நவீன தமிழ் கவிதை எனும் பிரயோகத்தை நமக்கு பாரதி தான் வழங்கியதாகக் கொள்ள வேண்டும். அவர்தான் “ சோதிமிக்க நவகவிதை” என்றார். Free verse என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட கட்டற்ற கவிதையை வசனகவிதையாக முயன்றும் பார்த்தார். பிறகு அது மெல்ல மெல்ல புதுக்கவிதை, நவீன கவிதை எனக் காலத்தால் பரிணமிக்கத் தொடங்கியது.
இத்தகைய பரிணாம வளர்ச்சியில் ந. பிச்சமூர்த்தி, பிரேமிள், பசுவய்யா, நகுலன், சி. மணி, ஆத்மாநாம், பிரம்மராஜன், விக்ரமாதித்யன், அப்துல் ரகுமான், புவியரசு, மு. மேத்தா, நா. காமராசன், அக்னிப்புத்திரன், கலாப்ரியா, ஞானக்கூத்தன், த. பழமலய், அறிவுமதி, தேவதேவன், சுகுமாரன், தேவதச்சன், ரமேஷ் - பிரேம் போன்றோர்கள் பாரதியின் வசன கவிதையை நவீனத்துவத்தை நோக்கி விஸ்தரிக்கச் செய்தவர்களில் முக்கிமானவர்கள். இத்தகைய முன்னெடுப்புகள் எழுபதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையில் நடந்தவை
இதில் ஒரு பிரிவினர் வானம்பாடி இயக்கமாகவும் மற்றவர்கள் மணிக்கொடி, கசடதபற,ஃ, கொல்லிப்பாவை, மீட்சி போன்ற சிற்றிதழ்கள் சார்ந்தும் இயங்கினர் என்பதெல்லாம் நாம் நன்கறிந்த செய்திகள். தொண்ணூறுகளுக்குப் பிறகு நவினமயமாக்கல் எனும் செயல்பாடு அரசியல், கல்வி, தொழில்துறை மற்றும் கலைப் பண்பாடு போன்ற துறைகளில் வெகு வேகமாக நிகழ்ந்தேறியது. தொண்ணூறுகள் வரை தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. பெரியாரின் அயராத சமூக நீதிக்கான உழைப்பு, அம்பேத்கர் நூற்றாண்டு அளித்த எழுச்சி ஆகியவற்றின் விளைவாக இந்நிலையில் மாற்றம் நிகழத் தொடங்கியது. உன்னத இலக்கியம், தூய இலக்கியம் போன்ற கருத்துருவாக்கங்கள் முடிவுக்கு வந்தன.
தமிழ்க் கவிதைக்கு நவீனத்துவம் கூடியது இக்காலவெளியில் தான். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றின் விளைவுகள் இலக்கியத்துறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தின.நிறப்பிறிகை இலக்கியக்குழு நிகழ்த்திய பெரியாரியம், மாற்று அரசியல், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் போன்ற உரையாடல்கள் புதிய படைப்பாளிகளின் இலக்கியப் பார்வையை விரிவுபடுத்தியது. இக்காலத்தில் இவர்களுக்கு மொழிபெயர்ப்புகளின் வழியாகக் கிடைத்த மேலைக்கவிதைகள் மற்றும் மேலைத்தத்துவங்கள் இவர்களுடைய கவிதைகளுக்கு புதிய அழகியலை, அரசியலை அளித்தன. அ. மார்க்ஸ், எஸ். வி. ராஜதுரை, பிரம்மராஜன், தமிழவன், நாகார்ஜுனன், ரவிக்குமார் போன்றோர் நிகழ்த்திய பின் நவீனத்துவ உரையாடல்கள் இளங்கவிஞர்கள் மனதில் ஓர் உடைப்பை நிகழ்த்தியது. அவர்களுக்குள் நம் சமூகம் கட்டமைத்திருந்த சாதி, மதம், பால், ஒழுக்கம், குறித்த கருத்துருவாக்கங்களில் மிகப்பெரும் சிதைவையும் ஏற்படுத்தியது. இவ்வகையில் தொண்ணூறுகளின் கவிதைப் போக்கில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களாக மனுஷ்யபுத்ரன், லஷ்மி மணிவண்ணன், இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், யவனிகா ஸ்ரீராம், கரிகாலன், யூமா வாசுகி, இளம்பிறை, உமாமகேஸ்வரி, வெண்ணிலா, என்.டி. ராஜ்குமார், மோகன ரங்கன், ஹெச். ஜி. ரசூல், மகுடேஸ்வரன், ஸ்ரீநேசன், பாலை நிலவன் போன்றோர்களைக் கருதலாம்.
இவர்களது கவிதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிரபுத்துவ பண்பாடுகள் மீதான விமர்சனம், மத அடிப்படை வாதத்திற்கு எதிரான பார்வை, சாதித் தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு, மனித உரிமைகள் குறித்த கரிசனம் போன்ற அரசியல் பார்வைகள் வெளிப்பட்டன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவத்திலும் புதுமைகள் புகுத்தப்பட்டன. புனைவும் கவிதையும் கலந்து மயங்கிய புதுவகைக் கவிதைகள் உருவாகின. அதிகாரத்தை எதிர்த்தல், கலகம் செய்தல், விடுதலையைக் கொண்டாடுதல் போன்ற நவீனத்துவத்தின் உலகளாவிய உள்ளீடுகளை விளங்கிக் கொண்டவர்களாக தமிழ்க்கவிஞர்கள் திகழ்ந்தனர். தலித் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள் இவை இரண்டும் தமிழ்கவிதை உலகுக்கு ஆற்றல் மிகுந்த வளங்களை அளித்ததும் இக்காலப் பகுதியில் தான். தமிழ்ச் சமூகத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சமூகத்தின் வெவ்வேறு இனக்குழுக்களில் இருந்து கவிதைகள் மேலெழும்பி வந்ததும் இதே காலக்கட்டத்தில் தான்.
தொண்ணூறுகளின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை மேலும் புதுமை செய்தவர்களாக மாலதி மைத்ரி, சல்மா, சங்கர ராமசுப்ரமணியன், சுகிர்த ராணி, குட்டி ரேவதி, போன்றோர்களை இனம் காணலாம். குறிப்பாக பெண் கவிஞர்களின் கவிதைகள் இக்காலத்தின் விவாதப் பொருளாயின. ஆண் கவிகள் பெண்களின் உறுப்பு நலன்களை வருணித்து எழுதும் போதெல்லாம் ஏற்படாத விமர்சனங்கள் பெண் கவிகள் தங்கள் உடலின் பெருமைகள் குறித்தும் அதன் விழைவுகள் குறித்தும் எழுதிய போது எழுந்தன. இலக்கியத் தளத்தில் செயல்படும் எல்லோரும் முற்றிலும் விடுதலை அடைந்த மனநிலையை உடையவர்கள் அல்லர். இன்னும் அவர்கள் மதம், சாதி, பால் போன்ற தளைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளுவதற்கான சந்தர்ப்பத்தை நமக்கு பெண் கவிஞர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இலக்கியத் துறையில் அரசியல் ரீதியாக நிகழ்ந்த இம்மாற்றமே தொண்ணூறுகளில் சிறு பத்திரிகைகளின் இயக்கம் தொய்வடைந்ததற்கான காரணமாகக் கருதப்பட வேண்டும். இலக்கியம் வெறும் ரசனை சார்ந்ததாக கருதப்பட்ட நிலை மாறி நவீனத்துவ அரசியலுக்கான ஊடகமாக அது மாறிய நிலையில் பழமைவாதமும் பிற்போக்குத்தனமும் கொண்ட உன்னத இலக்கியவாதிகளால் நிகழ்ந்த மாற்றங்களை விளங்கிக்கொள்ள முடியவில்லை அல்லது அங்கீகரிக்க முன்வரவில்லை. இங்கு சிறுபத்திரிகை என்பது நாம் முன்பே குறிப்பிட்டபடி ஆதிக்க சக்திகளின் பிடியில் இருந்ததால் இலக்கியத்தில் விளிம்பு நிலையினரின் வருகையை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த மறுமலர்ச்சியின் விளைவாக கவிஞர்கள் நேரடியாக தங்களது தொகுப்புகளின் வாயிலாகவே வெளிப்படக்கூடிய சாதகமான மாற்றமும் இக்காலத்தில் நிகழ்ந்தேறியது.
இனி இவ்வுரையாடலின் முக்கிய இலக்கான புத்தாயிரத்தின் தமிழ்க்கவிதை இயக்கத்தை மிகச் சுருக்கமாக அவதானிப்போம். கடந்த பத்து ஆண்டுகளில் கவிதைப் பரப்பில் இயங்கிய கவிஞர்களை காலவரிசையின் அடிப்படையில் (chronological order) நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
i) தொண்ணூறுகளுக்கு முன்பு எழுதியவர்கள் புத்தாயிரத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். இவர்களில் பிரம்மராஜன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, தேவதேவன், த. பழமலய், தேவதச்சன், ரமேஷ் - பிரேம் போன்றோர்களின் பங்களிப்புகள் கவனத்திற்குறியவை. குறிப்பாக காலமாற்றத்தால் ஏற்பட்ட சமூக அரசியல் நிகழ்வுகளை விளங்கிக் கொண்டு தங்களது கவிதைகளை பிரம்மராஜன், தேவதச்சன், ரமேஷ் - பிரேம் போன்றோர்களால் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள முடிந்தது. தொடக்கத்தில் சிறப்பாக வெளிப்பட்ட விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதைகளை தானே நகலெடுக்கும் பணியையே
செய்து வந்தார். கவித்துவத்தின் அமைதியை எட்டிய தேவதேவன் தனது மொழியை புதுப்பிக்கவோ புதிய உள்ளடக்கங்களை தேடவோ முனையவில்லை என்றுதான் கூற வேண்டும். தொண்ணூறுகளில் ஒரு புதிய கவிதைப் போக்கை உருவாக்கிய பழமலய் எவ்வித மாற்றமும் இன்றி அதே பாதையில் புத்தாயிரத்திலும் பயணித்தார்.
ii) தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து எழுதி வந்த மனுஷ்யபுத்ரன், யவனிகா ஸ்ரீராம், கரிகாலன், பாலைநிலவன், லஷ்மி மணிவண்ணன், இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், தபசி, மகுடேசுவரன், என். டி. ராஜ்குமார், ஸ்ரீநேசன், ரவி சுப்ரமணியன், கனிமொழி போன்றோர் புத்தாயிரத்திலும் காத்திரமாக இயங்கி வருகின்றனர். இவர்களது கவிதைகள் இளம்கவிஞர்களது கவித்துவ மனம் மேலும் புதிய திசைகளில் இயங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருந்தன. யவனிகா ஸ்ரீராமின் கலகத்தன்மை மிக்க கவிதைகள் அடங்கிய திருடர்களின் சந்தை. எளிமையும் ஆழமும் மிக்க அன்புக்கான தேடல்களால் நிரம்பிய மனுஷ்யபுத்ரனின் நீராலானது, புனைவும் அரசியலும் நிரம்பிய கரிகாலனின் ஆறாவது நிலம், பொருள் வயின் பிரிவைப் பேசும் ஞானதிரவியத்தின் நிலாப் பேச்சு, அங்கத தொனி நிரம்பிய தபசியின் மயன் சபை மற்றும் குறுவாளால் எழுதுபவன், புதிர்வெளிகளை அடக்கியிருக்கும் பாலைநிலவனின் எரியும் நூலகத்தில் ஒரு பூனை, மாந்தரீகமும் புராதனமும் இணைந்த என். டி. ராஜ்குமாரின் பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம், எதிர்குணம் மிக்க லஷ்மி மணிவண்ணனின் எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், ஆன்மத் தேட்டமுடைய ஸ்ரீநேசனின் காலத்தின் முன் ஒரு செடி போன்ற தொகுப்புகள் இப்புத்தாயிரத்தில் கவனத்தை ஈர்த்தன.
iii) தொண்ணூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் தொடக்கத்திலுமாக தொடர்ந்து எழுதி கவி ஆளுமையாக உருவாகியுள்ள மாலதி மைத்ரி, சங்கர ராமசுப்ரமணியன், சுகிர்தராணி, குட்டி ரேவதி, கண்டராதித்தன், மு. சத்யா, தேவேந்திரபூபதி, காலபைரவன், அய்யப்ப மாதவன், அசதா, போன்றோர்களது கவிதைப் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகள் பெண்ணிய சிந்தனைகளை உள்ளடக்கி கவித்துவ வெளிப்பாட்டில் புதிய அழகியலை அளித்தன. அதே வேளையில் இவர்களது உடலை எழுதுதல் எனும் கவிதைக் கோட்பாடு திட்டமிட்ட கவனம் பெறுவதற்கான முயற்சி எனும் விமர்சனத்தையும் எதிர்கொண்டன. இவ்விமர்சனம் பொருட்படுத்தும் தரத்தை எட்டாமல் ஆணாதிக்க வெளிப்பாட்டின் வெற்றுக் கூச்சலாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. சுகிர்தராணியின் இரவு மிருகம் மற்றும் அவளை மொழிபெயர்த்தல், மாலதி மைத்ரியின் நீரின்றி அமையாது உலகு, சங்கராபரணி, குட்டி ரேவதியின் தொகுப்பான முலைகள் இவையனைத்தும் பெண் மொழி தமிழுக்களித்த கொடையாகக் கருதப்பட வேண்டும். கண்டராதித்தனின் சீத மண்டலம், சங்கரராமசுப்ரமணியத்தின் சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை மற்றும் அச்சம் மரணம் என்னும் இரண்டு நாய்க்குட்டிகள், அசதாவின் பிஷப்புகளின் ராணி, காலபைரவனின் ஆதிராவின் அம்மாவை நான் ஏன்தான் காதலித்தேனோ போன்ற தொகுப்புகள் இப்புத்தாயிரத்தின் நவீன வாசனையை நுகரும் தனித்தன்மையும் தீவிரமும் கொண்டவை. இவர்களில் சங்கரராமசுப்ரமணியன், கண்டராதித்தன் போன்றோரின் இலக்கிய இயக்கம், கவித்துவ மனோநிலை, மொழி, வடிவம் இவற்றில் பரிசோதனை முயற்சி போன்ற அனைத்தும் மதிக்கத்தக்கவை.
iv) புத்தாயிரத்தில் அறிமுகமாகி தொடர்ந்து எழுதிச் செழித்திருப்பவர்களாக பழநிவேள், முகுந் நாகராஜ், ராணி திலக், பிரான்சிஸ் கிருபா, கடற்கரய், செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன், தமிழச்சி, தேன்மொழி, லீனா மணிமேகலை, கவிதா, சுதீர் செந்தில், இரத்தின புகழேந்தி, சக்தி ஜோதி, தென்றல் போன்றோர்களை அடையாளம் காணலாம். இவர்களைத் தொடர்ந்து சிறந்த கவி ஆளுமைகளாக உருவாகக் கூடியவர்கள் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துபவர்களாக நரன், திருச்செந்தாழை, லஷ்மி சரவணகுமார், இன்பா சுப்ரமணியன், கருத்தடையான், வெய்யில், கணேசகுமாரன், ஜீவன் பென்னி, வா. மணிகண்டன், முத்துவேல், லிபி ஆரண்யா, ஸ்ரீசங்கர், ஆதிரன், செந்தீ, மாதவன், ஹரிக்கிருஷ்ணா, ஊர்சுலா ராகவ், அமிர்தராசு, விவேக் போன்றோர்கள் இயங்கி வருகின்றனர். பிரான்சிஸ் கிருபாவின் வலியொடு முறியும் மின்னல், ராணி திலக்கின் காகத்தின் சொற்கள் மற்றும் விதி என்பது இலைதான், பழனிவேளின் தவளை வீடு, செல்மாவின் தெய்வத்தை புசித்தல், இசையின் உறுமீன்களற்ற நதி, இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை, முகுந் நாகராஜின் அகி, தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல், கவிதாவின் சந்தியாவின் முத்தம், தாரா கணேசனின் ருது வனம், தேவேந்திர பூபதியின் அந்தர மீன், ஜீவன் பென்னியின் நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்கிறது, தமிழச்சியின் வனப்பேச்சி, தேன்மொழியின் துறவி நண்டு, இரத்தின புகழேந்தியின் நகர்க் குருவி, வெய்யிலின் புவன இசை, வா. மணிகண்டனின் கண்ணாடியில் நகரும் வெயில், சுதீர் செந்திலின் உயிரில் கசியும் மரணம், தென்றலின் நீல இறகு, சக்தி ஜோதியின் நிலம் புகு சொற்கள், கணேசகுமாரனின் நீர் முனி என கவிதைப் பெருவெள்ளம் இப்புத்தாயிரத்தில் பெருக்கெடுத்திருக்கிறது. பிரான்சிஸ் கிருபா, பழநிவேள், ராணிதிலக்,செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன், முகுந் நாகராஜ், வெய்யில், நரன் இவர்களுடைய கவிக்குரல்கள் விசேஷத் தன்மை படைத்தவை. தங்களது முன்னோர்களின் கவி வீச்சை கடந்து செல்லவேண்டும் என்கிற ஆர்வமும், தவிப்பும் இவர்களிடம் தென்படுவதை அவதானிக்க முடிகிறது. நவீன தமிழ்க் கவிதையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எத்தனிக்கும் இவர்களது ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியது. புத்தாயிரத்தில் கவிதைகள் உதிரிகளின் வசம் சென்றன. உதிரிகளின் சொல்லாடல்கள் மது, இரத்தம், சாத்தான், வேசி, துரோகம், சர்ப்பம், மயானம், கொலை, களவு என்பதாய் நீ்ண்டன. வன்முறை, மூர்கம் நிறைந்த உலகு அன்பைப் படிப்படியாக காவு கொண்டது. பொட்டலம் மடிப்பவர்கள் முதல் கார்ப்பரேட் ஆட்கள் வரை கவிதை எழுதத் தொடங்கியது இக்காலத்தின் கொடை. திராவிடம், மார்க்சியம் எல்லாம் கைவிட்ட புதிய தலைமுறை இது.
இப்படி புத்தாயிரத்தின் கவிஞர்களையும் கவிதைகளையும் அடையாளம் கண்டு நினைவு கூறும் வேளையில் கவிதை வளர்ச்சிக்கான தமிழ் இலக்கியச் சூழல் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியது அவசியம். தமிழில் கவிதை வளர்ந்த அளவிற்கு கவிதைக்கான விமர்சனத்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. கவிதைகளைப் பற்றிய அறிவார்த்தமான உரையாடல்கள் பிரம்மராஜனிடம் மட்டுமே வெளிப்பட்டது. சுந்தரராமசாமி, நிகழ், ஞானி போன்றோர்கள் உரைநடை இலக்கியம் குறித்து எழுதிய அளவிற்கு கவிதை பற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டவில்லை. கவிதையில் நிகழும் தர்க்கக் குலைவும் இதற்கு காரணமாக இருக்கலாம். மரபு வழிப்பட்ட விமர்சன மனதால் கவிதையில் நிகழக்கூடிய அதர்க்கத்தை, இருண்மையை, ஒழுங்கின்மையை அணுகுவதில் ஏற்பட்ட சிக்கலாகக் கூட இதைப் பார்க்கலாம். பின் நவீனத் துணைகொண்டு தமிழவன் கவிதைகளில் செயல்படும் நீ / நான் எதிர்வுகளை ஆய்வு செய்ததையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது. விளிம்புநிலைப் பார்வையிலிருந்து கவிதைகளை அணுகிய இந்திரனின் அபிப்ராயங்களும் குறிப்பிடக்கூடியது. அவ்வப்போது கவிதைத் தொகுப்புகளை குறித்து எழுதி வந்திருக்கும் முருகேசபாண்டியனும் நினைவில் கொள்ளவேண்டியவர். விக்ரமாதித்யன், ராஜமார்த்தாண்டன் போன்றோர் கவிதைகளைப் பற்றி விரிவாக எழுதி உள்ளனர் என்ற போதும் அவர்கள் தமிழ் மரபின் தொடர்ச்சியை விளங்கிக் கொண்ட அளவிற்கு நவீனத்துவத்தை புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தவில்லை. இவர்களுடைய விமர்சன முறை முற்றிலும் ரசனை சார்ந்ததாகவும், கவிதையின் அர்த்தம் சார்ந்ததாகவும் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. இலக்கியத் துறையின் சகலகலா வல்லவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஜெயமோகன் அவ்வப்போது எவ்வித காரணங்களையும் கூறி நிறுவாமல் கவிஞர்களைத் தரவரிசைப்படுத்தி தனது கோமாளித்தனத்தை வெளிப்படுத்தினார்.
கவிதைகளுக்கான களம் உலகமயமாக்கல் சூழலிலும் முன்பு விவாதித்த அரசியல் காரணத்தின் அடிப்படையிலும் சுருங்கிய போது தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து போன்ற இதழ்களே இலக்கியப் புலத்தில் எஞ்சி நின்றன. இதில் தீராநதி வணிகப் பின்னனி கொண்ட நிறுவனத்திலிருந்து வந்த போதும் கூட எவ்வித விருப்பு வெறுப்புமின்றி எல்லாநிலைப் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் சனநாயகத் தன்மையோடு இயங்கி வருகிறது. அதே வேளையில் சிற்றிதழ் அடையாளத்தோடு வெளிப்படும் காலச்சுவடு, உயிர்மை போன்ற இதழ்கள் தமது பக்கங்களை தங்களுடைய நிலையக் கலைஞர்களைக் கொண்டே நிரப்பிக் கொண்டன. படிப்படியாக இவ்விதழ்கள் தங்களது பதிப்பகங்களை Promote செய்து கொள்ளும் விளம்பர ஊடகங்களாக திசை மாறின. இவ்வரிசையிலிருந்து விலகி உயிரெழுத்து நிறைய இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. சமீப காலமாக மனுஷ்யபுத்ரன் தனது உயிர்மை இதழின் பல பக்கங்களை தனது கவிதைகளால் தொடர்ந்த நிரப்பி வருவது இலக்கிய ஆர்வலர்களின் முகச்சுளிப்பிற்கு உள்ளானதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காலச்சுவடில் கலையும், வர்த்தகமும் பழகிய அவரிடம் ஆரம்பகால மனுஷ்யபுத்ரனை எதிர்பார்ப்பது தவறுதான். வேறு வழியில்லாமல் உயிர்மையை வாங்குபவர்கள் அந்தப் பக்கங்களை அலட்சியமாக கடந்து போவதாகக் கூறினார்கள். அது அவர் கவிதையின் மீது ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அன்று. ஒரு இதழ் ஆசிரியர் மீதான கோபத்தின் விளைவு தான் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிட வேண்டியுள்ளது என்றால் தமிழில் கவிதை எழுதுவதற்கு போதுமான அளவில் பத்திரிகைகள் இல்லை. கவிதைகளைப் பிரசுரிக்க பதிப்பகங்கள் தயக்கம் காட்டும் நிலை உள்ளது. தங்கள் கவிதைகள் குறித்து விமர்சகர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியாத சூழல் இருக்கிறது. இப்படி கவிதை எழுதுவதற்கு சாதகமான காரணிகள் எதுவும் இல்லாத போதும் தமிழில் சுமார் ஐந்நூறு பேராவது கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். நூறு பேராவது அறியப்படும் கவிஞர்களாக இருக்கிறார்கள். ஆகச் சிறப்பாக கவிதை எழுதக்கூடிய ஐம்பது பெயரைக் கூற முடியும். மரபுக் கவிதை தேய்ந்து புதுக்கவிதை தோன்றிய போது பரவலாக இது நீடிக்காது என்கிற முணுமுணுப்பைக் கேட்க முடிந்தது. ஆனால் நம் செம்மொழிக்கு அந்த மோசமான நிலை ஏற்படவில்லை. புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளை மீளாய்வு செய்தோமெனில் நம் கவிதைக் கலை செழித்து வளர்ந்திருப்பதை அறியமுடிகிறது.
இன்று கவிதைக்கலை தகவல் தொழில்நுட்பத்தோடு பின்னிப் பிணைந்து விட்டது. இளம் கவிஞர்களுக்கு இணைய வாசிப்பு சாத்தியமாகியிருப்பதால் அவர்களுக்குள் கவிதை குறித்த பிரக்ஞை தீவிரமடைந்துள்ளது. Face book, Twitter போன்ற சமூக வலைத்தளங்களால் எல்லைகளைக் கடந்து கவிஞர்கள் இணையும் சூழல் உருவாகியுள்ளது. இது தயக்கமற்ற உரையாடல்களை ஊக்குவிக்கவும் செய்கிறது. சிறு பத்திரிகைகள் அருகி வரும் நிலையில் இளங்கவிஞர்கள் தம் கவிதை வெளிப்பாட்டிற்கு தாமே வலைப்பூக்களை உருவாக்கி எழுதிவருவதையும் காண்கிறோம். அலைபேசியில் கவிதைகளைப் பரிமாறிக் கொள்ளும் போக்கும் நிலவுகிறது. கவிதை விமர்சகர் இடம் காலியாக இருப்பதால் சக கவியே அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளவேண்டிய சூழலும் உள்ளது. மிக ஆரோக்கியமான செயதி என்னவென்றால் இன்றைய இளம் கவிஞர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு போற்றத்தகுந்தது. கடந்த ஆண்டில் அவர்கள் ஓர் இயக்கமாக இணைந்து ஈழ விடியலுக்காக போராடியது தமிழ்ச் சூழலில் மிகுந்த நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்றது.
ஆதிக்க சாதியினரிடமிருந்த கவிதைக் கலை சமூக அரசியல் மாற்றத்தால் பிற்படுத்தப்பட்டோரிடம், சிறுபான்மையோரிடம், தலித்துக்களிடம், பெண்களிடம் வந்த நிலை இன்னும் மேன்மையடைந்து புத்தாயிரத்தில் உதிரிகளிடம் கவிதை வசப்பட்டிருக்கிறது. திருநங்கைகளிடம், வேசிகளிடம், திருடர்களிடம் இன்னும் குற்றச்செயல் புரிபவர்களிடம் கூட கவிதை நெருங்கும் காலம் கனிகிறது. புத்தாயிரத்தின் வரும் ஆண்டுகள் அதை சாத்தியமாக்கி நம் வாழ்க்கையின் இருள் பகுதிகளை வெளிக்கொண்டு வரும் அப்போது மானுடம் மேலும் ஓளி பெறக்கூடும்.
No comments:
Post a Comment