Sunday, December 26, 2010

விருத்தாசலத்தின் புதுமைப்பித்தன்

எனது நிலாவை வரைபவன் புதினத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழமலயிடம் கொடுத்திருந்தேன். பிறகு அதனை மறந்தும் விட்டேன். பழமலையினுடைய இலக்கிய கோட்பாடுகளிலிருந்து விலகியவன் என்ற போதும் அவரது கவிதைகள் மீது எனக்கு மரியாதை உண்டு. பழமலய் தனது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிக்க தயங்காதவர். அதே வேளையில் முரண்களோடு தோழமை கொள்ளத் தெரிந்தவர். ஆச்சரியமாக புதினங்களை படிப்பதில் விருப்பம் காட்டாத அவர் நிலாவை வரைபவன் குறித்து சமீபத்தில் எனக்கு எழுதியிருந்தார். சிக்கலான அமைப்பில் எழுதப்பட்டிருந்த அப்புதினத்தை சரியாக அவர் விளங்கிக் கொள்ளாத போதிலும் கூட அது குறித்து அவர் எழுதிய பதிவு முக்கியமானது என்பதால் இங்கு அவ்வுரையாடலை அளிக்கிறேன்.

த. பழமலையின் விமர்சனம்

       இப்படி ஒரு நூல் - புதினம் - வெளிவந்திருப்பதாக அறிந்தேன். கவிஞர் கரிகாலன் சிறுகதைகள் எழுதினார். அடுத்த கட்டமாக புதினமும் எழுதியுள்ளார். படிக்கக் கொடுக்கும்படி கவிஞரிடம் கேட்டிருந்தேன். 27.04.08 -இல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். படிக்க நேரம் கிடைத்து ஆர்வமும் தோன்றி 30.11.10 ல் படித்து முடித்தேன். இரண்டாவது நாள் படித்து முடித்துவிடுவது என்று இரவு ஒரு மணி வரை விழித்துப் படித்தேன். கரிகாலன் இந் நூலுக்கு என்னிடமிருந்து எந்த மதிப்புரையும் கேட்கவில்லை. எதிர்பார்க்காமல் கூட இருக்கலாம். மூன்றாண்டுகள் முடியப் போகிறது. அவர் இதனை மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போயிருக்கலாம். போகக்கூடியவர்.

     நூலை படித்துக் கொண்டு வந்த போது எதிர்பாராத வகையில், பக்கம் 114 ல் பழமலையின் கசந்த மரம் கவிதை பற்றிய குறிப்பைப் படித்தேன். நானாக இருந்தால் இந்நூலை அன்பளிப்பாகத் தரும் போது இந்தப் பக்கத்தைக் குறிப்பிட்டுத் தந்திருப்பேன். கரிகாலனின் ஆளுமைப் பண்பு தனித்தன்மையானது!

         எழுத்தாளர் சுஜாதாவை ஒருமுறை சென்னையில் அவர் வீட்டில் பார்த்த போது “ உங்கள் ஊர்தானே (விருத்தாசலம்) கவிஞர் கரிகாலன்!” என்று நலன் கேட்டார். சுஜாதா போன்றவர்களின் கவனிப்புக்கு ஆளானவர் கரிகாலன். அதாவது எதிர்கால நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்.

           நான், கரிகாலனின் காணி ஊரான மருங்கூர் சென்றிருக்கிறேன். திருமுதுகுன்றத்தில் அவர் புதிதாகக் கட்டிக் குடியேறியுள்ள வீட்டிலும் ஓர் இரவு தங்கியிருக்கிறேன். கரிகாலன் ஓர் ஆசிரியர். கவிஞர் அவருடைய காதல் மனைவியாரும் ஓர் ஆசிரியை. புதின எழுத்தாளர். தனிக்குடும்பம். மூன்று குழந்தைகள்.

         கரிகாலனின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. அவர் கைப்பணம் செலவழித்துச் சிற்றிதழ், இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடு, அண்மையில் விருது வழங்கல் எனச் செயல் ஊக்கம் உள்ளவர். பகுத்தறிவு, பொதுவுடைமை.. எனப் பயில்பவர்.

       இடையில் ஏதோ ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு குடும்பப் பிரச்சினைக்கு ஆளாகி உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். அவரிடமே கலந்து பேச விரும்பினேன். நேராமல் போனது.

      இந்தப் புதினத்தில் கரிகாலன் அதைத்தான் விவரித்துள்ளார். எனக்குப் புதினங்களில் அதிக பழக்கமில்லை. என்றாலும் இலக்கிய நடப்புகளின் தொடர்பில் இருப்பதால், எடுத்துரைப்பதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் சிறிதே அறிமுகம் உண்டு.

    கரிகாலன் புதிய புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி எனத் தன் அறிவையும் ஆளுமையையும் விரிவு செய்துகொண்டிருப்பவர். பழைய பஞ்சாங்கமாகத் தேங்கிவிடாமல் உடன்கால உணர்வுடன் இயங்குபவர். இவையே இந்தப் புதினமாக உருவாகியுள்ளது.

    இப்படைப்பின் தொழில்நுட்ப விதிகள் சற்றே சிக்கலானவை. துப்பறியும் புதினங்கள் ஒருவகை என்றால் இது ஒருவகை. இவற்றுள்ளும் வாசகரும் துப்பறிய வேண்டியவர் ஆகி விடுகிறார்!

     கரிகாலன் குடும்பத்தை ஓரளவு நேரில் அறிந்தவன் என்கிற முறையில் இக்கண்பொத்தி விளையாட்டில் கலந்து கொள்வது எளிதாக இருந்தது. அல்லாத நிலையில் வாசகர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டவர்களாய்த் துழாவ வேண்டியது தான். பிறகு குருடன் பாலைக் கொக்காகப் புரிந்து கொள்ளும் கதைதான்!

    இந்தப் பிடுங்கல்களுக்காகவே நண்பர் ஒருவர் நாவல்கள் படிப்பது இல்லை. வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பார். அவருக்கு எழுத்து உண்மை பேச வேண்டும். கதையெல்லாம் விடக்கூடாது!

    புதினம், வரலாறு இல்லை. புனைவுகளைக் கொண்டது. இந்தப் பொய்மை - பொய் வேசம் போடுவது - ஒரு தேவைக்கானது. தேவை என்பது படிக்க வைப்பது. படிக்க வைப்பதிலும் உத்தி.

    படைப்பில் உத்தி பிரிந்து வருபவர்களை இனம் கண்டு தேர்ந்தெடுப்பது படைபாளிகள் திறமை. இதுவும் ஒரு விளையாட்டுதான். அறிவு விளையாட்டு.

     ஆசிரியர் நிறையவே ஆட்டம் காட்டுகிறார்.

     அவர் விளையாடத் தெரிந்தவர். ஆட்டம் காட்டுகிறார்.

     இப்புதினம் மரக்கட்டையாக இல்லாத, எரியும் கரியாக உள்ள ஒருவர் அடுத்தடுத்த தேடல்களிலும் தேர்வுகளிலும் எதிர்கொள்ளும் அவத்தைகளைப் படம்பிடிக்கிறது. “வருங்கால உலகத்தை” வாழ்நாளிலே வாழத்துணிபவர்கள் இரக்கத்திற்கு உரியவர்களே. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம்.

    படித்தவர்கள் விவகாரத்தில் அடுத்தவர்கள் தலையிட முடியாது. நேர்மையான முயற்சிகள் கூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். அவர்களாகத்தான் முன்வர வேண்டும்.

   ஒரு கட்டத்தில் உளவியல் மருத்துவர்களைப் பார்ப்பார்கள். யாவும் திரைமறைவு நாடகமாக இருக்கும். மூன்றாமவர்கள்  தங்களுக்கு இடையில், சூசகம், அனுமானம்...எனத்தான் பேச வேண்டியிருக்கும்.

   தாங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள் நடுவில் உடைமை உணர்வைப் போலவே விடுபடும் உணர்வும் இயல்பானதே, சிக்கலே இதுதான்!

    புதினம் “இப்படி முடிகிறதே” என்றால், “வாழ்க்கை எப்படியும் முடிவது அல்லவா?” என்பதே விடையாக இருக்க முடியும். குறிப்பிட்ட இந்த குடும்ப பிரச்சினை - கணவன் இன்னொரு பெண்ணை விரும்புவது - மனதளவில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாறுவதில் முடிகிறது. அடக்கு அல்லது அடங்கு!

   இறுதி வெற்றி, வீட்டை விட்டு வெளியேறிய மனைவி திரும்பி வருவதும், கணவன் வெளியேறுவதும், திரும்பி வராததுமா?

    கரி்காலனின் அடுத்த புதினம் மனைவி வெளியேறுவதும், திரும்பி வராததுமாக இருக்கலாம். ஆணைப் பெண் துறப்பது, வீட்டை விட்டு வெளியேறுவது, இப்படியும் நடந்து வரவே செய்கின்றன.

    இப்படி ஏன் இவர்கள் வெளியேறிக்கொண்டும், திரும்ப வந்து கொண்டும்? குடும்பம், பிள்ளைக்குட்டிகள் என இருப்பதால் தானே?

    குடும்பமும் குழந்தைகளும் இல்லாத ஊர், உலகம் தான் எதிர்வரும் கால உலகம்.
 
   பிறகு இவர்களுக்கு வாழ்க்கையும், உலகமும் என்னவாக இருக்கமுடியும்?

    இவ்வாறான கேள்விகளுக்கு விடை இல்லை என்பதற்காக அல்ல, ஒரு விடையைத் தேடுவதற்காகத்தான் இப்புதினம்.

    புதினப் பாடுபொருள் காதலா,  குடும்பமா, பள்ளியா, குழந்தைகளா, சமூகமா, அரசியலா? யாவுமாக அலசப்படுவதால் எதுவுமாக எஞ்சவில்லை. யாவுமாகி நிற்பதாகச் சொல்லலாம்.

    கவிஞர் புதினம் இயற்றுவதில் உள்ள குறையையும் நிறையையும் ஒரு சேர இப்புதினத்தில் காணலாம். குறை, கவிதை நடை, நிறையும் அதுவே தான்.

    தகவல்களை எவ்வளவு தரலாம்? ஓரிடத்தில் உளவியல் பாடமே நடத்துகிறார்(பக். 139-140). அதைப் பாடத்தோடு தொடர்புபடுத்துவதுதான் ஆசிரியரின் திறமை. எப்படித் தரவேண்டும் என்பது தெரிந்தவர்.

     மணிமுத்தாற்றங்கரை எழுத்தாளர்களுள் கரிகாலன் “மிகு புதுமை” எழுத்தாளர்.  “விருத்தாசலம் புதுமைப் பித்தன்”.

ஜான் பாஸ்கோ - ஒளியைத் தேடும் கலைஞன்

         ஜான் பாஸ்கோ இந்தியாவின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர். அவர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை. ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் பாஸ்கோவுக்கு புகைப்படக் கலை பொழுதுபோக்கல்ல. அதுதான் வாழ்க்கை. கலையை வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டவர்களுள் ஜான் பாஸ்கோவும் ஒருவர். பனி, மழை, வெய்யில் எனப் பருவங்களை நிலம், விலங்கு, மனிதன் என இயற்கையின் பல்வேறு தோற்ற நிலைகளை, இருளை, ஒளியை, வண்ணங்களை - இவ்வாறு விடாது தேடிப் பயணிப்பவர் பாஸ்கோ. தன் கலையை ஒரு போதும் வணிகமாக்குவதில் விருப்பமில்லாதவர். அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் சாம் ஆபெல் இவரை வெகுவாகக் கவர்ந்தவர். மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக உருவெடுத்திருக்கும் போராஸ் சௌத்ரி (24)யும் பாஸ்கோவை பாதித்தவர்.

              ஒரு கலைஞருக்குரிய பலவீனங்கள் பாஸ்கோவுக்கும் உண்டு. லௌகீக அம்சங்கள் பலவற்றை கண்டுகொள்ளாதவர். தவிப்பு, நிறைவின்மை, தேடல் போன்ற மனநிலையில் எப்போதும் இருப்பவர். பெரும்பாலான விடுமுறை நாள்கள் இவரது கலைத் தேடலின் பயனநாட்களாகவே கழியும். கடந்த ஆண்டு இவர் புதுச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸில் நடத்திய “கலர்ஸ் ஆஃப் லைஃப்” எனும் புகைப்பட கண்காட்சி ஆர்வலர்களின் கவனத்தை கவருவதாக அமைந்திருந்தது. இவரது புகைப்படங்கள்  நேஷ்னல் ஜியாக்ரபி, பெஸ்ட் போட்டோகிராபி போன்ற சர்வதேச இதழ்களிலும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற உள்ளுர் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

            சென்ற ஆண்டு புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை நடத்திய புகைப்படப் போட்டியில் இவரது புகைப்படம் முதல் பரிசைப் பெற்றது. அதுபோன்று hp “பருவநிலை மாற்றங்கள்” எனும் தலைப்பில் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசை வென்றிருக்கிறார். சமீபத்தில் “புகைப்படக் கலையின் அடிப்படைகள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் பாஸ்கோ நிகழ்த்தியிருக்கிறார்.

          ஆங்கில / தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பும் தீவிர ஈடுபாடும் கொண்டவர். இவரின்ன் மின்னஞ்சல் முகவரி <mjohnbasco60@gmail.com>. பாஸ்கோவின் புகைப்பங்கள் சில உங்கள் பார்வைக்கு.







Friday, December 17, 2010

எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011

அளம், மாணிக்கம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி இப்புதினங்களின் வரிசையில் சு. தமிழ்ச்செல்வியின் பொன்னாச்சரம் புதினம் சென்னைப் புத்தக கண்காட்சியை ஒட்டி உயிர்எழுத்து பதிப்பகத்திலிருந்து வெளிவர உள்ளது. ஆடுமேய்ப்பவர்களின் இனக்குழு வாழ்வின் அழகையும் அவலத்தையும் கீதாரி நாவலில் பதிவு செய்திருந்தார் சு. தமிழ்ச்செல்வி. வெட்டவெளியில் தங்களது ஆடுகளோடு வாழ்வை எதிர்கொள்ளும் கீதாரிகளின் மனஉறுதியை இப்புதினம் வெளிப்படுத்தியது. நாடோடி வாழ்க்கையின் இன்னல்களை பொற்றேக்காட்டிற்கு பிறகு மிகத்துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தது கீதாரியில் தான். இதன் தொடர்ச்சியே பொன்னாச்சரமும். குறிப்பாக இவ்வினக்குழுவில் பெண்களின் அல்லற்பாடுகளை காத்திரத்துடன் பகிர்ந்து கொள்கிறது இப்புதினம்.  மிக ஈரமான மொழிநடையில் தனக்கே உரிய விசேஷ உரையாடல்களுடன் இப்புனைவின் பக்கங்களை விவரித்துச் செல்கிறார் புதின ஆசிரியர். எதார்த்தவாத அழகியலை விரும்பும் வாசகர்களுக்கு இப்புதினம் ஒரு கொடை.

வாழும் காலத்தை பேசும் முத்துவேல் கவிதைகள்

புத்தாயிரத்தில் மலர்ந்துள்ள இளம் கவிஞர்களுள் நம்பிக்கையளிக்கும் ஆளுமையாகத் திகழ்கிறார் முத்துவேல். மிகச் சாதாரண கணத்தையும் இவர் அவதானிக்கும் விதம் வித்தியாசாமக இருக்கிறது. தன்னைக் கடந்து போகும் காலத்தை அதீத அழுத்தத்துடன் தனது கவிதைக்குள் உறையச்செய்யும் வித்தையை கற்றுள்ளார் முத்துவேல். உதாரணமாக மனிதர்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் வெறும் Binary களாக மாறிவிட்ட அவலத்தைப் பேசும் கீழே உள்ள ரொம்ப நாளாச்சே கவிதை நமக்குள் ஆழ்ந்த துக்கத்தை கவியச் செய்கிறது. முத்துவேலை கவிதை வாசகர்கள் பின்தொடரலாம்.

ரொம்ப நாளாச்சே...

செல்பேசியிலிருந்த
எண்ணை(யும்)
அழிக்கிறேன்

செத்துவிட்டார்
தர்மலிங்கம்

அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது
தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்
யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்

இன்றை...
இன்று
சரியான நேரத்தில் எழுந்ததால்
பதட்டமின்றிப் புறப்பட முடிந்தது.
இன்று
வீட்டை விட்டு
வெளியேறுகையில்
எனக்கு மிகப்பிடித்தப் பாடலை
ஒலி/ளி பரப்பியிருந்தார்கள்.
இன்று உணவகத்தில்
வரிசையின் நீளம்
மிகக் குறைவு.
உணவும் நன்றாக வேறிருந்தது.
இன்று
என் சக ஊழியன்
விடுப்பில் இருந்தான்.
இன்று
மேலதிகாரியின் வசவுகள் இல்லை
இன்று
பதவி உயர்விற்கான
செய்தி வந்தது.
இன்று
மாலையிலிருந்தே துவங்கிவிட்டது
நாளைய விடுமுறை.
இன்று
வெளியாகியிருந்த
என் கவிதைகளை
யாரோ ஒருவர்
தொலைபேசியில்
அழைத்துப் பாராட்டினார்.
இன்று
என் விருப்பப் பட்டியலிலான
புத்தகங்களின் கட்டு
அஞ்சலில் வந்தது.
இன்று
ஒட்டடை படிந்த என்
மிதிவண்டிக்குக் காற்றடித்து
சுத்தம் செய்தேன்.
இன்று
மனைவி மக்களுடன்
வெளியே சென்றிருந்தேன்
இன்று
தண்ணீர்த் துப்பாக்கி
வாங்கித் தந்த மகிழ்ச்சியில்
மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.
இன்று
புகைக்கவேயில்லை.
இன்றை
பிரிய மனமில்லாமல்
உறங்கிபோனேன்
துக்கத்தோடு.

Saturday, December 11, 2010

பாரதி - 129

இன்று பாரதியின் 129 வது பிறந்த தினம். பாரதியின் கவிதைகள், பாரதியின் கவித்துவ மனநிலை இரண்டுமே முக்கியமானது. “ நெட்டை மரங்களென நின்று புலம்பினர்”,
“ பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா”, “ பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”, “ நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”, “ஆதலினால் காதல் செய்வீர்”, “வீழ்வேன் என நினைத்தாயோ” என பாரதி பல கவி வரிகள் எத்தகைய சோர்விலிருந்தும், எத்தகைய துயரத்திலிருந்தும் கடந்து செல்வதற்கு துணையாய் இருந்திருக்கின்றது. தனது குடும்பத்தின் வறுமையை சிந்திக்காமல் ஓரு சித்தனைப் போல் வாழ்ந்தவன் பாரதி. அவன் எனது ஆன்மீக வழிக்காட்டி. அவன் விழியின் ஒளியிலிருந்து துலக்கம் பெறுகிறது என் பாதை. அவனது தடங்களை ஒட்டி நடப்பதில் துயரொன்றுமில்லை. பாரதி உனக்கு என்னுடைய வணக்கமும் முத்தங்களும்.

மதுவழிச் சாலை

நாம் சென்றடைய வேண்டிய
எல்லா இடங்களுக்கும் முன்பாக
ஒரு மதுக்கடை இருந்து தொலைக்கிறது
இந்த நகரத்தில்

மருத்துவமனை
தேவாலயம்
அஞ்சலகம்
பள்ளிக்கூடம்
பேருந்து நிலையம்
யாவற்றை அடைவதற்கு முன்பும்
மதுவின் நெடி நம் பாதையின் உறுதியை
லேசாகக் குழப்புகிறது

முந்தைய நாள் மனைவிக்களித்த
சத்தியத்தின் நிறம் மங்கத் தொடங்குகிறது
குழந்தைகளுக்கான தேவைகள்
இலக்கை நோக்கி நகர்த்த
மதுக்குவளையிலிருந்து வெளியேறும்
உளறல்களும் சிரிப்பொலிகளும்
நம் வானம்
இன்னும் சிறிய இடைவெளியிலிருப்பதை
உணர்த்துகின்றன

ஆட்டோவிலிருந்து கொண்டு
ஓட்டுநரிடம் ஒரு முழுப்புட்டி
விஸ்கியை வாங்கி வரச்சொல்லும்
வேசியை கடவுள்தான் அனுப்பி வைத்திருப்பாரோ

இது ஒரு கலகக்கார அரசாகத்தான்
இருக்க வேண்டும்
பகலில் பொருந்த முடியாதவர்களையும்
இரவுக்கு தன்னை தயாரித்துக் கொள்கிறவர்களையும்
மது விடுதியிலிருந்து ஆற்றுப்படுத்துகிறது

இளங்குழந்தையின் மிருதுவாய்
நிர்வாண யுவதியின் குழைவாய்
மதுபாட்டில் உள்ளங்கையில் நெகிழும் போது
நிலவு இந்த நகரை முழுவதுமாக
கவ்விக் கொள்கிறது

முதல் மிடறுக்கு
மருத்துவமனை  அல்லது ஆலயத்தை
இரண்டாம் மிடறுக்கு
மனைவியின் சத்தியத்தை
மூன்றாம் மிடறுக்கு
குழந்தைகளின் தேவைகளை
மறக்க வைக்கும் புண்ணிய நதியில்
மூழ்கி எழும் போது
இறைவனுக்கும் மருத்துவனுக்கும்
ஏது இடம்

நினைவின் அழியாத ஒரு புள்ளியிலிருந்து
நிலவின் இழையைப் பற்றிக் கொள்கிறோம்

படுக்கையிலிருந்து எழும் போது
நேற்றைய முன்னிரவுக்கும்
இவ்விளங்காலைக்கும்
இடையே காலம் வெறும் கருப்புத் துண்டாய்
நழுவிப் போயிருக்கிறது

குளிர்ந்த தண்ணீரைத்
தலையில் ஊற்றிக்கொள்ள
புத்தனாய் விளங்க உறுதியேற்கிறோம்

இப்போது பகல் அதன் வாயிலைத் திறந்து
நம்மை உள்ளே அனுமதிக்கிறது.

Monday, December 6, 2010

வடிவேலுவும் தமிழ் பண்பாட்டு மானுடவியலும்

                நகைச்சுவை நடிகர் வடிவேலு உருவாக்கும் பாத்திரங்கள் நம் சமகாலத் தமிழர்களைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், அலர்ட் ஆறுமுகம், கைப்புள்ள இப்படி அவரது பாத்திரங்களில் என்னையும் இன்னும் தமிழின் ஏன், இந்தியாவின் பல பிரபலங்களையும் அடையாளம் காண்கிறேன். தமிழர்களின் மனசாட்சி என்று கூட வடிவேலைக் கூறலாம். பண்பாட்டு மானுடவியலில் ஆர்வமுள்ளவர்கள் வடிவேலின் நகைச்சுவைச் சித்திரங்களை தீவிரமாக ஆய்வு செய்தால் அதில் செயல்படும் நமது பண்பாட்டு மானுடவியற் கூறுகள் குறித்த அபூர்வமான விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்.


                   இனி பிரபலமான சிலரோடு வடிவேலின் பிரபலமான வசனங்கள் இன்றைய சூழலில் எந்தளவுக்குப் பொருந்துகின்றன... பார்ப்போம்.

கலைஞர் vs ஜெ அறிக்கைகள்

பேச்சு பேச்சா இருக்கனும்
இந்த கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்
நீயும் வரக்கூடாது

இன்னும் மக்களோடுதான் கூட்டணி எனச் சொல்லும் விஜயகாந்த்

நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது

மன்மோகன்சிங் & பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்

வேண்டாம் அழுதுடுவேன்

ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ராஜபக்சே

வட போச்சே!

பத்திரிகைகளில் நாயைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் சாருநிவேதிதா

ஏய் சேகர் டேய் சேகர்னு கூப்பிட்டவென்லாம் இப்ப நாய் சேகர்னு மரியாதையா
கூப்பிடுறான்.

ராஜாவைப் பாதுகாக்கும் கி. வீரமணி

அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்
இவன் பயங்கரமா கருப்பா இருக்கான்

அவ்வப்போது மீடியாக்களில் கிலி கிளப்பும் சுப்ரமணியசாமி

கைப்புள்ள வண்டிய கிளப்பு

ஸ்பெக்ட்ரம் ராஜா

சண்டையில் கிழியாத சட்ட எங்க இருக்கு

ஈழப் பிரச்சினையில் திருமாவளவன்

அது போன வாரம், இது இந்த வாரம்

வன்னியர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கும் டாக்டர் ராமதாசு

திரும்பவும் மொதல்ல இருந்தா

திமுக வை விமர்சிக்க ஆரம்பித்திருக்கும் அ. இ. ச. ம. க தலைவர் சரத்குமார்

நானும் ரவுடிதான்

குடிபோதையில் மூத்த கவிஞர் இளங்கவிஞருக்கு கொடுக்கும் மகாகவி பட்டம்

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்குராய்ங்களே

இலக்கியவாதிகளை பட்டியல் போடும்  ஜெயமோகன்

இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டிருக்கு

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்

இவன் அதுக்கு லாயக்கில்ல

தேர்தல் கால வாக்காளர்

அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத் தான் இருக்கு

தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்டா

வடிவேலின் ஒரு நகைச்சுவைத் துணுக்கு

Sunday, December 5, 2010

டிசம்பர் 06 - நீதிமன்றமா? கட்டப்பஞ்சாயத்துக் கூடமா?

            டிசம்பர் 6. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். நமது போலி மதச்சார்பின்மையின் மீது நமக்கிருந்த கடைசி நம்பிக்கையை இந்துத்துவவாதிகள் கடப்பாறை கொண்டு தகர்த்த நாள். இவ்வளவு நாளாய் பாபர் மசூதி இடிப்பு வழக்கை இழுத்தடித்து வந்த நீதிமன்றம் தீர்ப்பு கூறிய போது அது தன் பங்குக்கு ஒரு கடப்பாறையைப் போட்டது. வர வர நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ராமர் பாலம், பாபர் மசூதி எல்லாவற்றிற்கும் சான்றாக வெகு மக்கள் நம்பிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் நீதி என்பதும், வெகுமக்கள் நம்பிக்கை என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. நீதிமன்றம், மத்திய அரசு, தொல்லியல் துறை, இந்துத்துவா சக்திகள் என எல்லோரும் இந்தத் தீர்ப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு எதிர்வினையாக இசுலாமியர்களின் மௌனம் கனத்த துயரின் வெளிப்பாடு. இந்துக்களின் மேலாண்மையை இசுலாமியர்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்பதைத் தான் தமது தீர்ப்பில் நீதி மன்றம் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கின்றது. பெரியார், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக்  கொளுத்தச் சொன்னார். அவர் சொன்னதற்கான நியாயங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பாபர் மசூதி இடிப்பு வழக்கு,  பல்வேறு பிரச்சினைகளில் தனியார்மயமாக்கலுக்கு ஆதரவு என நீதிமன்றங்களின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. சமூக நீதி, மனித உரிமைகள் போன்றவற்றில் அக்கறை உள்ளவர்களுக்கு டிசம்பர் 06 ஒரு கருப்பு தினம். இந்திய வரலாற்றில் கருப்பு தினங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதைக் கண்டு சனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் கவலைப்பட வேண்டும். 

Saturday, December 4, 2010

ஒரு வார்த்தை கவிதை ஒன்று

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் புத்தக வெளியீட்டு விழாவில் பாவலர் அறிவுமதி சொன்ன ஒரு வார்த்தை கவிதை இது.

                                                                     வருவான்

கவிதை புரியுதா?

அரட்டை - ராதா vs கண்ணன்

நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய புதினம் “நிர்மலாவைக் கடப்பது”.  இதில் ராதா, கண்ணன் என இரண்டு பாத்திரங்கள் இடையிடையே வந்து நாவலில் வரும் பாத்திரங்கள் பற்றியும் சமூகம், கலை, அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். இனி அவ்வவப்போது இவ்வலைப்பூவில் இவர்களின் அரட்டையைக் கேட்கலாம். (நிர்மலாவைக் கடப்பது சிக்கிமுக்கி இணைய இதழி்ல் www. chikkymukki.com தொடராக வருகிறது.)


ராதா : ஏய் அன்னைக்கு இஞ்சி, லெமன் எல்லாம் போட்டு ஒரு ஜுஸ் குடுத்தியே ரொம்ப         நல்லா இருந்துதுடா....வெளியில எங்க கண்ணா அது கிடைக்கும்.

கண்ணன்:  ஓ.. எல்லா டாஸ்மாக்குலயும் கிடைக்குமே!



ராதா : u cheat... ஏய் அன்னைக்கு என்னதான் குடுத்தே.
கண்ணன்: அது மேஜிக் மொமன்ட்ஸ் ன்னு வோட்கா ராதா. அன்னைக்கு நீ குரங்கு மாதிரி எப்படி எல்லாம் குட்டி கரணம் அடிச்ச தெரியுமா?



ராதா : ஓங்கூட பேசவே கூடாதுடா.. கோ டு ஹெல்.
கண்ணன்: சரி விடு ராதா... மழை எப்படி கொட்டி தீக்குது பாத்தியா!



ராதா : அதை விடு... சேனல் 4 பார்த்தியா ஈழப் போரில் சிங்கள ராணுவம் புரிந்த அக்கிரமத்தை பார்த்து உலகமே திகைச்சிப் போச்சே
கண்ணன்: ஆமாம்பா, ஐ.நாவின் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹேன்ஸ் கூட இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்லிருக்காரு.



ராதா : ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியையே ரத்து செய்யிற அளவுக்கு உலகத் தமிழர்களின் எதிர்ப்பைப் பார்த்தியா? என்ன புண்ணியம், இங்க ராஜப்க்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.
கண்ணன்: அசிங்கப்பட்டு ஊர் வந்தா போதும்னு ஓடி வந்துட்டாரே.



ராதா : ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பூதாகரமா ஆவுதே கவுனிச்சியா? ஆமாம், கவுனிச்சேன் நிரா ராடியா 50 ப்ளஸ்லயும் சும்மா கும்முன்னு இருக்காங்கல்ல.



ராதா : ஒன்ன திருத்தவே முடியாது. அவுங்க பவர் புரோக்கர்ங்கறது தெரியும். இந்த டேப் விவகாரத்துல பத்திரிகை அறம் பேசுற ஆட்களோட வேஷம் கலஞ்சிருக்கு பாத்தியா?
கண்ணன்: நம்ம ஆட்களுக்கு இங்லீஷ் மீடியான்னாலே ஒரு கவர்ச்சிதான். நீ யார சொல்ற



ராதா :  டி. வி மீடியாவுல மிரட்டிக்கிட்டிருக்கிற பர்கா தத்தும், மத்திய அரசுக்கு சாதகமா எழுதிகிட்டிருக்கிற வீர் சங்கவியையும் தான் சொல்றேன். 

கண்ணன்:மீடியா அதிகாரத்த வெச்சிகிட்டு பவர் புரோக்கரா மாறுவது ஒண்ணும் புதுசு இல்லையே. இங்க 'சோ' ல்லாம் இது மாதிரி ஆள் தானே.



ராதா :  விக்கி லீக்ஸ் ரகசியங்கள் பத்திகிட்டு எரியுதே.
கண்ணன்: விடு, அமெரிக்கா அம்பலப்படட்டும்

ராதா : ஸ்பெக்ட்ரம்..

கண்ணன்: வேணாம், விட்டுடு.. நான் திராவிடன்.



ராதா :  இல்லப்பா, இதுல காட்டுற ஆர்வத்த போபால் விஷவாயுப் பிரச்சினை, வடகிழக்கு மாநில காடுகளை கனிமங்களை எடுக்க வேதாந்தா மாதிரி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கறதுல அரசாங்கம் காட்டுற வேகம்.. இதபத்தியெல்லாம் பேசமாட்டேங்குறாங்களே
கண்ணன்: சரி.. கூல் டவுன். விஜய் அரசியலுக்கு வரப்போறாராமே



ராதா :  அதுக்குள்ளயா பீல்டவுட் ஆயிட்டாரு?
கண்ணன்: எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான். ஏய், அன்னைக்கு நீ என்னன்னல்லாம் செஞ்ச தெரியுமா? இன்னைக்கும் இஞ்சி சாறு பிழிஞ்சி எலுமிச்சை எசன்ஸ் போட்டு ஜுஸ் வேணுமா?



ராதா :  u bleady bitch..

Friday, December 3, 2010

எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011

இப்பகுதியில் வரும் புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாக உள்ள, எனது கவனத்திற்கு வந்த சில நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் “ஆம் எனும் கிணறு” - சிறுகதைத் தொகுப்பு

90 களின் தொடக்கத்திலிருந்து கவிதைத் துறையில் இயங்கி வருபவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். சுஜாதாவின் Good book ல் இடம்பிடித்தவர். இவரது “என்பதாயிருக்கிறது” தமிழின் சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. கவிஞராக அறியப்பட்ட ஞானதிரவியத்தின்' அகஒட்டு' நாவலைப் படித்துவிட்டு திகைத்துப் போனேன். அத்திவெட்டி எனும் கிராமம் சார்ந்த கள்ளர் இனக்குழுவைப் பற்றிய ஒரு காத்திரமான பதிவு இது. கிராமங்களில் நிகழும் சாதிப் பஞ்சாயத்தின் மூர்க்கத்தைப் பேசுகிறது இப்புதினம். உலக மயமாக்கலின் பாதிப்புகளை மீறியும் இன்னும் நம் நிலப் பிரபுத்துவ குரூரங்கள் அழிந்துவிடவில்லை என்பதை வெளிப்படுத்தும் படைப்பு. இப்புதினம் ஞானதிரவியத்தின் புனைகதைத் திறமையை வெளிப்படுத்தியது.

சமீபத்தில் இவரது “ஆம் எனும் கிணறு” சிறுகதைத் தொகுப்பின் மெய்திருத்தப் பதிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிகுந்த ஹாஸ்ய உணர்வைத் தூண்டுவதாக இத்தொகுப்பின் கதைகள் அமைந்திருக்கின்றன. அதே வேளையில் இடதுசாரி பின்புலம் கொண்ட இவரது அரசியல் சார்பும் இக்கதைகளில் வெளிப்படுகிறது. அழிந்து வரும் கிராமிய மதிப்பீடுகளை பற்றி பேசும் இக்கதைகள் வரும் புத்தகச் சந்தைக்கு அன்னம் வெளியீடாக வரவுள்ளது. சிறுகதை விரும்பிகள் தவறவிடக்கூடாத நல்ல தொகுப்பு.

Thursday, December 2, 2010

அருந்ததி ராய்க்கு ஆதரவாக நிற்போம்.

                 பல்வேறு தேசிய இனங்களின் சுயத்தை அழித்து ஊதிப் பெருத்ததுதான் இந்திய பெருந்தேசியம். காஷ்மீரையும் இப்படித்தான் கபளீகரம் செய்தது. காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோம்  என்கிற நேருவின் உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டது.
                       காஷ்மீரிகள் ஒரு தேசிய இனம். காஷ்மீர் தனி நாடு. அது இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதில்லை. அது காஷ்மீரிகளின் தேசம். இதைத்தான் அருந்ததி ராய் சொல்கிறார். வழக்கம் போல நமது தேச பக்தர்கள் சாமியாடத் தொடங்கிவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதியக் கோரியிருக்கிறது. அமெரிக்கா, பாபர் மசூதி, மோடி, மாவோயிஸ்ட் என எல்லா அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சிறிதும் அஞ்சாமல் கருத்து சுதந்திரத்துடன் இயங்கி வருகிறார் அருந்ததி ராய். இந்த அறச்சீற்றமும், போர்க் குணமும் எல்லா எழுத்தாளர்களுக்கும் வேண்டும். அருந்ததி ராய் கைது செய்யப்பட்டால் அது கருத்து சுதந்திரத்தின் மீது படிந்த தீமையின் நிழல். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுமையும் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து நிற்போம்.

வா. மணிகண்டன் - புதிய கவி உலகு

புத்தாயிரம் வழங்கிய கவிஞர்களில் வா.மணிகண்டனும் குறிப்பிடத் தகுந்தவர். 
சமகால இளைஞர்களின் மன ஒட்டங்களை அறிந்து கொள்வதற்கு இவரது 
கவிதைகள் உதவுகின்றன. நேரடித் தன்மையுடையதைப் போன்று பாவிக்கும் 
இவரது கவிதைகள் அதன் இயல்பான எளிமையை மீறியும் இளைஞர்களின் 
சிக்கல் மிகுந்த அக உலகை குறியீடான சம்பவங்களின் வாயிலாகக் காட்டிச் செல்கின்றன.
இவரது “கண்ணாடியில் நகரும் வெயில்” தொகுப்பை கவிதை ஆர்வலர்கள் வாசிக்கலாம். 
 
ஏணிக‌ளை வ‌ரிசையாக‌க் க‌ட்டி
அருவி மீது ஏற‌ முய‌ன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமான‌வ‌ன் சொன்னான்.

உச்சியை அடையும் க‌ண‌ம்
விழ‌த்துவ‌ங்கினேன்.

எப்ப‌டி
எலும்பு மிஞ்சிய‌து என்றும்
இலை
சுழ‌ன்று
விழும்
தேவ‌த‌ச்ச‌ன் க‌விதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.

இட்லி வாங்கி வ‌ர‌ச் செல்வ‌தாக‌
தாயுமான‌வ‌ன்
கிள‌ம்பிச் சென்றான்.


===
 
ஓய்வெடுக்கும் கடவுள்

முடிந்த பகலின் எச்சங்கள் 
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது கொஞ்சம் மது.
நீங்கள்இரவொன்றை கொண்டாடாமல் கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில் தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில் தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.

மழையின் உற்சாகம் கரைந்து கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.

நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.
 
ஒரு துப்பாக்கியின் பெய‌ர்

கெளசிக்
துப்பாக்கி வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில் நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர் வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின் குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா 
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

பா. செயப்பிரகாசம் வேண்டுகோள்

அன்புடையீர்,வணக்கம்.
"மஹிந்த அரசின் போர்க்குற்றங்கள் -சேனல் -4   வெளியிட்ட அத்ர்ச்சிக் காணொளி "
என்ற தலைப்பில் பொங்குதமிழ் இணையம்   ponguthamizh.com இப்போது வெளியிட்டுள்ள காணொளியை  உடனே காணுங்கள் . மஹிந்த லண்டனுக்கு வருகை தந்துள்ள இந்நாளில் அது வெளியிடப் பட்டுள்ளது
பா.செயப்பிரகாசம் .

Tuesday, November 30, 2010

மிகச் சிறிய வார்த்தைகளில் காட்சிகளை வடிவமைக்கும் நரன்

இளம் கவிஞர்களில் எனது மனதுக்கு நெருக்கமான கவிதைகளை நரன் எழுதுகிறார். மிகச்சிறிய வார்த்தைகளின் ஊடாக அவர் கட்டமைக்கும் காட்சிகள் அபூர்வத் தன்மை  வாய்ந்தவை. மிக எளிமையாக, கவித்துவத்தையும் இழந்து விடாமல் கவிதையை உருவாக்கும் கலையை நாம் நரனிடமிருந்து அறிந்து கொள்ளலாம். வெகுவாக சிறு பத்திரிகைகளின் வழியாக காணக்கிடைக்கும் நரனுடைய கவிதைகள் இன்னும் ஒரு தொகுப்பாக உருக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன். அவர் விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். கீழே உள்ள நரனின் கவிதைகள் உங்களுக்கும் உவப்பளிக்கும் என நம்புகிறேன்.  

விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .


"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.



மண்புழு
---------------
மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை 
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி   
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன் 
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு  உடலாய் ,
திசைகொரு  உயிராய்....
பிரிந்து ,பிறந்து
பிறந்து,பிரிந்து

ஆனால் எல்லாம் சம வயதில் .
வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
---------------------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்
1853 சூன் 7ம் திகதி
137 ம் பக்கம்.
கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய
வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .
7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது .
கொல்கத்தா  அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்  வரியேரிய 
அப்புலியின்  உடல் தைலம் பூசி
பாதுகாக்கப்பட்டு வருகிறது .
டைரி குறிப்பின்
சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும் 
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.
பலநூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்து பழங்குடியொருவன்
தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .
 

திரு .பெலிக்ஸ்
------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான
63வயது திரு .பெலிக்ஸிடம்
177ஆண்டுகள் பழமையான
மது புட்டியொன்று கிடைத்தது .
அவரின் 23ம் வயதில் பொலிவிய நாட்டு
கடற்பயண  நண்பனொருவன் அதை பரிசளித்தான் .
இதுவரைஅம்மதுவை  3முறை மட்டுமே
அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை
அப்போது அம்மது இனிப்பு  சுவையுடையதாயிருந்தது

37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....
அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .
 தன்  58வயதில் சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்
அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது

கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த
அம்மதுவை தன்80வது பிறந்த நாளில்
அருந்த திட்டமிட்டிருந்தார் .
அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை
தான்  அறிவேனென  நம்பிகொண்டிருந்தார்  .
ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .
மிச்சம் இருந்த மதுவை
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .
17ஆண்டுகள் மீதமிருந்தது .

Monday, November 29, 2010

வெய்யிலின் புவன இசை - சமன் குலைக்கும் கவிதைகள்

             புத்தாயிரம் தொடங்கி பத்தாண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்க் கவிதையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்தால் அதன் விளைவு திருப்தியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. இப்புத்தாயிரத்தின் தொடக்கத்தில் - தனித்த கவிநடை, புத்துணர்வுமிக்க மொழி ஆளுமை, கவிதை வடிவம் குறித்த பிரக்ஞை, தெளிவான சமூக, அரசியல் பார்வை, வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ளும் முயற்சி என்கிற கதியில் கவிதைத் தளத்தில் இயங்கியவர்களில்  முகுந் நாகராஜ், செல்மா பிரியதர்சன், இசை, தமிழச்சி, லீனா மணிமேகலை, இளங்கோ கிருஷ்ணன், தேன்மொழி போன்றோர்களை முக்கியமானவர்களாகக் கருத முடியும்.

          இவர்களைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக எழுத வேண்டும் என்கிற தவிப்புடன் நரன், துரன் குணா, கணேச குமாரன், திருச்செந்தாழை, லஷ்மி சரவணக்குமார், செந்தீ, மாதவன், வ. மணிகண்டன், லிபி ஆரண்யா, சக்தி ஜோதி, ஹரிகிருஷ்ணா, தென்றல், ஊர்சுலா ராகவ், அமிர்தராசு போன்றவர்கள் பாரதி விழைந்த சொல் புதிதாய், சுவை புதிதாய் சோதிமிக்க நவகவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கவிதை ஆர்வலர்கள் கவனித்திருக்க முடியும். இந்த அணிவரிசையில் வெய்யிலின் கவிதைக்குரல் முக்கியமானது. அவரது “புவன இசை“ கவிதைகள் மூலம் தமிழ்க் கவிதை எத்தகைய உயரத்தை எட்டியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

           ஒரு வேட்டை நாயைப் போல கவித்துவத்தின் எல்லைகளைத் தேடி அலைகிறது வெய்யிலின் மொழி. வாசிப்பவர்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் நமது வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தென்படும் மூர்க்கத்தை, வன்முறையை, குரூரத்தைக் காட்டிச் செல்கிறார் வெய்யில். இத்தகைய வன்மங்களை தனக்குள் ஒளித்துக் கொண்டு புன்னகைப்பதாய் பாவிக்கும் இச்சமூகத்தின் போலித்தனத்தைக் கண்டு புழுங்கும் இவரிடமிருந்து பிறக்கும் வார்த்தைகள் வெப்பத்தைக் கக்குகின்றன.

          இவர் சிந்திக்கும் முறை அதை வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கும் சொற்கள், கவிதையை உருவாக்கும் தொழில் நுட்ப உத்தி அனைத்தும் அபாரமானவை. ’நீங்கள் / எதை வேண்டுமாயினும் / தின்னுங்கள் / நானோ / என் பன்றிகளுக்கு / ரோஜாக்களையே தருவேன்’ என்கிறார் வெய்யில். பன்றிகளுக்கே ரோஜாக்களைத் தருபவர் கவிதை விரும்பிகளுக்கு எத்தகைய உன்னதங்களைப் பரிசாகத் தருவார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

              பெரும்பாலும் வெய்யிலின் கவிதைகளுடைய மையம் ரௌத்திரமாக இருக்கிறது. அன்புக்காக ஏங்கி கைவிடப்பட்ட ஓர் உதிரியின் கோபம் இது. இவர் தன் கோபத்தை பலவிதமான காட்சிகளாக, படிமங்களாக மாற்றுகிறார்.


                            “ என் நிஜங்களை நடுங்காமல் கேட்கும்
                               சில அனாதைக் கடவுள்களும்”

                             “ மஞ்சள் நிறப்பூ மெல்ல மெல்ல
                                மரத்தை தின்கிறது வேரோடு”

                            “ நம் நிலத்தின் விலை என்பது
                               எடைக்கு எடை நரமாமிசம்”

                            “ கருநீல கடலுக்குள் மெல்ல மூழ்குகிறது
                               என் ஒற்றை அறை”

                           “ வெற்றுக் கோப்பைகளில்
                              ததும்பி வழிகிறது
                              உயிர் நிறத்து இசை”

    இப்படி ரௌத்திரத்தை ஓர் அழகியலாக பயிற்றுவிக்கும் வெய்யில் இதயத்தில் ஈரமற்றவரா? கண்டிப்பாக இல்லை. அளப்பறிய கருணை உள்ளத்தால் தான் “ கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” என கோபம் பழக முடியும். சுயநலத்தால் பேராசையால் அன்பைத் தொலைத்த சமகால வாழ்வின் மீதான கோபம் இது. போர், சாதி, மதம் என மனிதர்கள் பிளவுபட புதிது புதிதான வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தன்னுடைய நிலத்தை இழந்த ஒருவன் நாடோடியாய் வேற்று மண்ணில் அலையும் நிலையை ஏகாதிபத்தியத்தின் பேராசை ஏற்படுத்தியுள்ளது.

               விமான நிலையங்கள், தங்க நாற்கரச் சாலைகள், தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என இவற்றால் நிலம் விழுங்கப்படுவது ஒருவகை. ஈழம், ஈராக் எனப் போரால் நிலம் பிடுங்கப்படுவது மற்றொரு வகை. இப்படி ஏதோ ஒரு வகையில் நிலம் நீங்கி உதிரியாக இச்சமூகத்தில் கரையும் ஒருவனின் கோபத்தைத் தான் வெய்யிலின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. ஓர் உதிரிக்கு எத்தகைய நட்புகள், தொடர்புகள், பழக்கங்கள் வாய்க்கும்? வேசிகள், சாத்தான்கள், துர்தேவதைகள், மயானம், மண்டை ஓடு, மரணம், மது, கொலை, தற்கொலை, ரத்தம் என திகில் கொள்ள வைக்கும் கொடுங்கனவாக விரியும் இக்கவிதைகளில் பதிவாகியிருப்பது இத்தகைய உதிரி ஒருவனின் மனம் தான். ஒருவகையில் கவிதை எழுத வரும் ஒவ்வொருவருமே ஓர் உதிரி தான்.இந்த சமூகத்தில் ஒன்ற முடியாமல் உதிர்ந்தவர்கள். வெய்யிலின் கோபத்தை, அவரது ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். ஒரு மனிதன் தனக்குள் மிகப்பெரும் தீயை மறைத்து வைத்துக் கொண்டு வெறும் பாசாங்குடன் அமைதியாக எத்தனை நாட்களுக்குத் தான் நம் முன் நடமாடுவான். நாம் அவனது நெருப்பை அறியாவிட்டால் அது இந்த சமூகத்தை எரித்துவிடும். கலைஞன் தன் நெருப்பை கவிதையாக மாற்றுகிறான் அதை இந்த சமூகம் ஜோதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

                  வெய்யிலின் கோபம், அன்பு, மொழி எல்லாமே முரட்டுத்தனம் வாய்ந்தவையாகத் தோன்றும். ஆனாலும் அவருக்குள் இருப்பது பச்சைக் குழந்தை ஒன்றின் மிருதுவான மனம். புத்தர் அழுதார், முத்தம்  போன்ற கவிதைகளிலிருந்து அவர் எத்தகைய இளகிய உள்ளம் படைத்தவர் என்பதை அறியலாம் இதில் புத்தர் என்பது வெய்யில் தான். அவருடைய கண்ணீரை மழை என்றோ பனித்துளி என்றோ கூறி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம்.

             வெய்யில் கவிதைகளின் உள்ளடக்கம் எவ்வளவு வலிமையானதோ அதைப் போன்றே அவருடைய கவிதை அழகியலும், தனித்துவமும், தீவிரமும் கொண்டவை. மிகச்சில மாதிரிகளிலிருந்தே இதை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும். இவருடைய உவமைகள், படிமங்கள் யாவும் நவீன தமிழ் கவிப் பரப்பிற்கு கிடைத்த பரிசுகள். “உலர்ந்த ரொட்டித் துண்டைப் போலிருக்கிறது / பசியற்ற இக்காலை” என இவர் சிந்திக்கும் விதமே புதுமையாக இருக்கிறது.

                                 “ விழிப்பூவுள் பெருகும் / கனாச்சுனை திறக்க”

                                 “ உருகிக் கரைந்து / கட்டுமரமானோம் யானும்
                                    என் காதற் தையலும்”

                                “ விஷம் கலக்காத முத்தத்திற்கு
                                    நாம் அருகதையற்றவர்கள் நண்பனே”

                                “ நேற்றிரவு உடைந்து சிதறிய / சாராய தம்ளரில்
                                   வெகு நேரம் கசிந்து கொண்டிருந்தது
                                   அம்மாவின் வாசனை”

                இத்தகைய கவித்துவ வரிகளுக்கு எத்தகு விளக்கங்களைக் கொடுத்து நாம் திருப்தி அடைய முடியும். வெய்யில் கவிதையை ஒரு நுட்பமான கலையாக பயின்றிருக்கிறார். அதைச் செதுக்கி செதுக்கி மிக உயரிய ஓர் அணிகலனைப் போல தகதகவென பிரகாசிக்கச் செய்கிறார். இவர் கவிதைகள் மிகுந்த வசீகரத்துடன் நம்மை உள்வாங்கிக் கொள்கிறது. அவற்றிலிருந்து வெளியேறும் நம்மை நிம்மதியற்றவர்களாக, பித்துப்பிடித்தவர்களாக அலைக்கழிய வைக்கிறது. இது ஓர் ஆகச்சிறந்த கலையின் வெளிப்பாடு. நமது ஆதிக்கச் சமூகம் ஒவ்வொரு மனிதனையும் அதன் அங்கமாக இயங்குவதற்கான ஒத்திசைவுடன் தயாரிக்கிறது. ஆனால் கலையோ இந்த ஒத்திசைவைக் கலைக்கிறது. ஒத்திசைவு என்பது மனிதர்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைந்த பின் நிகழ வேண்டியது.  எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளுடனும் ஒத்திசைவாக இயங்குவதற்கேற்ற வண்ணம் மனிதத் தன்னிலை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கலை அதில் குறுக்கீடு செய்கிறது. இத்தகைய சமன் குலைவைதான் வெய்யிலின் கவிதைக் கலையும் நிகழ்த்துகிறது. வெய்யிலின் கவிதைகள் நம் மனசாட்சியை ’சுள்’ளென்று சுட்டாலும் அது வெய்யிலைப் போலவே நமக்கு அத்தியாவசியமானது.

எனது கவிதைகள் சில

எரிந்து பார்ப்பது

 எரியும் அவ்வுடலைப் பார்ப்பது
எத்தனை ஆனந்தம்

பரத்தையர் பலர் தீண்டி
இன்பத்தில் திளைத்த உடல்

மதுவொடு லாகிரியில்
மயங்கித் திளைத்த உடல்

நஞ்சென்றும் அமுதென்றும் பாராது
உண்டும் செறித்த உடல்

ரத்தமூற ர
த்தமூற
யுத்தம் செய்ய அஞ்சாத உடல்

வியாதிகள் அனைத்தையும்
விருந்துக்கு அழைத்த உடல்

நோயில் விழுந்து வலியில் துடித்து
பாயில் கிடந்த உடல்

திகு திகு திகுவெனத் தீயில் எரிகிறது

எரியும் அவ்வுடல் என்னுடலெனினும்
எரிவதைப் பார்க்கினும்
எரிந்து பார்ப்பது
எத்தனை பேரானந்தம்


விதி

கயிற்றில் நடக்கும்
பக்குவம் கூடிவராமல்
அடிக்கடி
தவறி விழுந்து விடுகிற
கழைக்கூத்தாடி நான்

இதில் துர்வாய்ப்பு
என்னவென்றால்
நான் நடக்கும் கயிறு
இரண்டு கம்புகளுக்கிடையே
கட்டப்பட்டதன்று

இரண்டு மலைமுகடுகளுக்கிடையே
கட்டப்பட்டதென்பது தான்


வெயிற்காலம்


நிழல்கள் அருகும் காலத்தில்
வழக்கம்போல் பரவுகிறது வெய்யில்

நம் தோல்களை மட்டுமல்லாமல்
வார்த்தைகளையும் அது சூடாக்கிவிடுகிறது

நாய்களின் கடைவாயில் கானல் வடிய
தார்ச்சாலைகளில் அவை பீதியுடன் அலைகையில்
இந்த நிலத்தைப் போல
நம்முடைய நாவுகளும் வெடித்துப் பிளவுறுகிறது

முதியவர்களை இரக்கமின்றி
பலிகொள்ளும் இச்சண்டித்தனமான வெய்யில்
பைத்தியக்காரர்களை ஒன்றும் செய்ய முடியாமல்
கைபிசைந்து நிற்கிறது

இதற்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வகையில்
இளங்குழந்தைகளின் பாதங்களில் அது
சூட்டுக்காயங்களை ஏற்படுத்திவிடுகிறது

இக்கொடிய வெயிற்காலத்தில்
காதலியைக் கொஞ்சுவதும்
ஒரு கலைப்படைப்பை ரசிப்பதும்
ராட்சசகுணம் கொண்ட மிருகத்துடன்
சண்டை போடுவதைப் போலிருக்கிறது


தனித்துவிடப்பட்ட வீடு

அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்த மனைவி
வந்த அவசரத்தில் மஞ்சள் நிற ரோஜாச் செடிக்கருகில்
வாங்கிவந்திருந்த சந்தனவண்ண செம்ப்பருத்திக்கன்றை
வைத்து தண்ணீர் ஊற்றினாள்.
நீண்டநாள் எதிர்பார்த்திருந்த ஸ்பைடர்மேன் ஸ்டிக்கரை
நண்பன் கொடுத்ததாய்ச் சொன்ன கார்க்கி
அதைக் குளியலறைக் கதவில் ஒட்டினான்
முன்பாக குளிர்ச்சாதனப் பெட்டியில்
அர்னால்டையும் போக்கிமானை படுக்கையறையிலும்
அவன் அம்மாவை முகம் பார்க்கும் கண்ணாடியிலும் ஒட்டியிருந்தான்
வண்ண வொயர்களாலும் மனிதர்களாலும் அலங்கரிக்கப்பட்ட
தோரணத்தை ஓவிய வகுப்பில் செய்திருந்த சிந்து
இரவு படிக்க ஆரம்பிக்கும் முன்பாக அதை பூசையறை
வாயிலில் கட்டினாள்
தேர்வுக்குப் படிக்கத் தயாரித்திருந்த கால அட்டவணையை
தன் மேசைக்கு மேற்புறச் சுவரில் ஒட்டினாள் சுடர்
நாங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்
விடியற்காலை அவ்வீட்டை விட்டு வெளியேறினோம்
புதிய வீட்டில் பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டு
படுத்த எங்கள் ஒவ்வ்வொருவரின் செவியிலும்
வீடு தன் தனிமையைச் சொல்லி அழுது புலம்பியது
நள்ளிரவில் ஒன்றுக்குவிடச் சென்ற கார்க்கி
அவன் அம்மாவை எழுப்பி ஸ்பைடர்மேனைக் காணோம்
என்று அழுதுகொண்டிருந்தான்.

மரணமும் கவிதையும் - சி. மணியை முன்வைத்து

கவிஞனின் சொற்கள் கலையாகவும், கலை ஆவணமாகவும் சமூகத்திற்குள் உறைந்துவிட்ட பிறகு, சமூகத்தின் பொது வெளியிலிருந்து மரணத்தால் அவன் உடலை மட்டும்தன் காணாமல் போகச்செய்ய முடிகிறது.
மரணம் என்பது மீண்டும் மீண்டும் கவிஞர்களின் உடலை மறைத்து வைக்கிற கடவுளின் சிறுபிள்ளை விளையாட்டு.
 சராசரி மனிதர்களுக்கு மரணம் என்பது அச்சத்தின் திரைக்கு அப்பால் இருக்கிற மர்மமும், திகிலும் நிறைந்த இருள்வெளி.  அதிகாரத்திற்கெதிராக சதா சமர் புரிந்துகொண்டிருக்கும் கவிஞனுக்கோ மரணம் ஒரு பரிசு.  அது சுவை மிகுந்த கனி.
 மரணத்திற்குப்பின் கவிஞன் உடல் ஒரு தாவரத்திற்கு எருவாகும் வேளையில் அவ்னது கவிதைகளோ  பிரபஞ்சத்தின் விழிக்கு ஒளியாகிச் சுடர்விடுகிறது.
 கவிஞனின் மரணம் குறித்து இப்படி மிகையாகச் சிந்திப்பது மரணம் பற்றிய நடுக்கங்களிலிருந்து நம்மை (அல்லது) என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியை அளிப்பதாக இருக்கிறது.
 மரணத்தைக் கண்ணோடு கண்கொண்டு பார்த்த பாரதியிலிருந்து இன்று அப்பாஸ், சி.மணி வரையிலான ஒவ்வொரு கவிஞர்களின் இழப்பிற்குப்பின்னும் மரணம் கவிஞர்களுக்குப் பழக்கமானதும், தவிர்க்கமுடியாததாகிவிட்டது.  அது நாம் ஒவ்வொருவரும் எழுதியே ஆகவேண்டிய இறுதியான, உன்னதமான கவிதை.
 கவிஞனின் மரணம் ஓர் உன்னதமான கவிதை என்றால் அது அவன் பிரிந்து சென்றிருக்கும் மனைவிக்கும், குழந்தைக்கும் மட்டுமல்லாமல் இந்தச்சமூகத்திற்கும் வாசிக்க உவப்பானதா?  எனும் கேள்வியும் நமக்குள் எழுகிறது.
 கவிஞனின் இருப்பு என்பது அவனது மனைவிக்கு, குழந்தைக்கு மற்றும் இந்தச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்கூட ஒரு இடையூறாக தொந்தரவாகவே இருந்து வந்திருக்கிறது.  அதே வேளையில், தவிர்க்க இயலாததாகவும் இருப்பதுதான் ஆச்சர்யமானது.
 சர்க்கரை நோயாளிகளின் உள்ளங்கையில் இருக்கிற இனிப்பு பதார்த்தத்தைப் போல, குற்றவாளிகளுக்கு முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் தூக்குக்கயிற்றைப் போல குருடனுக்குப் பரிசாகக் கிடைத்த ஓவியத்தைப் போல, சாத்தானின் கையிலிருக்கிற வேதபுத்தகத்தைப் போலத்தான் இச்சமூகத்தில் கவிஞனின் அவசியமும் இருந்து வருகிறது.
 அவன் விழுங்கமுடியாத அமுதம்.  துப்ப முடியாத விஷம்
 இசைவின்மை எனும் நாள்பட்ட நோயுடனும், விடுதலையின் மீதான ஒருதலைக் காதலோடும் செத்துமடிந்துவிட்ட கவிஞர்களின் ஆவி பீடிக்கப்பட்ட சொற்களை மதிக்கும் சமூகத்தின் களஞ்சியங்கள் தானியங்களாலும், தங்க நாணயங்களாலும் நிரம்பும், அவர்களது சோற்றுப்பானைகள் ஒருபோதும் உலர்வதில்லை. அங்கு போரும், வன்முறையும் இல்லை, காதலும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் என நற்செய்திகளைக்கொண்டு வரும் தேவதை ஒருத்தி தூக்கமற்ற பொழுதில் காதில் ரகசியமாய்ச் சொல்லிச் சென்றாள்.  அதை ஒரு வதந்தியைப் போன்றோ, புராணிக நம்பிக்கையைப் போன்றோ, சமூகத்தில் ப்ரப்பும்படி வேண்டிக்கொண்டதை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
*****
 ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துப் பசியைப் போக்கிவிடலாம்.  சாராகயக் கடைகளைத் திறந்தும், வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாய்க் கொடுத்தும் மக்களை சந்தோஷப்படுத்தலாம்.  கருப்புச் சட்டங்களின் மூலம் வன்முறையை, தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் எனும் எளிமையான சமன்பாடுகளும், தீர்வுகளும் அரசாங்கத்திடம் இருக்கிறது.
 நோய்களைத் தீர்க்கவும், கணவன் மனைவியிடையே உறவைச் செழிக்கவைக்கவும், அரசாங்கம் கவிழ்ந்துவிடாமல் உதவவும் கூட மதத்தலைவர்களிடம் நிவாரணங்கள் இருக்கின்றன.
இந்த அளவிற்கு அமைதியாக, பிரச்சினையில்லாமல் இத்தேசத்தில் மாந்தரெல்லாம் வாழும் வேளையில் ஏனிந்த வாழ்வென்னும் வளர் குழப்பம் எனத் தொடங்கும் சி. மணியின் கவிதை உருவாக்கும் பதற்றத்தை யார்தான் விரும்புவார்?  நிலவுகிற அமைதி, சமாதானம், மகிழ்ச்சி அனைத்தும் பொய்யானது புஐயப்பட்டது எனத் தெரிந்தும் பாவனைகளையே வாழ்முறையாகக் கொண்டவர்கள், நோயை ரசிக்கக் கற்றவர்கள், அடிமைத்தனத்திற்குப் பழகிக்கொண்டவர்கள் குழப்பத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.
 சமூகத்தில் நிலவும் பேதங்கள், ஏவப்படும் வன்முறைகள், இயற்கையை, சாதாரண மனிதர்களைக் காவுகொண்டு கட்டியமைக்கப்படு அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் இவற்றைச் சிந்திக்கையில்தான் குழப்பம் எழும். எது வளர் குழப்பமாகும்,  வளர்குழப்பம்தான் கலகமனமாக பரிணாமம் கொள்கிறது.  அதிகாரமும் குழப்பமும் எதிரெதிரானது.  கலக்கத்தை விதைக்கும் கவிஞனை இதனால்தான் அதிகாரச் சமூகத்தால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
 அறுபதுகளில் தொடங்கி சற்றேரக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் தன் வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியத்திற்காக அர்பணித்துக்கொண்ட சி. மணியின் கவிவாழ்வு முக்கியத்துவம் உடையது.  நாம் கொண்டாடக்கூடிய அளவிற்குப் பெருமை படைத்தது.  வெட்டவெளி இது/ அறை அல்ல / என சில கணம் துள்ளியது என்மனம்/ மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்/ தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / எழும்பிக்குதித்தேன் இடித்தது கூரை’  என இவ்வமைப்பையும், நமது அடிமைத் தனத்தையும் விமர்சனப்படுத்தும் பார்வைகளை அளிக்கவல்லவை சி.மணியின் கவிதைகள்.  60 களின் கவிதை அழகியலைக் கடந்து தமிழ்க்கவிதை உலகம் இன்று எங்கோ முன்னேறி வந்திருக்கிறாது.  இருந்த போதும், விடுதலைய விழையும் சி. மணியின் நவீன மனம்தான் அவரது கவிதைகள் மீது நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது
 ஆங்கிலக் கல்வி அளித்த நவீன நோக்கும் சங்க இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கணப் பரிச்சியமும் உடைய தமிழ் மரபின் தொடர்ச்சியும் இணைந்து உருவான கூட்டுவிளைவுகள் தாம் சி. மணியின் கவிதைகள். கலித்தொகை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சில பிரயோகங்களை தனது கவிதைகளுடன் அவர் நேரடியாக இணைக்கும் போது அவை புதிய வண்ணத்தில் மிளிரக் கூடிய அழகை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது. தாவோ, ஜென், சூஃப், ஜெ.கிரு நமூர்த்தி எனத் தத்துவ தேடல் கொண்டிருந்த இரவது கவிதைகள் அவற்றின் சாரத்தையும், சத்தையும் தம்முள் செரித்துக்கொண்டிருப்பதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது.
காமம், காதல், அநித்யம், மரணம், பொருந்தாமை, இயற்கை, அன்பிற்கான விழைவு, ஏக்கம், குரோதம், பழி, வெறுமை, சலிப்பு, நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போர்க்குணம் என விரிவான பாடுபொருள்களைக் கொண்டு அரைநூற்றாண்டுகள் தொடர்ந்து கவிதை எழுதுவதற்கு மூர்கமான இலக்கியப் பசி வேண்டும். எழுதி, எழுதி நிறைவடையாத, சோர்வடையாத திடம் கொண்ட கலை மனம் வேண்டும். சி. மணிக்கு அவை வாய்க்கப் பெற்றிருந்தது.
கவிதைகளில் சொற்கள் என்பவை அர்த்தங்கள் புதையுண்டிருக்கும் கல்லறைகளல்ல, திசையெங்கும் நறுமணத்தை கமழச் செய்யும் மலர்களையும், சத்தும் சாறும் மிகு கனிகளையும் கொண்டிருக்கும் விதைகள் அவை. கவிதையை நாள்தோறும் உயிர்த்திருக்கவும், உயிர்ப்பிக்கவும் கூடிய இயற்கை விளைவாக மாற்றும் ஆற்றலால்தான் கவிஞன் ஆகிருதி கவனம் பெறுகிறது. சி. மணியின் கவிதைகள் காலம் தோறும் இயங்கிக்கொண்டிருக்கும் உயிரோட்டமுடையவை. தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொண்டு தன்னுடைய புதிய வாசகனுக்கு இளமையான அனுபவத்தைத் தரக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. ஒவ்வொரு கவிதையையும் புதிதாகச் சொல்லிப்பார்க்கும் அவரது பெரு விருப்பை, வடிவங்களில் கொள்ளும் பரிசோதனைப் பேரார்வத்தை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
கவிஞனுக்கும் அனுபவத்துக்கும், கவிஞனுக்கும் அகத் தேட்டத்துக்கும், கவிஞனுக்கும் லட்சியத்திற்குமான வினைகளிலிருந்து தோன்றும் கவிதையில் சொற்களின் பங்கு மகத்தானது. இந்த உலகில் சொற்களாக்கப்படாத அனுபவங்களும், பொருட்களும் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில் கவிஞனின் கவிதை சொற்களோடு மெளனங்களையும் சேர்த்துக்கொண்டு தனது அர்த்தத்தை நிரப்பிக்கொள்ளும் தவிப்போடு இருப்பதை கவிதையின் உயிர்ப்பு எனக்கொள்ளலாம் திறப்புகளையும், அவனது வாசிப்பு தன்னை ஒரு புதிய கவிதையாக மாற்ற வேண்டும் என்கிற தவிப்பையும் கொண்டிருக்கி
’முடிவற்ற முறைகளில் முழுமையாக்கப்படக்கூடிய ஆனால் என்றைக்குமே முழுமையடையாத கவிதையையும் அதன் சொற்கள் பொருந்து முறைகளையும் தேடிக்கொண்டே இருப்பது கவிஞன் வேலை’ என பால் வெலரி சொல்வது போல தேடிக்கொண்டே இருந்தவர்தான் சி. மணி.
கவிதைத் துறையைக் கடந்து மொழிபெயர்ப்பு அகராதியியல் போன்ற துறைகளிலும் இவர் இயங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்கத் தமிழறிஞர் பேராசிரியர் ஹெரால்டு  ஃப்மனுடன் இணைந்து தமிழ்வினைச்சொல் அகராதியை உருவாக்குவதிலும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உருவாக்குவதிலும் இவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதும் பராட்டப்படக்கூடியதும் ஆகும்.
ஒரு கோப்பை மது அருந்தியதற்குப் பின் நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும் இறந்துபோன எந்தவொரு தேசத்து மகாக்வியைப் போலவும் சி. மணி நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளக்கூடியவர்தான்.
கனிந்த அவரது மரணத்தின் நிழலில் அவரது நினைவைக் கொண்டாடும் பொருட்டு பியர் அருந்தத் தொடங்கினேன். அப்போது என் தோள் மீது கைபோட்டு சி. மணி கவிதை சொன்னார்.

    ’இலக்கிய வழியில் நிரந்தரம் கிடைக்கும்
    கலைகள் கொண்டு அறிவினைக் கொண்டு
    அறமும், அன்பும் கொண்டு மனிதன்
    சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட முடியும்’

எனது மதுக்குவளை காலியாகிவிட்டது. அப்பாசும், சி. மணியும் சாவைச் சுடுகாட்டில் எரித்திருக்கிறார்கள். நாமும் கூட எரிக்கலாம். அதுவரை இன்னமும்கூட நமக்குக் கவிதைத் தேவைப்படுகிறது.

நிலாவை வரைபவன் - ஒரு கதையின் கதை

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த எனக்கு புதினம் எழுதும் ஆசை எப்படி வந்தது எனக் கேட்டால் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நமது மனதின் இயக்கம் ரகசியமாகவும், மர்மமாகவும் இருக்கிறது. மனசுக்குள் ஏதோ ஒரு சன்னல் திறந்ததுபோல் இருந்தது. அருகில் தெரிந்த காட்சிகள் தெளிவாகவும், சற்று தூரத்தில் தெரிந்த காட்சிகள் தெளிவற்றும் மங்கலானதாகவும் விளங்கியது. இந்த சன்னல் திறந்தும் மூடியும் விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது. சன்னலூடாகத் தெரிந்த காட்சிகளில் ஒருவித கனவுத் தன்மையும், தொடர்ச்சியும் காணப்பட்டது. அந்த சன்னலுக்கு அப்பால் நானும் எனக்கு நெருங்கியவர்களுமே இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அனுமானிக்க முடிந்தது. இந்த விளையாட்டு எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் தான் பாலகுரு (மருதா) கேட்டார், ' நீங்க ஏன் நாவல் எழுதக்கூடாது?' நான் எனது சன்னல்களின் கதவுகளை நீக்கி விட்டேன். ' நிலாவை வரைபவன்' வளரத் தொடங்கியது.

முதலில் கவிதை எழுதுவதற்கும் புதினம் எழுதுவதற்கும் உள்ள வித்யாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புதினம் கனி என்றால் கவிதை சாறு. புதினம் தேன் கூடென்றால் கவிதை தேன். கவிதை கிரிக்கெட் விளையாட்டின் மிஞ்சிய டருணங்களை (highlights) மட்டும் காட்டுகிறது. புதினமோ முழு கிரிக்கட் போட்டியையும் காட்டுகிறது. காலம், வெளி இவற்ரின் நீண்ட பாதையில் பயணிக்கிறது புதினம். கவிதையில் தொடக்கம் முடிவு எல்லாம் வெறும் புள்ளிகள் தாம். பாதை கற்பனையில் வளர்கிறது.

நான் கவிதையின் குணத்தையும் புதினத்தின் குணத்தையும் இணைத்து இந்தப் புனைவை உருவாக்கத் திட்டமிட்டேன். இந்தப் புனைவை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக காப்காவின் 'உருமாற்றத்தை' மனதுக்குள் வரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் புதினத்தின் கட்டுமானம், வடிவமைப்பு, மொழிநடை என முற்றிலும் புதியதொரு படைப்பைத் தான் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

நிலாவை வரைபவன் ஒரு குடும்பத்தின் வாயிலாக நவீன தமிழ்/இந்திய குடும்ப அமைப்பை, சமூக அமைப்பை விளக்க வைக்கிற முயற்சி. இல்லறம், தாம்பத்யம் போன்ற சொல்லாடல்களைச் சுற்றி உருவாகியிருக்கின்ற மதிபீடுகளின் இறுக்கம் நமது குடும்ப உறவுகளில் போலித்தனத்தை தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய மதிப்பீடுகளுக்கு இயைந்து போகவும் முடியாமல், மீறவும் முடியாமல் ஏற்படுகிற மன அழுத்தமும், அது குடும்பத்தில் விளைவிக்கிற சீர்குலைவுகளையும் இபுதினத்தின் மையப்பாத்திரமான எக்சுக்கும் அவனது மனைவிக்கும் இடையே உருவாகிற நிகழ்வுகளின் மூலம் நம்மால் வாங்கிக்கொள்ள முடியும். குடும்ப அமைப்பு காதலாலும் சனநாயகப் பண்பினாலும்தான் வலுப்பெற முடியுமே அன்றி வெறும் விழிகளால் அன்று என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. அன்பு ஒரு நிபந்தனையாக மாற முடியாது, மாறக்கூடாது. அப்படி மாறுகிற போது வன்முறையாகி விடுகிறது. இத்தகைய வன்முறைக்கு இலக்கானவர்கள்தாம் எக்சும் அவனது மனைவியும். கணவன் மனைவிக்கிடையே எழுகின்ற முரபாடுகள் பிள்ளைகளிடமும் கடுமையான உளவியல் சிக்கல்களைத் தோற்றுவித்து விடுகின்றன. குடும்ப அமைப்பின் மீதான விவாதம் என்பது இப்புதினத்தின் மையப்புள்ளிகளுள் ஒன்று என்றாலும் இன்னும் இது பல உள்ளடுக்குகளையும் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இது காட்டும் குழத்தைகள் உலகம் தமிழுக்கு மிகவும் புதியது குழந்தைகளின் கற்பனை ஆற்றல், சுதந்திர விழைவு, நமது கல்வி முறை அனைத்தையும் கதையின் ஊடாக ஃபாண்டசி தொனியில் விவரிக்கிறது இப்புனைவு.

குடும்பத்தை விட்டு எக்ஸ் வெளியேறுவது. இப்புனைவின் முடிவு. கதை தொடங்குவதும் அவன் வெளியேறுவதிலிருந்துதான். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒட்டி அருகருகில் இணைத்துப் பின் நவீனத்துவ முறையில் இப்புனைவு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய கதையின் ஒரு இழையை கதைசொல்லி சொல்கிறார் என்றால் மற்றொரு இழையை விடுதியொன்றில் வாழும் லெஸ்பியன் தோழிகல் நகர்திச் செல்கின்றன.

எனது புதினத்தைப்பற்றி நானே வியந்து தொடர்ந்து எழுதிச் சொல்ல கூச்சமாக இருக்கிறது. இதை முற்றிலும் பரிட்சார்த்தமாக எழுதிப்பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் எனது ரசனைக்குறிய வாசிப்பு முறையை திருப்திப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் எழுதினேன். இந்தப் புதினத்தை மேய்ப்பு திருத்த மறுத்த பாலகுரு நண்பரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதனிடம் கொடுத்திருந்தார். ஒரு நள்ளிரவில் ரமேஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்புதினத்தை கொண்டாடி வெகுநேரம் பேசினார். அந்தவாந் தெ-எக்சுபெரி, இடாலோ கால்வினோ, பாவ்லோ கொய்லோ போன்றோருடன் ஒப்பிட்டுப் பேசினார். அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. ரமேஷின் பெருந்தன்மை இன்று தமிழ்ச்சூழலில் குறைவு, புதினம் வெளியாகி பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என ரமேஷ் பாலகுரு போன்றோர்கள் நம்பினர். வழக்கம் போல் கனத்த மெளனம் தான் எதிர்வினையாக அமைந்தது. பஞ்சாங்கம், அஜயன் பாலா, இலக்குமி குமாரன், ஞானதிரவியம் போன்றோர் உயிர் எழுத்து, இந்தியாடுடே,புத்தகம் பேசுது, போன்ற இதழ்களில் பாராட்டி எழுதியிருந்தனர். நண்பர் முருகேசபாண்டியனும் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த புதினங்களில் கவனத்திற்குறியதாக காலச்சுவட்டில் கூறியிருந்தார். உயிர் எழுத்து சுதீர் செந்திலும் கூட சிலாகித்துப் பேசினார். பாராட்ட வெண்டும் என்பது கூட எனது விருப்பமில்லை. இது சரியில்லை என்றாவது ஒரு புதிய முயற்சி பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனவிரும்புகிறேன். அவ்வகையில் நண்பர் ரவி சுப்ரமணியன் படித்துவிட்டு, 'என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை, குமட்டிக்கொண்டு வருகிறது' என்றார். அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

நிலாவை வரைபவன் புத்தகத்தில் இப்புதினம் குறித்த ஒரு குறிப்பு வருகிறது. ஓரள்வு அது இப்புதினத்தைச் சரியாகச் சொல்ல முயன்றிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு அவையடக்கத்தின் காரணமாக விடைப்பெற்றுக் கொள்கிறேன்.
'சமகால வாழ்வு அளிக்கும் நெருக்கடிகளையும் அதன் விளைவாக நிகழும் மனச்சிதைவுகளையும் நவீனத்தொனியில் விவாதிக்கிறது, 'நிலாவை விரைபவன் புதினம். மனித உறவுகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகளை மீறத்துடிக்கும் அகவிழைவும் அவ்வாறு மீறயியலாத வகையில் அம்மதிப்பீடுகளின் வழி உருவாகியிருக்கும் புறக்கட்டுப்பாடுகளும் மனித மனதில் நிகழ்ந்தும் சமன் குலைவை நுட்பமாகச் சித்தரிக்கிறது இப்புதினம்.

கவித்துவச் செறிவும், தத்துவவிசாரணையும், புதுமைத் தேட்டமும் உடைய இந்த நாவலை வாசிக்க உங்களுக்கு நான் பரிந்துரை செய்ய விரும்பவில்லை. அது படைப்பாளியின் வேலையும் இல்லை. இந்த புதினம் என்னை திருப்தியடைய செய்ததால் தான் சோம்பேரியாகிய நான் அடுத்ததாக 'நிர்மலாவைக் கடப்பது' எழுதிக் கொண்டிருக்கிறேன். விடுதலையும், காதலும் தான் என் எழுத்தின் மையம். வாழ்க்கையை கொண்டாட நினைப்பவர்களுக்கு வலிகளைக் கடந்துபோகச் சொல்லிக்கொடுக்கிறது 'நிலாவை வரைபவன்'.