபவிப்பவர்கள் யார்? யார் வளர யாருடைய நலனை பலிகொடுப்பது? நரனுடைய கவிதையில் உழவன் ஒருவனின் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அவன் இனி விரையும் ரயில் வண்டியிலோ அல்லது துாக்கிட்டோ, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற நெருக்கடியை இவ்வளர்ச்சி உருவாக்கியிருக்கிறது. விவசாய நாடாக கருதப்பட்ட இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இவ்வண்ணம் இந்நாட்டின் விவசாய குடிகளை தற்கொலைக்குத் துாண்டியவர்கள் பிரதமராக, நிதியமைச்சராக, உள்துறை அமைச்சராக, முதலமைச்சர்களாக, பன்னாட்டு வங்கித் தலைவர்களாக உலா வருகின்றனர். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி சாலை அமைப்பதும், சுங்க வரி வாங்குவதும் பன்னாட்டு நிறுவனங்கள் என்றால் அவனுடைய துாக்கு கயிற்றை மட்டும் யார் தயாரிப்பார்கள். நரன்       “கயிற்றின் அளவை வால்மார்ட் நிறுவனத்திற்கு நேர்த்தியாக மின்னஞ்சல் செய்தாகிவிட்டது”    என்கிறார். தீயின் விதைகளை கவிதைக்கு இடையில் துாவ நரன் கற்றிருக்கிறார்.

நரன் கவிதைகளுக்கு வெட்டுக்கிளிகளின் பாதங்கள். அது மண்புழுவைப் போல் ஊர்ந்து செல்வதில்லை. ஒரு படிமத்திலிருந்து இன்னொரு படிமத்திற்கு பாய்ந்து பாய்ந்து செல்கிறது. இடைவெளியில் நிறைய செய்திகளை வாசகனின் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். கவிதை வாசகனை இவர் உயர்ந்த இடத்தில் வைத்து தன் கவிதையைப் பரிசளிக்கிறார். வாசகனை இயக்கத் தன்மையில் செலுத்தி மகிழ்கிறார். தன் கவிதையில் வாசகனையும் கூட்டு சேர்க்கிறார்.

“ திறமையான சவரக்கலைஞன் ஒருவன்
  கண்ணாடியிலிருக்கும்
  என் முகத்திற்கு சவரம் செய்துவிடுகிறான் ”     என நரன் ஒரு கவிதையை Virtual Reality-யாக குறிப்பிடுகிறார் இப்போது Virtual எது Reality எது என்று குழம்பிய நிலை ஏற்பட்டுள்ளது. இணையப் புரட்சி மற்றும் தகவல் புரட்சி உருவாக்கியிருக்கும் குழப்பம் இது. இதை மாய எதார்த்தம் என்பதை விடவும் எதார்த்தம் கடந்த எதார்த்தம் என்று சொல்லிப் பார்க்கலாம். எனது காலை “ஷு” விழுங்கிவிட்டது என்கிறார். “ சப்பாத்துகளற்ற கால் தனியே மாடிப்படியேறிக்கொண்டிருக்கிறது”  எனச் சொல்கிறார். இப்படி எதார்த்தத்தை குலைத்து தர்க்கத்தை பார்க்கிற பார்வை சமகாலத்தில் உருவாகி வருகிறது. தருக்கத்தின் வழியே உருவாகும் படைப்புகளினுாடாக மீண்டும் ஓருமுறை பிரதியில் நிலவுகிற அதிகார சமூகம் கட்டமைக்கப் படுகிறது என்கிற அடிப்படையில் இவ்வகை மாய எதார்த்தங்கள் தேவைப்படுகின்றன. கற்பனையைத் துாண்டி செழிக்கச் செய்வதின் மூலமே பழமைகளை வழக்கொழிக்க முடியும். விடுதலை நிறைந்த புதிய உலகை உருவாக்க முடியும். மரணம் குறித்து டி.எஸ். எலியட் குறிப்பிடும்போது “ மரணம் 100 கரங்களை உடையது ஆயிரம் வழிகளில் நடக்கக் கூடியது”  என்கிறார். இங்கு மரணம் என்பதற்கு பதிலாக கவிதையைக் கூட பொருத்திப் பார்க்க முடியும். நரன் கவிதைகள் முழுவதையும் படித்த பிறகு இருபத்தி ஐந்து வயதான சமகால அமெரிக்க இளம் பெண் எழுத்தாளரான Tiffany Fulton கூறியது நினைவுக்கு வருகிறது. “நான் மாறிவிட்டேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் நாம் என்னவாகுவோம் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அதைவிடவும் சிறப்பாக உருவாகிவிட்டோம்” நரனுக்கும் தமிழ்க்கவிதைக்கும் இது பொருந்தக் கூடியது.

,e;