Monday, November 29, 2010

வெய்யிலின் புவன இசை - சமன் குலைக்கும் கவிதைகள்

             புத்தாயிரம் தொடங்கி பத்தாண்டுகள் கழிந்த நிலையில் தமிழ்க் கவிதையின் வளர்ச்சியை மதிப்பீடு செய்தால் அதன் விளைவு திருப்தியும் நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளது. இப்புத்தாயிரத்தின் தொடக்கத்தில் - தனித்த கவிநடை, புத்துணர்வுமிக்க மொழி ஆளுமை, கவிதை வடிவம் குறித்த பிரக்ஞை, தெளிவான சமூக, அரசியல் பார்வை, வாழ்வின் புதிரை விளங்கிக் கொள்ளும் முயற்சி என்கிற கதியில் கவிதைத் தளத்தில் இயங்கியவர்களில்  முகுந் நாகராஜ், செல்மா பிரியதர்சன், இசை, தமிழச்சி, லீனா மணிமேகலை, இளங்கோ கிருஷ்ணன், தேன்மொழி போன்றோர்களை முக்கியமானவர்களாகக் கருத முடியும்.

          இவர்களைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக எழுத வேண்டும் என்கிற தவிப்புடன் நரன், துரன் குணா, கணேச குமாரன், திருச்செந்தாழை, லஷ்மி சரவணக்குமார், செந்தீ, மாதவன், வ. மணிகண்டன், லிபி ஆரண்யா, சக்தி ஜோதி, ஹரிகிருஷ்ணா, தென்றல், ஊர்சுலா ராகவ், அமிர்தராசு போன்றவர்கள் பாரதி விழைந்த சொல் புதிதாய், சுவை புதிதாய் சோதிமிக்க நவகவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை கவிதை ஆர்வலர்கள் கவனித்திருக்க முடியும். இந்த அணிவரிசையில் வெய்யிலின் கவிதைக்குரல் முக்கியமானது. அவரது “புவன இசை“ கவிதைகள் மூலம் தமிழ்க் கவிதை எத்தகைய உயரத்தை எட்டியிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

           ஒரு வேட்டை நாயைப் போல கவித்துவத்தின் எல்லைகளைத் தேடி அலைகிறது வெய்யிலின் மொழி. வாசிப்பவர்களின் அமைதியைக் கெடுக்கும் வகையில் நமது வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தென்படும் மூர்க்கத்தை, வன்முறையை, குரூரத்தைக் காட்டிச் செல்கிறார் வெய்யில். இத்தகைய வன்மங்களை தனக்குள் ஒளித்துக் கொண்டு புன்னகைப்பதாய் பாவிக்கும் இச்சமூகத்தின் போலித்தனத்தைக் கண்டு புழுங்கும் இவரிடமிருந்து பிறக்கும் வார்த்தைகள் வெப்பத்தைக் கக்குகின்றன.

          இவர் சிந்திக்கும் முறை அதை வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கும் சொற்கள், கவிதையை உருவாக்கும் தொழில் நுட்ப உத்தி அனைத்தும் அபாரமானவை. ’நீங்கள் / எதை வேண்டுமாயினும் / தின்னுங்கள் / நானோ / என் பன்றிகளுக்கு / ரோஜாக்களையே தருவேன்’ என்கிறார் வெய்யில். பன்றிகளுக்கே ரோஜாக்களைத் தருபவர் கவிதை விரும்பிகளுக்கு எத்தகைய உன்னதங்களைப் பரிசாகத் தருவார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

              பெரும்பாலும் வெய்யிலின் கவிதைகளுடைய மையம் ரௌத்திரமாக இருக்கிறது. அன்புக்காக ஏங்கி கைவிடப்பட்ட ஓர் உதிரியின் கோபம் இது. இவர் தன் கோபத்தை பலவிதமான காட்சிகளாக, படிமங்களாக மாற்றுகிறார்.


                            “ என் நிஜங்களை நடுங்காமல் கேட்கும்
                               சில அனாதைக் கடவுள்களும்”

                             “ மஞ்சள் நிறப்பூ மெல்ல மெல்ல
                                மரத்தை தின்கிறது வேரோடு”

                            “ நம் நிலத்தின் விலை என்பது
                               எடைக்கு எடை நரமாமிசம்”

                            “ கருநீல கடலுக்குள் மெல்ல மூழ்குகிறது
                               என் ஒற்றை அறை”

                           “ வெற்றுக் கோப்பைகளில்
                              ததும்பி வழிகிறது
                              உயிர் நிறத்து இசை”

    இப்படி ரௌத்திரத்தை ஓர் அழகியலாக பயிற்றுவிக்கும் வெய்யில் இதயத்தில் ஈரமற்றவரா? கண்டிப்பாக இல்லை. அளப்பறிய கருணை உள்ளத்தால் தான் “ கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே” என கோபம் பழக முடியும். சுயநலத்தால் பேராசையால் அன்பைத் தொலைத்த சமகால வாழ்வின் மீதான கோபம் இது. போர், சாதி, மதம் என மனிதர்கள் பிளவுபட புதிது புதிதான வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. தன்னுடைய நிலத்தை இழந்த ஒருவன் நாடோடியாய் வேற்று மண்ணில் அலையும் நிலையை ஏகாதிபத்தியத்தின் பேராசை ஏற்படுத்தியுள்ளது.

               விமான நிலையங்கள், தங்க நாற்கரச் சாலைகள், தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என இவற்றால் நிலம் விழுங்கப்படுவது ஒருவகை. ஈழம், ஈராக் எனப் போரால் நிலம் பிடுங்கப்படுவது மற்றொரு வகை. இப்படி ஏதோ ஒரு வகையில் நிலம் நீங்கி உதிரியாக இச்சமூகத்தில் கரையும் ஒருவனின் கோபத்தைத் தான் வெய்யிலின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. ஓர் உதிரிக்கு எத்தகைய நட்புகள், தொடர்புகள், பழக்கங்கள் வாய்க்கும்? வேசிகள், சாத்தான்கள், துர்தேவதைகள், மயானம், மண்டை ஓடு, மரணம், மது, கொலை, தற்கொலை, ரத்தம் என திகில் கொள்ள வைக்கும் கொடுங்கனவாக விரியும் இக்கவிதைகளில் பதிவாகியிருப்பது இத்தகைய உதிரி ஒருவனின் மனம் தான். ஒருவகையில் கவிதை எழுத வரும் ஒவ்வொருவருமே ஓர் உதிரி தான்.இந்த சமூகத்தில் ஒன்ற முடியாமல் உதிர்ந்தவர்கள். வெய்யிலின் கோபத்தை, அவரது ரகசியத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். ஒரு மனிதன் தனக்குள் மிகப்பெரும் தீயை மறைத்து வைத்துக் கொண்டு வெறும் பாசாங்குடன் அமைதியாக எத்தனை நாட்களுக்குத் தான் நம் முன் நடமாடுவான். நாம் அவனது நெருப்பை அறியாவிட்டால் அது இந்த சமூகத்தை எரித்துவிடும். கலைஞன் தன் நெருப்பை கவிதையாக மாற்றுகிறான் அதை இந்த சமூகம் ஜோதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

                  வெய்யிலின் கோபம், அன்பு, மொழி எல்லாமே முரட்டுத்தனம் வாய்ந்தவையாகத் தோன்றும். ஆனாலும் அவருக்குள் இருப்பது பச்சைக் குழந்தை ஒன்றின் மிருதுவான மனம். புத்தர் அழுதார், முத்தம்  போன்ற கவிதைகளிலிருந்து அவர் எத்தகைய இளகிய உள்ளம் படைத்தவர் என்பதை அறியலாம் இதில் புத்தர் என்பது வெய்யில் தான். அவருடைய கண்ணீரை மழை என்றோ பனித்துளி என்றோ கூறி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம்.

             வெய்யில் கவிதைகளின் உள்ளடக்கம் எவ்வளவு வலிமையானதோ அதைப் போன்றே அவருடைய கவிதை அழகியலும், தனித்துவமும், தீவிரமும் கொண்டவை. மிகச்சில மாதிரிகளிலிருந்தே இதை ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும். இவருடைய உவமைகள், படிமங்கள் யாவும் நவீன தமிழ் கவிப் பரப்பிற்கு கிடைத்த பரிசுகள். “உலர்ந்த ரொட்டித் துண்டைப் போலிருக்கிறது / பசியற்ற இக்காலை” என இவர் சிந்திக்கும் விதமே புதுமையாக இருக்கிறது.

                                 “ விழிப்பூவுள் பெருகும் / கனாச்சுனை திறக்க”

                                 “ உருகிக் கரைந்து / கட்டுமரமானோம் யானும்
                                    என் காதற் தையலும்”

                                “ விஷம் கலக்காத முத்தத்திற்கு
                                    நாம் அருகதையற்றவர்கள் நண்பனே”

                                “ நேற்றிரவு உடைந்து சிதறிய / சாராய தம்ளரில்
                                   வெகு நேரம் கசிந்து கொண்டிருந்தது
                                   அம்மாவின் வாசனை”

                இத்தகைய கவித்துவ வரிகளுக்கு எத்தகு விளக்கங்களைக் கொடுத்து நாம் திருப்தி அடைய முடியும். வெய்யில் கவிதையை ஒரு நுட்பமான கலையாக பயின்றிருக்கிறார். அதைச் செதுக்கி செதுக்கி மிக உயரிய ஓர் அணிகலனைப் போல தகதகவென பிரகாசிக்கச் செய்கிறார். இவர் கவிதைகள் மிகுந்த வசீகரத்துடன் நம்மை உள்வாங்கிக் கொள்கிறது. அவற்றிலிருந்து வெளியேறும் நம்மை நிம்மதியற்றவர்களாக, பித்துப்பிடித்தவர்களாக அலைக்கழிய வைக்கிறது. இது ஓர் ஆகச்சிறந்த கலையின் வெளிப்பாடு. நமது ஆதிக்கச் சமூகம் ஒவ்வொரு மனிதனையும் அதன் அங்கமாக இயங்குவதற்கான ஒத்திசைவுடன் தயாரிக்கிறது. ஆனால் கலையோ இந்த ஒத்திசைவைக் கலைக்கிறது. ஒத்திசைவு என்பது மனிதர்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைந்த பின் நிகழ வேண்டியது.  எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளுடனும் ஒத்திசைவாக இயங்குவதற்கேற்ற வண்ணம் மனிதத் தன்னிலை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கலை அதில் குறுக்கீடு செய்கிறது. இத்தகைய சமன் குலைவைதான் வெய்யிலின் கவிதைக் கலையும் நிகழ்த்துகிறது. வெய்யிலின் கவிதைகள் நம் மனசாட்சியை ’சுள்’ளென்று சுட்டாலும் அது வெய்யிலைப் போலவே நமக்கு அத்தியாவசியமானது.

1 comment:

  1. /ஒருவகையில் கவிதை எழுத வரும் ஒவ்வொருவருமே ஓர் உதிரி தான்.இந்த சமூகத்தில் ஒன்ற முடியாமல் உதிர்ந்தவர்கள்/
    ஆகா!

    ReplyDelete