Tuesday, November 30, 2010

மிகச் சிறிய வார்த்தைகளில் காட்சிகளை வடிவமைக்கும் நரன்

இளம் கவிஞர்களில் எனது மனதுக்கு நெருக்கமான கவிதைகளை நரன் எழுதுகிறார். மிகச்சிறிய வார்த்தைகளின் ஊடாக அவர் கட்டமைக்கும் காட்சிகள் அபூர்வத் தன்மை  வாய்ந்தவை. மிக எளிமையாக, கவித்துவத்தையும் இழந்து விடாமல் கவிதையை உருவாக்கும் கலையை நாம் நரனிடமிருந்து அறிந்து கொள்ளலாம். வெகுவாக சிறு பத்திரிகைகளின் வழியாக காணக்கிடைக்கும் நரனுடைய கவிதைகள் இன்னும் ஒரு தொகுப்பாக உருக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன். அவர் விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை கொண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். கீழே உள்ள நரனின் கவிதைகள் உங்களுக்கும் உவப்பளிக்கும் என நம்புகிறேன்.  

விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .


"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.



மண்புழு
---------------
மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை 
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி   
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன் 
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு  உடலாய் ,
திசைகொரு  உயிராய்....
பிரிந்து ,பிறந்து
பிறந்து,பிரிந்து

ஆனால் எல்லாம் சம வயதில் .
வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
---------------------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்
1853 சூன் 7ம் திகதி
137 ம் பக்கம்.
கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய
வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .
7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது .
கொல்கத்தா  அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்  வரியேரிய 
அப்புலியின்  உடல் தைலம் பூசி
பாதுகாக்கப்பட்டு வருகிறது .
டைரி குறிப்பின்
சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும் 
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.
பலநூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்து பழங்குடியொருவன்
தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .
 

திரு .பெலிக்ஸ்
------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான
63வயது திரு .பெலிக்ஸிடம்
177ஆண்டுகள் பழமையான
மது புட்டியொன்று கிடைத்தது .
அவரின் 23ம் வயதில் பொலிவிய நாட்டு
கடற்பயண  நண்பனொருவன் அதை பரிசளித்தான் .
இதுவரைஅம்மதுவை  3முறை மட்டுமே
அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை
அப்போது அம்மது இனிப்பு  சுவையுடையதாயிருந்தது

37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....
அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .
 தன்  58வயதில் சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்
அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது

கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த
அம்மதுவை தன்80வது பிறந்த நாளில்
அருந்த திட்டமிட்டிருந்தார் .
அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை
தான்  அறிவேனென  நம்பிகொண்டிருந்தார்  .
ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .
மிச்சம் இருந்த மதுவை
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .
17ஆண்டுகள் மீதமிருந்தது .

No comments:

Post a Comment