ஆற்றுப்படை
– 2
மகனே,
ஐன்ஸ்டினின் மீன் நீ
உன்னை மரமேறச்சொல்லி
மதிப்பிடும் உலகில்
கைவிட்டுச்செல்வதற்கு என்னை மன்னிப்பாயா
உன் கனவுக்கு எதிர்திசையில்
பாலையென விரிந்துகிடக்கிறது உன் நிலம்
கனிகளே இல்லாத அவ்விடத்திலிருந்து
வெளியேறிக்கொண்டிருக்கின்றன பறவைகள்
ஹார்மோன் குறைபாடுடைய மெஸ்ஸியின் அணி தோற்றபோது
நீ சிந்திய கண்ணீரைப்போன்றே
உகுக்க இவ்வுலகம் உனக்கு
நிறைய சந்தர்ப்பங்களை உருவாக்கித்தரும்
கலங்காதே மகனே
பெட்ரோலும் மின்சாரமும் இல்லாத
தாமரைக்குளம் கூடிய
தெய்வத்தின் காவல் பொருந்திய
கிராமமொன்றிற்கு அடிக்கடி நீ வழிகேட்பாயே
என் சிறு மகனே
உனை விட்டு விலகும் இக்கணம் கொடிது
கோயில் படிக்கட்டுகளில் பிச்சையெடுக்கும் மூதாட்டிகளும்
பொலிவிழந்த வயோதிகத்தில் பூ விற்கும் பாலியல்
தொழிலாளிகள் நிறைந்த
சபிக்கப்பட்ட இந்நகரில் ஒரு பென்சில் நதியை உருவாக்கி
குளிக்கத்தெரிந்தவன்தானே நீ
அதனால்தான் உனை விட்டு விலகுகிறேன்
என் அருமை மகனே
பறவைகளோடு பழகிக்கழித்த நீ
ஒரு விடியற்காலையில் எழுப்பி
முளைத்திருந்த உன் சிறகுகளை காட்டினாயல்லவா
அதை பழக்க தோஷத்தில்
உன் ஆசிரியர்களில் யாரேனும் ஒருவன்
வெட்டி விடக்கூடாதேயென்றுதான்
பதறி விலகுகிறேன் மகனே
சோம்பேறித்தனத்தால் வளர்ந்த என் தொப்பையை
நீ பரிகசிப்பாயே
‘ ஃப்ளாப் ரைட்டர் ‘ விமர்சிப்பாயே
இம்மனதை நீ இழந்துவிடக்கூடாதெனவே
விலகிச்செல்கிறேன் மகனே
35 ஆயிரம் மில்லியன் டாலர் கோல் அடித்த மரியோ
கோட்சியையும்
உன்னோடு கால்பந்து பழகும் ஹரிபிரசாத்தையும்
நேர்க்கோட்டில் வைத்துப்பார்க்கும் உனக்கு
தந்தையின் நிழல் தேவையில்லை
இந்த தேசத்தின் சாக்கடை நீரை உறிஞ்சி
வளர்ந்ததிந்த நிழல்
பறக்கும் ஷூக்களை அணியும் இளவரசிகள்
உனது கனவிலிருந்து காணாமல் போகும் வேளையில்
முகம் தெரியாத வெள்ளை முதலாளி ஒருவனுக்கு
மென்பொருள் எழுதப்பெறவில்லை உன்னை
அறிந்தவன் நீ என்பதால்
உன் பாதையில் தந்தைமையின்
இடரகற்றி விலகுகிறேன் மகனே
No comments:
Post a Comment