Tuesday, November 30, 2010

மிகச் சிறிய வார்த்தைகளில் காட்சிகளை வடிவமைக்கும் நரன்

இளம் கவிஞர்களில் எனது மனதுக்கு நெருக்கமான கவிதைகளை நரன் எழுதுகிறார். மிகச்சிறிய வார்த்தைகளின் ஊடாக அவர் கட்டமைக்கும் காட்சிகள் அபூர்வத் தன்மை  வாய்ந்தவை. மிக எளிமையாக, கவித்துவத்தையும் இழந்து விடாமல் கவிதையை உருவாக்கும் கலையை நாம் நரனிடமிருந்து அறிந்து கொள்ளலாம். வெகுவாக சிறு பத்திரிகைகளின் வழியாக காணக்கிடைக்கும் நரனுடைய கவிதைகள் இன்னும் ஒரு தொகுப்பாக உருக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன். அவர் விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். கீழே உள்ள நரனின் கவிதைகள் உங்களுக்கும் உவப்பளிக்கும் என நம்புகிறேன்.  

விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .


"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.



மண்புழு
---------------
மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை 
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி   
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன் 
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு  உடலாய் ,
திசைகொரு  உயிராய்....
பிரிந்து ,பிறந்து
பிறந்து,பிரிந்து

ஆனால் எல்லாம் சம வயதில் .
வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
---------------------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்
1853 சூன் 7ம் திகதி
137 ம் பக்கம்.
கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய
வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .
7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது .
கொல்கத்தா  அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்  வரியேரிய 
அப்புலியின்  உடல் தைலம் பூசி
பாதுகாக்கப்பட்டு வருகிறது .
டைரி குறிப்பின்
சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும் 
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.
பலநூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்து பழங்குடியொருவன்
தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .
 

திரு .பெலிக்ஸ்
------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான
63வயது திரு .பெலிக்ஸிடம்
177ஆண்டுகள் பழமையான
மது புட்டியொன்று கிடைத்தது .
அவரின் 23ம் வயதில் பொலிவிய நாட்டு
கடற்பயண  நண்பனொருவன் அதை பரிசளித்தான் .
இதுவரைஅம்மதுவை  3முறை மட்டுமே
அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை
அப்போது அம்மது இனிப்பு  சுவையுடையதாயிருந்தது

37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....
அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .
 தன்  58வயதில் சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்
அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது

கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த
அம்மதுவை தன்80வது பிறந்த நாளில்
அருந்த திட்டமிட்டிருந்தார் .
அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை
தான்  அறிவேனென  நம்பிகொண்டிருந்தார்  .
ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .
மிச்சம் இருந்த மதுவை
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .
17ஆண்டுகள் மீதமிருந்தது .

Monday, November 29, 2010

வெய்யிலின் புவன இசை - சமன் குலைக்கும் கவிதைகள்

             புத்தாயிரம் தொடங்கி பத்தாண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்க் கவிதையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்தால் அதன் விளைவு திருப்தியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. இப்புத்தாயிரத்தின் தொடக்கத்தில் - தனித்த கவிநடை, புத்துணர்வுமிக்க மொழி ஆளுமை, கவிதை வடிவம் குறித்த பிரக்ஞை, தெளிவான சமூக, அரசியல் பார்வை, வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ளும் முயற்சி என்கிற கதியில் கவிதைத் தளத்தில் இயங்கியவர்களில்  முகுந் நாகராஜ், செல்மா பிரியதர்சன், இசை, தமிழச்சி, லீனா மணிமேகலை, இளங்கோ கிருஷ்ணன், தேன்மொழி போன்றோர்களை முக்கியமானவர்களாகக் கருத முடியும்.

          இவர்களைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக எழுத வேண்டும் என்கிற தவிப்புடன் நரன், துரன் குணா, கணேச குமாரன், திருச்செந்தாழை, லஷ்மி சரவணக்குமார், செந்தீ, மாதவன், வ. மணிகண்டன், லிபி ஆரண்யா, சக்தி ஜோதி, ஹரிகிருஷ்ணா, தென்றல், ஊர்சுலா ராகவ், அமிர்தராசு போன்றவர்கள் பாரதி விழைந்த சொல் புதிதாய், சுவை புதிதாய் சோதிமிக்க நவகவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கவிதை ஆர்வலர்கள் கவனித்திருக்க முடியும். இந்த அணிவரிசையில் வெய்யிலின் கவிதைக்குரல் முக்கியமானது. அவரது “புவன இசை“ கவிதைகள் மூலம் தமிழ்க் கவிதை எத்தகைய உயரத்தை எட்டியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

           ஒரு வேட்டை நாயைப் போல கவித்துவத்தின் எல்லைகளைத் தேடி அலைகிறது வெய்யிலின் மொழி. வாசிப்பவர்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் நமது வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தென்படும் மூர்க்கத்தை, வன்முறையை, குரூரத்தைக் காட்டிச் செல்கிறார் வெய்யில். இத்தகைய வன்மங்களை தனக்குள் ஒளித்துக் கொண்டு புன்னகைப்பதாய் பாவிக்கும் இச்சமூகத்தின் போலித்தனத்தைக் கண்டு புழுங்கும் இவரிடமிருந்து பிறக்கும் வார்த்தைகள் வெப்பத்தைக் கக்குகின்றன.

          இவர் சிந்திக்கும் முறை அதை வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கும் சொற்கள், கவிதையை உருவாக்கும் தொழில் நுட்ப உத்தி அனைத்தும் அபாரமானவை. ’நீங்கள் / எதை வேண்டுமாயினும் / தின்னுங்கள் / நானோ / என் பன்றிகளுக்கு / ரோஜாக்களையே தருவேன்’ என்கிறார் வெய்யில். பன்றிகளுக்கே ரோஜாக்களைத் தருபவர் கவிதை விரும்பிகளுக்கு எத்தகைய உன்னதங்களைப் பரிசாகத் தருவார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

              பெரும்பாலும் வெய்யிலின் கவிதைகளுடைய மையம் ரௌத்திரமாக இருக்கிறது. அன்புக்காக ஏங்கி கைவிடப்பட்ட ஓர் உதிரியின் கோபம் இது. இவர் தன் கோபத்தை பலவிதமான காட்சிகளாக, படிமங்களாக மாற்றுகிறார்.


                            “ என் நிஜங்களை நடுங்காமல் கேட்கும்
                               சில அனாதைக் கடவுள்களும்”

                             “ மஞ்சள் நிறப்பூ மெல்ல மெல்ல
                                மரத்தை தின்கிறது வேரோடு”

                            “ நம் நிலத்தின் விலை என்பது
                               எடைக்கு எடை நரமாமிசம்”

                            “ கருநீல கடலுக்குள் மெல்ல மூழ்குகிறது
                               என் ஒற்றை அறை”

                           “ வெற்றுக் கோப்பைகளில்
                              ததும்பி வழிகிறது
                              உயிர் நிறத்து இசை”

    இப்படி ரௌத்திரத்தை ஓர் அழகியலாக பயிற்றுவிக்கும் வெய்யில் இதயத்தில் ஈரமற்றவரா? கண்டிப்பாக இல்லை. அளப்பறிய கருணை உள்ளத்தால் தான் “ கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” என கோபம் பழக முடியும். சுயநலத்தால் பேராசையால் அன்பைத் தொலைத்த சமகால வாழ்வின் மீதான கோபம் இது. போர், சாதி, மதம் என மனிதர்கள் பிளவுபட புதிது புதிதான வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தன்னுடைய நிலத்தை இழந்த ஒருவன் நாடோடியாய் வேற்று மண்ணில் அலையும் நிலையை ஏகாதிபத்தியத்தின் பேராசை ஏற்படுத்தியுள்ளது.

               விமான நிலையங்கள், தங்க நாற்கரச் சாலைகள், தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என இவற்றால் நிலம் விழுங்கப்படுவது ஒருவகை. ஈழம், ஈராக் எனப் போரால் நிலம் பிடுங்கப்படுவது மற்றொரு வகை. இப்படி ஏதோ ஒரு வகையில் நிலம் நீங்கி உதிரியாக இச்சமூகத்தில் கரையும் ஒருவனின் கோபத்தைத் தான் வெய்யிலின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. ஓர் உதிரிக்கு எத்தகைய நட்புகள், தொடர்புகள், பழக்கங்கள் வாய்க்கும்? வேசிகள், சாத்தான்கள், துர்தேவதைகள், மயானம், மண்டை ஓடு, மரணம், மது, கொலை, தற்கொலை, ரத்தம் என திகில் கொள்ள வைக்கும் கொடுங்கனவாக விரியும் இக்கவிதைகளில் பதிவாகியிருப்பது இத்தகைய உதிரி ஒருவனின் மனம் தான். ஒருவகையில் கவிதை எழுத வரும் ஒவ்வொருவருமே ஓர் உதிரி தான்.இந்த சமூகத்தில் ஒன்ற முடியாமல் உதிர்ந்தவர்கள். வெய்யிலின் கோபத்தை, அவரது ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். ஒரு மனிதன் தனக்குள் மிகப்பெரும் தீயை மறைத்து வைத்துக் கொண்டு வெறும் பாசாங்குடன் அமைதியாக எத்தனை நாட்களுக்குத் தான் நம் முன் நடமாடுவான். நாம் அவனது நெருப்பை அறியாவிட்டால் அது இந்த சமூகத்தை எரித்துவிடும். கலைஞன் தன் நெருப்பை கவிதையாக மாற்றுகிறான் அதை இந்த சமூகம் ஜோதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

                  வெய்யிலின் கோபம், அன்பு, மொழி எல்லாமே முரட்டுத்தனம் வாய்ந்தவையாகத் தோன்றும். ஆனாலும் அவருக்குள் இருப்பது பச்சைக் குழந்தை ஒன்றின் மிருதுவான மனம். புத்தர் அழுதார், முத்தம்  போன்ற கவிதைகளிலிருந்து அவர் எத்தகைய இளகிய உள்ளம் படைத்தவர் என்பதை அறியலாம் இதில் புத்தர் என்பது வெய்யில் தான். அவருடைய கண்ணீரை மழை என்றோ பனித்துளி என்றோ கூறி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம்.

             வெய்யில் கவிதைகளின் உள்ளடக்கம் எவ்வளவு வலிமையானதோ அதைப் போன்றே அவருடைய கவிதை அழகியலும், தனித்துவமும், தீவிரமும் கொண்டவை. மிகச்சில மாதிரிகளிலிருந்தே இதை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும். இவருடைய உவமைகள், படிமங்கள் யாவும் நவீன தமிழ் கவிப் பரப்பிற்கு கிடைத்த பரிசுகள். “உலர்ந்த ரொட்டித் துண்டைப் போலிருக்கிறது / பசியற்ற இக்காலை” என இவர் சிந்திக்கும் விதமே புதுமையாக இருக்கிறது.

                                 “ விழிப்பூவுள் பெருகும் / கனாச்சுனை திறக்க”

                                 “ உருகிக் கரைந்து / கட்டுமரமானோம் யானும்
                                    என் காதற் தையலும்”

                                “ விஷம் கலக்காத முத்தத்திற்கு
                                    நாம் அருகதையற்றவர்கள் நண்பனே”

                                “ நேற்றிரவு உடைந்து சிதறிய / சாராய தம்ளரில்
                                   வெகு நேரம் கசிந்து கொண்டிருந்தது
                                   அம்மாவின் வாசனை”

                இத்தகைய கவித்துவ வரிகளுக்கு எத்தகு விளக்கங்களைக் கொடுத்து நாம் திருப்தி அடைய முடியும். வெய்யில் கவிதையை ஒரு நுட்பமான கலையாக பயின்றிருக்கிறார். அதைச் செதுக்கி செதுக்கி மிக உயரிய ஓர் அணிகலனைப் போல தகதகவென பிரகாசிக்கச் செய்கிறார். இவர் கவிதைகள் மிகுந்த வசீகரத்துடன் நம்மை உள்வாங்கிக் கொள்கிறது. அவற்றிலிருந்து வெளியேறும் நம்மை நிம்மதியற்றவர்களாக, பித்துப்பிடித்தவர்களாக அலைக்கழிய வைக்கிறது. இது ஓர் ஆகச்சிறந்த கலையின் வெளிப்பாடு. நமது ஆதிக்கச் சமூகம் ஒவ்வொரு மனிதனையும் அதன் அங்கமாக இயங்குவதற்கான ஒத்திசைவுடன் தயாரிக்கிறது. ஆனால் கலையோ இந்த ஒத்திசைவைக் கலைக்கிறது. ஒத்திசைவு என்பது மனிதர்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைந்த பின் நிகழ வேண்டியது.  எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளுடனும் ஒத்திசைவாக இயங்குவதற்கேற்ற வண்ணம் மனிதத் தன்னிலை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கலை அதில் குறுக்கீடு செய்கிறது. இத்தகைய சமன் குலைவைதான் வெய்யிலின் கவிதைக் கலையும் நிகழ்த்துகிறது. வெய்யிலின் கவிதைகள் நம் மனசாட்சியை ’சுள்’ளென்று சுட்டாலும் அது வெய்யிலைப் போலவே நமக்கு அத்தியாவசியமானது.

எனது கவிதைகள் சில

எரிந்து பார்ப்பது

 எரியும் அவ்வுடலைப் பார்ப்பது
எத்தனை ஆனந்தம்

பரத்தையர் பலர் தீண்டி
இன்பத்தில் திளைத்த உடல்

மதுவொடு லாகிரியில்
மயங்கித் திளைத்த உடல்

நஞ்சென்றும் அமுதென்றும் பாராது
உண்டும் செறித்த உடல்

ரத்தமூற ர
த்தமூற
யுத்தம் செய்ய அஞ்சாத உடல்

வியாதிகள் அனைத்தையும்
விருந்துக்கு அழைத்த உடல்

நோயில் விழுந்து வலியில் துடித்து
பாயில் கிடந்த உடல்

திகு திகு திகுவெனத் தீயில் எரிகிறது

எரியும் அவ்வுடல் என்னுடலெனினும்
எரிவதைப் பார்க்கினும்
எரிந்து பார்ப்பது
எத்தனை பேரானந்தம்


விதி

கயிற்றில் நடக்கும்
பக்குவம் கூடிவராமல்
அடிக்கடி
தவறி விழுந்து விடுகிற
கழைக்கூத்தாடி நான்

இதில் துர்வாய்ப்பு
என்னவென்றால்
நான் நடக்கும் கயிறு
இரண்டு கம்புகளுக்கிடையே
கட்டப்பட்டதன்று

இரண்டு மலைமுகடுகளுக்கிடையே
கட்டப்பட்டதென்பது தான்


வெயிற்காலம்


நிழல்கள் அருகும் காலத்தில்
வழக்கம்போல் பரவுகிறது வெய்யில்

நம் தோல்களை மட்டுமல்லாமல்
வார்த்தைகளையும் அது சூடாக்கிவிடுகிறது

நாய்களின் கடைவாயில் கானல் வடிய
தார்ச்சாலைகளில் அவை பீதியுடன் அலைகையில்
இந்த நிலத்தைப் போல
நம்முடைய நாவுகளும் வெடித்துப் பிளவுறுகிறது

முதியவர்களை இரக்கமின்றி
பலிகொள்ளும் இச்சண்டித்தனமான வெய்யில்
பைத்தியக்காரர்களை ஒன்றும் செய்ய முடியாமல்
கைபிசைந்து நிற்கிறது

இதற்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வகையில்
இளங்குழந்தைகளின் பாதங்களில் அது
சூட்டுக்காயங்களை ஏற்படுத்திவிடுகிறது

இக்கொடிய வெயிற்காலத்தில்
காதலியைக் கொஞ்சுவதும்
ஒரு கலைப்படைப்பை ரசிப்பதும்
ராட்சசகுணம் கொண்ட மிருகத்துடன்
சண்டை போடுவதைப் போலிருக்கிறது


தனித்துவிடப்பட்ட வீடு

அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்த மனைவி
வந்த அவசரத்தில் மஞ்சள் நிற ரோஜாச் செடிக்கருகில்
வாங்கிவந்திருந்த சந்தனவண்ண செம்ப்பருத்திக்கன்றை
வைத்து தண்ணீர் ஊற்றினாள்.
நீண்டநாள் எதிர்பார்த்திருந்த ஸ்பைடர்மேன் ஸ்டிக்கரை
நண்பன் கொடுத்ததாய்ச் சொன்ன கார்க்கி
அதைக் குளியலறைக் கதவில் ஒட்டினான்
முன்பாக குளிர்ச்சாதனப் பெட்டியில்
அர்னால்டையும் போக்கிமானை படுக்கையறையிலும்
அவன் அம்மாவை முகம் பார்க்கும் கண்ணாடியிலும் ஒட்டியிருந்தான்
வண்ண வொயர்களாலும் மனிதர்களாலும் அலங்கரிக்கப்பட்ட
தோரணத்தை ஓவிய வகுப்பில் செய்திருந்த சிந்து
இரவு படிக்க ஆரம்பிக்கும் முன்பாக அதை பூசையறை
வாயிலில் கட்டினாள்
தேர்வுக்குப் படிக்கத் தயாரித்திருந்த கால அட்டவணையை
தன் மேசைக்கு மேற்புறச் சுவரில் ஒட்டினாள் சுடர்
நாங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்
விடியற்காலை அவ்வீட்டை விட்டு வெளியேறினோம்
புதிய வீட்டில் பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டு
படுத்த எங்கள் ஒவ்வ்வொருவரின் செவியிலும்
வீடு தன் தனிமையைச் சொல்லி அழுது புலம்பியது
நள்ளிரவில் ஒன்றுக்குவிடச் சென்ற கார்க்கி
அவன் அம்மாவை எழுப்பி ஸ்பைடர்மேனைக் காணோம்
என்று அழுதுகொண்டிருந்தான்.

மரணமும் கவிதையும் - சி. மணியை முன்வைத்து

கவிஞனின் சொற்கள் கலையாகவும், கலை ஆவணமாகவும் சமூகத்திற்குள் உறைந்துவிட்ட பிறகு, சமூகத்தின் பொது வெளியிலிருந்து மரணத்தால் அவன் உடலை மட்டும்தன் காணாமல் போகச்செய்ய முடிகிறது.
மரணம் என்பது மீண்டும் மீண்டும் கவிஞர்களின் உடலை மறைத்து வைக்கிற கடவுளின் சிறுபிள்ளை விளையாட்டு.
 சராசரி மனிதர்களுக்கு மரணம் என்பது அச்சத்தின் திரைக்கு அப்பால் இருக்கிற மர்மமும், திகிலும் நிறைந்த இருள்வெளி.  அதிகாரத்திற்கெதிராக சதா சமர் புரிந்துகொண்டிருக்கும் கவிஞனுக்கோ மரணம் ஒரு பரிசு.  அது சுவை மிகுந்த கனி.
 மரணத்திற்குப்பின் கவிஞன் உடல் ஒரு தாவரத்திற்கு எருவாகும் வேளையில் அவ்னது கவிதைகளோ  பிரபஞ்சத்தின் விழிக்கு ஒளியாகிச் சுடர்விடுகிறது.
 கவிஞனின் மரணம் குறித்து இப்படி மிகையாகச் சிந்திப்பது மரணம் பற்றிய நடுக்கங்களிலிருந்து நம்மை (அல்லது) என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியை அளிப்பதாக இருக்கிறது.
 மரணத்தைக் கண்ணோடு கண்கொண்டு பார்த்த பாரதியிலிருந்து இன்று அப்பாஸ், சி.மணி வரையிலான ஒவ்வொரு கவிஞர்களின் இழப்பிற்குப்பின்னும் மரணம் கவிஞர்களுக்குப் பழக்கமானதும், தவிர்க்கமுடியாததாகிவிட்டது.  அது நாம் ஒவ்வொருவரும் எழுதியே ஆகவேண்டிய இறுதியான, உன்னதமான கவிதை.
 கவிஞனின் மரணம் ஓர் உன்னதமான கவிதை என்றால் அது அவன் பிரிந்து சென்றிருக்கும் மனைவிக்கும், குழந்தைக்கும் மட்டுமல்லாமல் இந்தச்சமூகத்திற்கும் வாசிக்க உவப்பானதா?  எனும் கேள்வியும் நமக்குள் எழுகிறது.
 கவிஞனின் இருப்பு என்பது அவனது மனைவிக்கு, குழந்தைக்கு மற்றும் இந்தச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்கூட ஒரு இடையூறாக தொந்தரவாகவே இருந்து வந்திருக்கிறது.  அதே வேளையில், தவிர்க்க இயலாததாகவும் இருப்பதுதான் ஆச்சர்யமானது.
 சர்க்கரை நோயாளிகளின் உள்ளங்கையில் இருக்கிற இனிப்பு பதார்த்தத்தைப் போல, குற்றவாளிகளுக்கு முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் தூக்குக்கயிற்றைப் போல குருடனுக்குப் பரிசாகக் கிடைத்த ஓவியத்தைப் போல, சாத்தானின் கையிலிருக்கிற வேதபுத்தகத்தைப் போலத்தான் இச்சமூகத்தில் கவிஞனின் அவசியமும் இருந்து வருகிறது.
 அவன் விழுங்கமுடியாத அமுதம்.  துப்ப முடியாத விஷம்
 இசைவின்மை எனும் நாள்பட்ட நோயுடனும், விடுதலையின் மீதான ஒருதலைக் காதலோடும் செத்துமடிந்துவிட்ட கவிஞர்களின் ஆவி பீடிக்கப்பட்ட சொற்களை மதிக்கும் சமூகத்தின் களஞ்சியங்கள் தானியங்களாலும், தங்க நாணயங்களாலும் நிரம்பும், அவர்களது சோற்றுப்பானைகள் ஒருபோதும் உலர்வதில்லை. அங்கு போரும், வன்முறையும் இல்லை, காதலும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் என நற்செய்திகளைக்கொண்டு வரும் தேவதை ஒருத்தி தூக்கமற்ற பொழுதில் காதில் ரகசியமாய்ச் சொல்லிச் சென்றாள்.  அதை ஒரு வதந்தியைப் போன்றோ, புராணிக நம்பிக்கையைப் போன்றோ, சமூகத்தில் ப்ரப்பும்படி வேண்டிக்கொண்டதை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
*****
 ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துப் பசியைப் போக்கிவிடலாம்.  சாராகயக் கடைகளைத் திறந்தும், வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாய்க் கொடுத்தும் மக்களை சந்தோஷப்படுத்தலாம்.  கருப்புச் சட்டங்களின் மூலம் வன்முறையை, தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் எனும் எளிமையான சமன்பாடுகளும், தீர்வுகளும் அரசாங்கத்திடம் இருக்கிறது.
 நோய்களைத் தீர்க்கவும், கணவன் மனைவியிடையே உறவைச் செழிக்கவைக்கவும், அரசாங்கம் கவிழ்ந்துவிடாமல் உதவவும் கூட மதத்தலைவர்களிடம் நிவாரணங்கள் இருக்கின்றன.
இந்த அளவிற்கு அமைதியாக, பிரச்சினையில்லாமல் இத்தேசத்தில் மாந்தரெல்லாம் வாழும் வேளையில் ஏனிந்த வாழ்வென்னும் வளர் குழப்பம் எனத் தொடங்கும் சி. மணியின் கவிதை உருவாக்கும் பதற்றத்தை யார்தான் விரும்புவார்?  நிலவுகிற அமைதி, சமாதானம், மகிழ்ச்சி அனைத்தும் பொய்யானது புஐயப்பட்டது எனத் தெரிந்தும் பாவனைகளையே வாழ்முறையாகக் கொண்டவர்கள், நோயை ரசிக்கக் கற்றவர்கள், அடிமைத்தனத்திற்குப் பழகிக்கொண்டவர்கள் குழப்பத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.
 சமூகத்தில் நிலவும் பேதங்கள், ஏவப்படும் வன்முறைகள், இயற்கையை, சாதாரண மனிதர்களைக் காவுகொண்டு கட்டியமைக்கப்படு அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் இவற்றைச் சிந்திக்கையில்தான் குழப்பம் எழும். எது வளர் குழப்பமாகும்,  வளர்குழப்பம்தான் கலகமனமாக பரிணாமம் கொள்கிறது.  அதிகாரமும் குழப்பமும் எதிரெதிரானது.  கலக்கத்தை விதைக்கும் கவிஞனை இதனால்தான் அதிகாரச் சமூகத்தால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
 அறுபதுகளில் தொடங்கி சற்றேரக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் தன் வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியத்திற்காக அர்பணித்துக்கொண்ட சி. மணியின் கவிவாழ்வு முக்கியத்துவம் உடையது.  நாம் கொண்டாடக்கூடிய அளவிற்குப் பெருமை படைத்தது.  வெட்டவெளி இது/ அறை அல்ல / என சில கணம் துள்ளியது என்மனம்/ மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்/ தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / எழும்பிக்குதித்தேன் இடித்தது கூரை’  என இவ்வமைப்பையும், நமது அடிமைத் தனத்தையும் விமர்சனப்படுத்தும் பார்வைகளை அளிக்கவல்லவை சி.மணியின் கவிதைகள்.  60 களின் கவிதை அழகியலைக் கடந்து தமிழ்க்கவிதை உலகம் இன்று எங்கோ முன்னேறி வந்திருக்கிறாது.  இருந்த போதும், விடுதலைய விழையும் சி. மணியின் நவீன மனம்தான் அவரது கவிதைகள் மீது நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது
 ஆங்கிலக் கல்வி அளித்த நவீன நோக்கும் சங்க இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கணப் பரிச்சியமும் உடைய தமிழ் மரபின் தொடர்ச்சியும் இணைந்து உருவான கூட்டுவிளைவுகள் தாம் சி. மணியின் கவிதைகள். கலித்தொகை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சில பிரயோகங்களை தனது கவிதைகளுடன் அவர் நேரடியாக இணைக்கும் போது அவை புதிய வண்ணத்தில் மிளிரக் கூடிய அழகை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது. தாவோ, ஜென், சூஃப், ஜெ.கிரு நமூர்த்தி எனத் தத்துவ தேடல் கொண்டிருந்த இரவது கவிதைகள் அவற்றின் சாரத்தையும், சத்தையும் தம்முள் செரித்துக்கொண்டிருப்பதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது.
காமம், காதல், அநித்யம், மரணம், பொருந்தாமை, இயற்கை, அன்பிற்கான விழைவு, ஏக்கம், குரோதம், பழி, வெறுமை, சலிப்பு, நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போர்க்குணம் என விரிவான பாடுபொருள்களைக் கொண்டு அரைநூற்றாண்டுகள் தொடர்ந்து கவிதை எழுதுவதற்கு மூர்கமான இலக்கியப் பசி வேண்டும். எழுதி, எழுதி நிறைவடையாத, சோர்வடையாத திடம் கொண்ட கலை மனம் வேண்டும். சி. மணிக்கு அவை வாய்க்கப் பெற்றிருந்தது.
கவிதைகளில் சொற்கள் என்பவை அர்த்தங்கள் புதையுண்டிருக்கும் கல்லறைகளல்ல, திசையெங்கும் நறுமணத்தை கமழச் செய்யும் மலர்களையும், சத்தும் சாறும் மிகு கனிகளையும் கொண்டிருக்கும் விதைகள் அவை. கவிதையை நாள்தோறும் உயிர்த்திருக்கவும், உயிர்ப்பிக்கவும் கூடிய இயற்கை விளைவாக மாற்றும் ஆற்றலால்தான் கவிஞன் ஆகிருதி கவனம் பெறுகிறது. சி. மணியின் கவிதைகள் காலம் தோறும் இயங்கிக்கொண்டிருக்கும் உயிரோட்டமுடையவை. தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொண்டு தன்னுடைய புதிய வாசகனுக்கு இளமையான அனுபவத்தைத் தரக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. ஒவ்வொரு கவிதையையும் புதிதாகச் சொல்லிப்பார்க்கும் அவரது பெரு விருப்பை, வடிவங்களில் கொள்ளும் பரிசோதனைப் பேரார்வத்தை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
கவிஞனுக்கும் அனுபவத்துக்கும், கவிஞனுக்கும் அகத் தேட்டத்துக்கும், கவிஞனுக்கும் லட்சியத்திற்குமான வினைகளிலிருந்து தோன்றும் கவிதையில் சொற்களின் பங்கு மகத்தானது. இந்த உலகில் சொற்களாக்கப்படாத அனுபவங்களும், பொருட்களும் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில் கவிஞனின் கவிதை சொற்களோடு மெளனங்களையும் சேர்த்துக்கொண்டு தனது அர்த்தத்தை நிரப்பிக்கொள்ளும் தவிப்போடு இருப்பதை கவிதையின் உயிர்ப்பு எனக்கொள்ளலாம் திறப்புகளையும், அவனது வாசிப்பு தன்னை ஒரு புதிய கவிதையாக மாற்ற வேண்டும் என்கிற தவிப்பையும் கொண்டிருக்கி
’முடிவற்ற முறைகளில் முழுமையாக்கப்படக்கூடிய ஆனால் என்றைக்குமே முழுமையடையாத கவிதையையும் அதன் சொற்கள் பொருந்து முறைகளையும் தேடிக்கொண்டே இருப்பது கவிஞன் வேலை’ என பால் வெலரி சொல்வது போல தேடிக்கொண்டே இருந்தவர்தான் சி. மணி.
கவிதைத் துறையைக் கடந்து மொழிபெயர்ப்பு அகராதியியல் போன்ற துறைகளிலும் இவர் இயங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்கத் தமிழறிஞர் பேராசிரியர் ஹெரால்டு  ஃப்மனுடன் இணைந்து தமிழ்வினைச்சொல் அகராதியை உருவாக்குவதிலும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உருவாக்குவதிலும் இவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதும் பராட்டப்படக்கூடியதும் ஆகும்.
ஒரு கோப்பை மது அருந்தியதற்குப் பின் நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும் இறந்துபோன எந்தவொரு தேசத்து மகாக்வியைப் போலவும் சி. மணி நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளக்கூடியவர்தான்.
கனிந்த அவரது மரணத்தின் நிழலில் அவரது நினைவைக் கொண்டாடும் பொருட்டு பியர் அருந்தத் தொடங்கினேன். அப்போது என் தோள் மீது கைபோட்டு சி. மணி கவிதை சொன்னார்.

    ’இலக்கிய வழியில் நிரந்தரம் கிடைக்கும்
    கலைகள் கொண்டு அறிவினைக் கொண்டு
    அறமும், அன்பும் கொண்டு மனிதன்
    சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட முடியும்’

எனது மதுக்குவளை காலியாகிவிட்டது. அப்பாசும், சி. மணியும் சாவைச் சுடுகாட்டில் எரித்திருக்கிறார்கள். நாமும் கூட எரிக்கலாம். அதுவரை இன்னமும்கூட நமக்குக் கவிதைத் தேவைப்படுகிறது.

நிலாவை வரைபவன் - ஒரு கதையின் கதை

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த எனக்கு புதினம் எழுதும் ஆசை எப்படி வந்தது எனக் கேட்டால் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நமது மனதின் இயக்கம் ரகசியமாகவும், மர்மமாகவும் இருக்கிறது. மனசுக்குள் ஏதோ ஒரு சன்னல் திறந்ததுபோல் இருந்தது. அருகில் தெரிந்த காட்சிகள் தெளிவாகவும், சற்று தூரத்தில் தெரிந்த காட்சிகள் தெளிவற்றும் மங்கலானதாகவும் விளங்கியது. இந்த சன்னல் திறந்தும் மூடியும் விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது. சன்னலூடாகத் தெரிந்த காட்சிகளில் ஒருவித கனவுத் தன்மையும், தொடர்ச்சியும் காணப்பட்டது. அந்த சன்னலுக்கு அப்பால் நானும் எனக்கு நெருங்கியவர்களுமே இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அனுமானிக்க முடிந்தது. இந்த விளையாட்டு எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் தான் பாலகுரு (மருதா) கேட்டார், ' நீங்க ஏன் நாவல் எழுதக்கூடாது?' நான் எனது சன்னல்களின் கதவுகளை நீக்கி விட்டேன். ' நிலாவை வரைபவன்' வளரத் தொடங்கியது.

முதலில் கவிதை எழுதுவதற்கும் புதினம் எழுதுவதற்கும் உள்ள வித்யாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புதினம் கனி என்றால் கவிதை சாறு. புதினம் தேன் கூடென்றால் கவிதை தேன். கவிதை கிரிக்கெட் விளையாட்டின் மிஞ்சிய டருணங்களை (highlights) மட்டும் காட்டுகிறது. புதினமோ முழு கிரிக்கட் போட்டியையும் காட்டுகிறது. காலம், வெளி இவற்ரின் நீண்ட பாதையில் பயணிக்கிறது புதினம். கவிதையில் தொடக்கம் முடிவு எல்லாம் வெறும் புள்ளிகள் தாம். பாதை கற்பனையில் வளர்கிறது.

நான் கவிதையின் குணத்தையும் புதினத்தின் குணத்தையும் இணைத்து இந்தப் புனைவை உருவாக்கத் திட்டமிட்டேன். இந்தப் புனைவை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக காப்காவின் 'உருமாற்றத்தை' மனதுக்குள் வரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் புதினத்தின் கட்டுமானம், வடிவமைப்பு, மொழிநடை என முற்றிலும் புதியதொரு படைப்பைத் தான் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

நிலாவை வரைபவன் ஒரு குடும்பத்தின் வாயிலாக நவீன தமிழ்/இந்திய குடும்ப அமைப்பை, சமூக அமைப்பை விளக்க வைக்கிற முயற்சி. இல்லறம், தாம்பத்யம் போன்ற சொல்லாடல்களைச் சுற்றி உருவாகியிருக்கின்ற மதிபீடுகளின் இறுக்கம் நமது குடும்ப உறவுகளில் போலித்தனத்தை தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய மதிப்பீடுகளுக்கு இயைந்து போகவும் முடியாமல், மீறவும் முடியாமல் ஏற்படுகிற மன அழுத்தமும், அது குடும்பத்தில் விளைவிக்கிற சீர்குலைவுகளையும் இபுதினத்தின் மையப்பாத்திரமான எக்சுக்கும் அவனது மனைவிக்கும் இடையே உருவாகிற நிகழ்வுகளின் மூலம் நம்மால் வாங்கிக்கொள்ள முடியும். குடும்ப அமைப்பு காதலாலும் சனநாயகப் பண்பினாலும்தான் வலுப்பெற முடியுமே அன்றி வெறும் விழிகளால் அன்று என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. அன்பு ஒரு நிபந்தனையாக மாற முடியாது, மாறக்கூடாது. அப்படி மாறுகிற போது வன்முறையாகி விடுகிறது. இத்தகைய வன்முறைக்கு இலக்கானவர்கள்தாம் எக்சும் அவனது மனைவியும். கணவன் மனைவிக்கிடையே எழுகின்ற முரபாடுகள் பிள்ளைகளிடமும் கடுமையான உளவியல் சிக்கல்களைத் தோற்றுவித்து விடுகின்றன. குடும்ப அமைப்பின் மீதான விவாதம் என்பது இப்புதினத்தின் மையப்புள்ளிகளுள் ஒன்று என்றாலும் இன்னும் இது பல உள்ளடுக்குகளையும் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இது காட்டும் குழத்தைகள் உலகம் தமிழுக்கு மிகவும் புதியது குழந்தைகளின் கற்பனை ஆற்றல், சுதந்திர விழைவு, நமது கல்வி முறை அனைத்தையும் கதையின் ஊடாக ஃபாண்டசி தொனியில் விவரிக்கிறது இப்புனைவு.

குடும்பத்தை விட்டு எக்ஸ் வெளியேறுவது. இப்புனைவின் முடிவு. கதை தொடங்குவதும் அவன் வெளியேறுவதிலிருந்துதான். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒட்டி அருகருகில் இணைத்துப் பின் நவீனத்துவ முறையில் இப்புனைவு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய கதையின் ஒரு இழையை கதைசொல்லி சொல்கிறார் என்றால் மற்றொரு இழையை விடுதியொன்றில் வாழும் லெஸ்பியன் தோழிகல் நகர்திச் செல்கின்றன.

எனது புதினத்தைப்பற்றி நானே வியந்து தொடர்ந்து எழுதிச் சொல்ல கூச்சமாக இருக்கிறது. இதை முற்றிலும் பரிட்சார்த்தமாக எழுதிப்பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் எனது ரசனைக்குறிய வாசிப்பு முறையை திருப்திப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் எழுதினேன். இந்தப் புதினத்தை மேய்ப்பு திருத்த மறுத்த பாலகுரு நண்பரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதனிடம் கொடுத்திருந்தார். ஒரு நள்ளிரவில் ரமேஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்புதினத்தை கொண்டாடி வெகுநேரம் பேசினார். அந்தவாந் தெ-எக்சுபெரி, இடாலோ கால்வினோ, பாவ்லோ கொய்லோ போன்றோருடன் ஒப்பிட்டுப் பேசினார். அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. ரமேஷின் பெருந்தன்மை இன்று தமிழ்ச்சூழலில் குறைவு, புதினம் வெளியாகி பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என ரமேஷ் பாலகுரு போன்றோர்கள் நம்பினர். வழக்கம் போல் கனத்த மெளனம் தான் எதிர்வினையாக அமைந்தது. பஞ்சாங்கம், அஜயன் பாலா, இலக்குமி குமாரன், ஞானதிரவியம் போன்றோர் உயிர் எழுத்து, இந்தியாடுடே,புத்தகம் பேசுது, போன்ற இதழ்களில் பாராட்டி எழுதியிருந்தனர். நண்பர் முருகேசபாண்டியனும் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த புதினங்களில் கவனத்திற்குறியதாக காலச்சுவட்டில் கூறியிருந்தார். உயிர் எழுத்து சுதீர் செந்திலும் கூட சிலாகித்துப் பேசினார். பாராட்ட வெண்டும் என்பது கூட எனது விருப்பமில்லை. இது சரியில்லை என்றாவது ஒரு புதிய முயற்சி பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனவிரும்புகிறேன். அவ்வகையில் நண்பர் ரவி சுப்ரமணியன் படித்துவிட்டு, 'என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை, குமட்டிக்கொண்டு வருகிறது' என்றார். அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

நிலாவை வரைபவன் புத்தகத்தில் இப்புதினம் குறித்த ஒரு குறிப்பு வருகிறது. ஓரள்வு அது இப்புதினத்தைச் சரியாகச் சொல்ல முயன்றிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு அவையடக்கத்தின் காரணமாக விடைப்பெற்றுக் கொள்கிறேன்.
'சமகால வாழ்வு அளிக்கும் நெருக்கடிகளையும் அதன் விளைவாக நிகழும் மனச்சிதைவுகளையும் நவீனத்தொனியில் விவாதிக்கிறது, 'நிலாவை விரைபவன் புதினம். மனித உறவுகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகளை மீறத்துடிக்கும் அகவிழைவும் அவ்வாறு மீறயியலாத வகையில் அம்மதிப்பீடுகளின் வழி உருவாகியிருக்கும் புறக்கட்டுப்பாடுகளும் மனித மனதில் நிகழ்ந்தும் சமன் குலைவை நுட்பமாகச் சித்தரிக்கிறது இப்புதினம்.

கவித்துவச் செறிவும், தத்துவவிசாரணையும், புதுமைத் தேட்டமும் உடைய இந்த நாவலை வாசிக்க உங்களுக்கு நான் பரிந்துரை செய்ய விரும்பவில்லை. அது படைப்பாளியின் வேலையும் இல்லை. இந்த புதினம் என்னை திருப்தியடைய செய்ததால் தான் சோம்பேரியாகிய நான் அடுத்ததாக 'நிர்மலாவைக் கடப்பது' எழுதிக் கொண்டிருக்கிறேன். விடுதலையும், காதலும் தான் என் எழுத்தின் மையம். வாழ்க்கையை கொண்டாட நினைப்பவர்களுக்கு வலிகளைக் கடந்துபோகச் சொல்லிக்கொடுக்கிறது 'நிலாவை வரைபவன்'.