விடுதலையை
ஆராதிக்கும் கவிதைகள்
கரிகாலன்
மற்றமைகள் அழிக்கப்பட்டு உலகம் ஓர் அரியணைக்குங் கீழ் வந்துகொண்டிருக்கிறது. சனநாயக அரசுகளைக்
காக்க அதன் தலைவர்கள் துப்பாக்கிகளையே பெரிதும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சமூகத்தின் பன்மைத்தன்மையை அழிப்பது , திருவுருக்களை உருவாக்குவது , தரப்படுத்துவது , அதிகாரத்தைக் கட்டமைப்பதற்கு
சிவில் சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவது போன்ற திருப்பணிகள் உலகெங்கும் வெற்றிகரமாக நடந்தேறி வருகிறது. வல்லரசொன்றின் பகுதியாவதற்கு எளிய மனிதர்களை பலிகொடுப்பது தவறில்லை என்பது கார்ப்பரேட்களின் அறமாகி நெடுநாளாகிறது. இத்தகைய நவ உலகில் ஒருவர் கவிதையை விடாப்பிடியாக எழுதிக்கொண்டிருப்பது ஆச்சர்யம்தான். இத்தகு இயக்கத்திற்கு சொந்தக்காரர்தான் ரமேஷ்
பிரேதன் . தொடர்ச்சியான சமரசமற்ற கவிதை இயக்கம் இவருடையது.
‘கோபம் / மதுவை விட மகா போதை … அண்ணல் அம்பேத்கர் உட்பட / இந்தியக் கடவுளர்களின் நிறம் / போதை ‘ என எழுதும் ரமேஷ்
பிரேதன் நவீன தமிழ் இலக்கியப் போக்கில் பெரும் குறுக்கீட்டை நிகழ்த்தியவர். செயலூக்கமற்ற வாசிப்பு எனும் நிலையை மாற்றி பிரதியின் அர்த்த உருவாக்கத்தில் வாசகனைப் பங்கேற்க செய்தது இவரது முக்கியமான சாதனை. உலக அளவிளான அரசியல் தத்துவப் பரிச்சயங்களுடைய இவரது கவிதைகள் அவற்றின் சாரத்தை தம்முள் நிரப்பி வைத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. வடிவம் , மொழி , உள்ளடக்கம் என கவிதையின் கட்டமைப்பில் புதியன முயன்று சொல் புதிதாய் , சுவை புதிதாய் சோதிமிக்க நவகவிதை படைத்த
பாரதியின் தொடர்ச்சியாக அடையாளம்
காணப்படவேண்டியர் ரமேஷ்.
கோபத்தை வெளிப்படுத்த தன்னையே வருத்திக்கொண்ட காந்தியின் உள்ளமும் , இரமேஷ் பிரேதனின் கவிதை உள்ளமும் கலைமனம்
கொண்டவைகள்தாம். எதிர்ப்பைக்காட்டும் முக்கியமான வழிகளுள் கவிதையும் ஒன்று. கவிதை எழுதுதல் தனிமனித செயல்பாடாக இருப்பினும் அது தோற்றுவிக்கும் தாக்கம் அதைச்
சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வைக்கிறது. டி.எஸ்.எலியட்டின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ரமேஷ்
பிரேதன் அவருடைய எதிர்ப்பை , கோபத்தை தன் பண்பட்ட மொழியில் நித்திய மானிட உணர்ச்சியைத் தூண்டும்படி கவிதையாக்கி இச்சமூகத்திற்கு கையளிக்கிறார். இவ்வகையில் இவரது சமீபத்திய
‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ கவிதைத் தொகுப்பை நாம் வாழ நேர்ந்த இக்காலத்தின் ஒரு கவி ஆகிருதியின் மாபெரும் துயரக்குரல் அல்லது சாபத்தின் கலை
வடிவம் என வரையறுக்கலாம். ‘பசிக்கிறது என்ன செய்ய / யாரைத் தொலைபேசியில் அழைக்கலாம்
/ முழுநேர எழுத்தாளன் என்று சொல்வது / தமிழில் எவ்வளவு பெரிய பொய் / முழுநேரப் பிச்சைக்காரன் / எவ்வளவு பெரிய மெய் / மனக்குகையில் சிறுத்தை எழும் / எவ்வளவு வறிய காமெடி ‘ என்று கவிஞர் கூறுவதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஸ்தூல நிலைமை. எழுத்து கொல்லும் என்பார் புதுமைப்பித்தன். எழுத்தாளனின் சுயத்தை அழித்துதான் பிரம்மாண்ட படைப்புகள்
உருக்கொள்கின்றன.ஒரு கவிதையில் கவிஞனின் ஆயுள் கரைந்திருக்கிறது.
காஃப்கா கூறுகிறபடி எழுதுவதென்பதே இயற்கையான வகையில்
வயோதிகத்தை அடைவதுதான்.
ரமேஷ் போன்றவர்களின் கவிதையும் வாழ்வும் இப்படித்தான் இருக்கிறது. வழமையான எழுத்து வகைகளிலிருந்து
வெகுவாக விலகியவை இவரது படைப்புகள்.
‘அமேரிக்க அதிபர் ஏன் என்னை தொந்தரவு செய்கிறார்’ , ‘ தமிழ் காலனியம் ‘ , ‘ புத்தனே எங்களை ஏன் கைவிட்டீர்’ ,’பின்நவீனப் பூனைகள்’ எனக் கவிதைகளின் தலைப்பே இவரது கவிதை வெளி எது என்பதை அடையாளம்
காட்டுகின்றன. ‘ ழான் ழெனேவின் / அரபுக் காதலனுக்கும் அவனது மனைவிக்கும்
/ பிறந்த சிறுவன் / ழெனேவின் முகத்தோடு இருக்கிறான் ‘ , இத்தகைய வரிகள் உலகளாவிய வாசிப்பு அனுபவத்தின் அழகியல் வெளிப்பாடாக ஒரு தமிழ் வாசக மனத்தை சென்றடைவது என்பது வரவேற்கத் தகுந்த அம்சம்.
ஏகாதியபத்திய
எதிர்ப்பு, உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு, மதநிறுவனங்களுக்கான எதிர்ப்பு, தமிழ் தேசிய ஆதரவு எனும் உட்கூறுகள் கொண்ட பேருரு அரசியலையும், அடையாள அழிப்பு, ஒற்றைப் பண்பாட்டுருவாக்கம் போன்ற ஆதிகச் செயல்படுகளுக்கான எதிர்ப்பு, பாலரசியல், உடலைக் கொண்டாடுதால், விளிம்புநிலை ஆதரவு, கடவுளைப் பகடி செய்தல் போன்ற நுண் அரசியலையும் இத்தொகுப்பின் கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கிற எவரும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ‘நாதுராம் கோட்சே / ராஜபக்சே / இருபுள்ளிகளும் / என் நெற்றி நடுவே / தியான மையமாய்த் துலங்க’ எனும் கவிதை வரிகளும் ‘உனது உடம்பு பல்கிப் பெருகுவது / அதைத் தாங்கும் வெளி நான் / நீ பன்மை / நான் ஒற்றை’ எனும் கவிதை வரிகளும் மேற்க்குறிப்பிட்ட இரு அரசியல் பண்புகளை உள்ளடக்கியிருப்பகற்கான எடுத்துகாட்டுகள்
வழக்கமான
கவிவடிவங்களுக்குப் பழகிய மனம் இவர் காட்டும் கவிச்சித்திரங்களைக் கண்டு குழப்பமடைகிறது, அர்த்தங்களைத் தேடுவதில் சலிப்புறுகிறது. ஏனெனில்
, இம்மனம் அதிகாரத்திற்கு இசைவாக கல்வி ,
மத , பண்பாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் , இக்கவிதைகளோ இத்தகு மனதின் சமன்குலைப்பவையாக இருக்கிறது. ‘அவன் புதுச்சேரியில் என் முகவரி தேடி / புலியோடு திரிவதாகச் சொன்னார்கள்’ புலியோடு திரிபவன் என்கிற வழக்கத்திற்கு விரோதமான மிகுபுனைவுச் சித்திரம் தர்க்கத்தை மீறி கவிதையை வழிநடத்துவதாக அமைந்திருக்கிறது.
இதுவொரு கலக உத்தி. இத்தகைய கலக அழகியல் இத்தொகுப்பின் நெடுகிலும் காணக்கிடைக்கிறது.
ரமேஷ் தன் கவிதைகளில் ஆண் / பெண் உடல் வேறுபாட்டை ஏற்ற இறக்கங்களுடன் கட்டமைக்கும் ஆண்மையச் சொல்லாடல்களை கவனமுடன் தவிர்க்கிறார். ஆணின் நலன் சார்ந்த பாலியல் ஒழுக்க மதிப்பீடுகளையெல்லாம் முற்றிலும் தவிர்த்து செயலூக்கமுடைய பெண் உடலை ,
பெண்ணின் பெரும் காமத்தை ஆராதிக்கும் இவரது கவிதைகள் பாலியல் குறித்த மாற்று மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. ‘உனது உடம்பின் பாதியாகி / நான் நின்ற அவலம் போதும் / நீயோ பராசக்தி / நானோ பேடி’ இவ்வாறு புதிய பாலியல் அறங்களை தனது கவிதைகளின் வழி உருவாக்குகிறார். மேலும், பெண்ணின் பாலியல் மையங்களில் தடுமாறும் ஆணுடைய ஒற்றைப் பாலியல் மையத்தின் பலவீனத்தை இக்கவிதையில் நாம் கண்டுணர்கிறோம். பாடு பொருள் , மொழி இவற்றால் ஆணாதிக்கச் சொல்லாடல்களிலிருந்து விலகி இணை பாலியல் (Bisexual) தன்மை கொண்ட மொழியை உருவாக்க கவிஞர் விழைவது முக்கியமானது.
ரமேஷ் கவிதைகள் புதிர் தன்மையும் ஃபான்டசியும் கொண்டவை. நடுக்காட்டில் வழியைத் தொலைத்த ஒருவித மனநெருக்கடியை வழங்குபவை. பாதை தேடும் ஆர்வத்தோடு பயணத்தை தொடர்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டும் வல்லமை படைத்தவை. அது விடுதலை நிறைந்த உலகமாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
வெளியீடு – புது எழுத்து , 2/205, அண்ணா நகர் , காவேரிப்பட்டினம் – 635112
விலை – ரூ.200/-