பெத்தவன் – விடுதலைக்கான மூன்றாம் அரங்கு.
கரிகாலன்.
நமது நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் ஆணாதிக்க சமூகம் அதன் நலன்களுக்கு உகந்த வகையில் உருவாக்கிய மதிப்பீடுகள் எவ்வாறு விடுதலைக்கு எதிராகவும், அதை உருவாக்கியவர்களின் நிம்மதிக்கு எதிராகவும் திகழ்கிறது என்பதை கலைத்தன்மையோடு விவரித்த முக்கியமான படைப்பு இமையத்தின் பெத்தவன் நெடுங்கதை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான சிறுகதைகளுள் தமிழ் சமூகத்தின் சாதிய விழுமியங்களை விளங்கிக்கொள்ள உதவக்கூடிய முக்கியமான படைப்பாக பெத்தவன் நெடுங்கதை திகழ்கிறது.
நிலப்பிரபுத்துவ அமைப்பு உடைந்து உலகமயமாக்கல் முழு வளர்ச்சி பெற்றிருக்கிற இன்றைய சூழலிலும் நமது கிராமங்களில் இன்னும் உடையாத சாதிய கட்டுமானங்கள், சாதிய பெருமைகளை காப்பாற்றுவதன் பெயரில் உருவாகியிருக்கும அரசியல், நகரமயமாக்கல் தலித்துக்களுக்கு அளித்திருக்கும் வேலை வாய்ப்புகள், அதன் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உருவாகியிருக்கும் நம்பிக்கை, அத்தகைய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவர்கள்மீது பிரயோகிக்கப்படும் வன்முறை, சாதிக் கட்டுமானங்களை பாதுகாக்கும அகமணமுறையை தொந்தரவு செய்யும் காதல் நிகழ்வுகள், சாதிய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கிராமங்களில் நடைபெறும் சாதிப் பஞ்சாயத்துக்கள், ஊர்க் கட்டுப்பாடா, பிள்ளைகளின் விருப்பமா? எனத் தடுமாறும் பெற்றோர்கள். இவ்வாறு ஊடுபாவாக பல்வேறு இழைகளால் நெய்யப்பட்டிருக்கும் காத்திரமான படைப்புதான் பெத்தவன்.
பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய பெத்தவனை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப் பள்ளி மாணவர்கள் நாடகமாக அரங்கேற்றினர். இந்நாடகம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மூன்றாம் அறங்கொன்றின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது நாடகம். அரங்கிற்கும், பார்வையாளர்களுக்கும் இடைவெளியின்றி ஒரு சமூக அவலம் நம் கண்முன்னால் நிகழும்போது ஏற்படும் பதற்றத்தை, துக்கத்தை, கோபத்தை உருவாக்கியது இந்நாடகம். திடீரென்று பிரவேசித்த நாயும் ஏற்கனவே அவ்விடத்தில் இருந்த ஒரு ஓட்டு வீடும் மாமரங்களும் ஒரு கிராம பின்னணிக்கு நெருக்கம் ஏற்படுத்துவதாக இருந்தது.
பெத்தவன் நெடுங்கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். வண்டிக்காரன் வீட்டு பழனி ஆதிக்கச் சாதி ஒன்றைச் சார்ந்தவன். அவனுடைய மகள் பாக்கியம் அதே ஊரைச் சேர்ந்த தலித் இளைஞனை காதலிக்கிறாள். அவன் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவன். இவர்களுடைய காதலால் தங்கள் சாதி மானம், கொளரவம் போவதாக பழனியின் சாதியைச் சார்ந்த இளைஞர்கள் கருதுகின்றனர். “தங்களிடம் இல்லாத எதை அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்காரனிடம் கண்டாய்?“ எனக் கொச்சையாக பாக்கியத்தைத் திட்டி அடித்து அவளது மயிரை அறுத்து விடுகின்றனர். காதல் தொடர்வதால் சாதித் தலைவரை அழைத்துவந்து பஞ்சாயத்து வைக்கின்றனர். பஞ்சாயத்தில் பாக்கியத்தை விஷம் வைத்து கொன்றுவிடுமாறு அவளது தந்தை பழனியிடம் தனது தீர்ப்பாக சாதித்தலைவர் கூறுகிறார்.
பழனியின் குடும்பம் நிம்மதி இழந்து தவிக்கிறது. பெற்ற மகளை கொல்லும் தீவினை காலகாலத்திற்கும் நமது குடும்பத்தைச் சூழும் என்கிறாள் பழனியின் தாய். பழனி தனது மகள் பாக்கியத்தை ஊருக்குத் தெரியாமல் இரவோடு இரவாக அவளது காதலனிடம் சென்றுவிடுமாறு சென்னைக்கு அனுப்பிவிடுகிறான். பிறகு ஊருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டதால் ஏற்படும் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொள்கிறான். கதை நிறைவடைகிறது.
இக்கதை வெளியான சில தினங்களில் தர்மபுரி நாயக்கன்கொட்டாய் சம்பவம் நடைபெற்று தமிழகத்தை திகைப்பில் ஆழ்த்துகிறது. இக்கதைக்கும் தர்மபுரி சம்பவத்திற்கும் இடையே உள்ள நெருக்கம் ஒரு கலைஞனின் தீர்க்க தரிசனத்திற்கான அடையாளமாக இருக்கிறது. இக்கதையின் நிகழ்வுகள் மீண்டும்மீண்டும் தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்வது நமக்கு வலியைத் தருகின்றது.
பழனிக்கும் அவன் மகள் காதலிக்கும் தலித் இளைஞன் குடும்பத்திற்கும் பெரிய அளவில் பொருளாதாரத்திலோ, கல்வியிலோ வேறுபாடு இல்லை. இக்காதலுக்குத் தடையாக இருப்பது சாதி மட்டும்தான். பழனியே தன் மகளை நல்ல வேலையிலிருக்கும் அந்த இளைஞனுக்கு தர விரும்பினாலும் சாதி கௌரவம், சாதி பஞ்சாயத்து போன்றவை அவனது விருப்பத்திற்கு மாறாக தவம் இருந்து, வரம் வாங்கி பெற்ற மகளை கொலை செய்ய நிர்பந்திக்கிறது.
நிலவும் தந்தை வழி குடும்ப அமைப்பில் சாதிய பெருமை பெண் மீது கட்டப்பட்டிருக்கிறது. ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண் சாதி கௌரவம் காப்பாற்றக்கூடியவளாக இருக்க வேண்டும். பழனியின் மனைவியை “பொண்ண எப்படி வளர்த்திருக்கிறா பாரு“ என ஊர் தூற்றுகிறது. இங்கு ஆணின் நோக்கிலேயே நல்லப் பெண் என்பதற்கான இலக்கணங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
காதல் என்கிற தனி மனித இயல்பூக்கத்தை ஒரு ஒழுக்க மதிப்பீடாக உருவாக்கி, அதைப் பாதுகாக்க நமது அரசியல் சாசனங்களுக்கு சவால் விடும் வகையில், ஒவ்வொரு சாதியின் நலனுக்கும் உகந்த சாதிய சட்டங்கள் நமது கிராமங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சாதிப் பஞ்சாயத்துகளின் குரூரத்தை, வன்முறையை, நாகரீகமின்மையை நம் முகத்தில் காறி உமிழ்ந்து காட்டுகிறது பெத்தவன் நாடகம்.
மானுட நலம், சமத்துவம், குடும்ப அறம் என பல முனைகளிலிருந்தும் வாசிப்பதற்கான சாத்தியங்களை இப்படைப்பு தன்னகத்தே கொண்டிருப்பதை இந்நாடகம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது.
பாக்கியமாக நடித்திருக்கும் அருணாஸ்ரீ, பழனியாக சந்தோஷ், பழனியின் மனைவியாக நந்தினி, அம்மா துளசியாக ஜெயலட்சுமி, பாக்கியத்தின் சகோதரியாக சிவசிவமதி ஆகியோர் இந்தப் பாத்திரங்களுக்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்திருக்கின்றனர். இந்நாடகத்திற்கு இருளும் ஒளியும் கலந்து அழகு செய்த பேராசிரியர் ரவீந்திரன், நெறியாள்கை செய்திருக்கும் பேராசிரியர் ராஜு ஆகியோர்களின் உழைப்பு பாராட்டிற்குறியது. காட்சிகளுக்கு இசைத்துயர் கூட்டியிருக்கும் முருகவேல், சண்முகராஜா, வினாயகம், ஆனந்தன் போன்றோரின் பங்களிப்பும் மதிக்கத்தகுந்தது.
பார்வையாளர்களிடம் அழுகையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கலை வெற்றியை எய்திருக்கிறது பெத்தவன். இப்படைப்பின் மூலம் நாம் பெரும் படிப்பினையைக் கொண்டு நம்முடைய கவைக்குதவாத பழைய கெட்டிதட்டிய மதிப்பீடுகளைத் தகர்க்கவேண்டும். சனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் சமத்துவத்திற்குமான புதிய மாற்று மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும். விடுதலை அடைந்த ஓர் உலகென்பது நம் நித்தியக் கனவு. அதுதான் இமையத்தின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கும்.

No comments:
Post a Comment